Sunday, August 23, 2009

இருக்க நீர்வீழ்ச்சி நிமிரக்கடல் நீ..

மௌனமாய்ப் பிரிந்து செல்லல்...
விதி அதுவானால்,
கையைமீறியதென
நாம், பிரிந்துசெல்லலாம்.
ஆனால்
உனதுமௌனத்தில் புதைந்த உண்மைகள்
என்றைக்குமாய்க்
குழப்பத்தில் எனை ஆழ்த்தப்
பிரிந்துசென்றாய்;
இதுதான்,
சகிக்க முடியாதது!

-அறியப்படாதவர்கள் நினைவாக...!
அ. யேசுராசா

என்னவென்று
அடையாளப்படுத்த?

காலை
காலெறிந்து நடக்க
தளிர் நழுவி சிந்துகின்ற பனி

தொடரத்
தழுவி வழிகின்ற வெய்யில்

தழையக்கட்டிச் சிரிக்கையில்
தர்ப்பூசணி

குளிர்ந்து முத்தமிடத்
தென்னம் பாளையில் ஊறுகின்ற
கள்

கோபத்தில் தகிக்க
மலையிலிருந்து விழுகின்ற
சிறு கல்

இருக்க நீர்வீழ்ச்சி
நிமிரக்கடல்
நீ.
ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை
-செழியன்

பிரிவிற்கு பாலையென்று
திணை வகுத்தவன்
உண்மையில்
பேரறிஞனாய் இருக்க வேண்டும்

நீ இல்லாத போது
எனக்கு எந்த இடமும்
பாலையாகத் தான் தோன்றுகிறது

உள்ளும் புறமும்
வெப்பக்காற்றாய் சுழலும்
உன் நினைவுகள்

கண்களில் விழுந்த மணலாய்
உள்ளத்தில் உறுத்தலாய்
உன் உருவம்

அவ்வப்போது கானலாய்
தோன்றி மறையும்
உன் புன்னகை

எங்கேனும் உன்னைச்
சந்திக்க நேரும்போது
உதடுகள் உலர்ந்து...
நா வறண்டு..
வார்த்தைகளுக்காய் தவிக்கையில்...

நிச்சயமாய்த் தோன்றுகிறது
பாலை இத்தனை கொடுமையாய்
இருக்காது என்று!
- காயத்ரி.
உன்னிடம் பேசிவிட
எப்படியெல்லாம்
பிரயத்தனப்பட்டிருக்கிறேன் என்றும்,
ஒருமுறை பேச,
எத்தனை ஒத்திகையெல்லாம்
செய்திருக்கிறேன் என்றும்
உனக்கென்ன தெரியும்?

நேற்றைய எதேச்சையான சந்திப்பில்,
வெகு இயல்பாகப் பேசிவிட்டு
போய்விட்டாய்.
இனியென்ன செய்வது எனதிந்த
ஒத்திகை வார்த்தைகளை?
நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன
- நகுலன்
எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது.
-பழனிபாரதி.
நீ மேல் உதடு
நான் கீழ் உதடு
நாம் மௌனமாகவே
பேசிக்கொள்வோம்

-இரமேஷ் விஸ்வநாதன்.
அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழி தான்.
-அறிவுமதி.
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூஎன் காதல்.
நீ நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?
- பழனிபாரதி.
உன் முன்னால்
நானொரு
பிச்சைப் பாத்திரம்

படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்

காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள்.
-அப்துல் ரகுமான்.

No comments:

Post a Comment