Saturday, August 8, 2009

நீ சிரிக்கையில் நடக்கும் திருவிழாக்களில்...

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

-பிரமிள்.
நீ
சிரிக்கையில் நடக்கும்
திருவிழாக்களில் நான்
வழி தப்பும்
குழந்தையாகிறேன்.

-கலாப்ரியா.
காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.

-தேவதச்சன்.
வற்றிபோவதானாலும்
எனக்கு
என் ஓடையே போதும்
உன் கண்ணாடித்
தொட்டியில்
நீயே இரு.

-இரா.பச்சியப்பன்.
"உனக்குப் பிறகான நாட்களில்"


அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்....
அம்மா
என்றேன் உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்

நீ....என்று!

-தாஜ். நாற்சந்தி நிறுத்தங்கள்
மேம்பாலங்களில் மறைந்தன
போக்குவரத்து லேசானது
செய்தித்தாள் விற்கும் சிறுவன்
சில்லறை சேகரிக்கும் சிறுமி
வாழ்க்கை கனமானது.

-எம்.ஏ.அப்துல் ரஹீம். தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

-கல்யாண்ஜி. ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்குநோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்கமுடிந்ததா?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வுஅறை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தேன்.

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய்க் காய்த்து
இருட்டில் செய்வதறியாது
கத்திக் கொண்டிருந்தது.

ஒரு நண்பனைப் போல்
சூர்யன் என்னைத் தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய்ப் பரவ
மெய்சிலித்து நின்றது அந்த மரம்.

.-தேவதேவன். எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னை பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழை பற்றி எழுதுவது சுகமா?

-வெண்ணிலா.

2 comments:

  1. வற்றிபோவதானாலும்
    எனக்கு
    என் ஓடையே போதும்
    உன் கண்ணாடித்
    தொட்டியில்
    நீயே இரு.
    கவிஞர் பச்சியப்பனின் உனக்குப் பிறகான நாட்களில் என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை இது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.திருத்தப்பட்டுவிட்டது .

      Delete