Tuesday, September 20, 2011

கொல்லும் வெயிலிலும்

மழையில போன உளுந்து தப்பு விதையா
பொழச்சிக்கிடக்காம்
போன வருசம் வாங்கின கருப்பு மாடு
கன்னுப்போட்டுருக்காம்
அஞ்சுக்கும் பத்துக்குமா அலைஞ்சிட்டு கிடந்தவகன்னு
ஏலாதி பேச்சும் நிறஞ்சுக்கிடக்காம்

இந்த மாசம் அனுப்புற பணத்தில
முல்லையம்பாளுக்கு ஒரு விளக்கும்
முனீஸ்வரனுக்கு ஒரு படையலும் போடசொல்வாளாம்
பக்கத்து வீட்டுப்பாட்டி

போன வாரம் வேளாங்கண்ணி நடந்து போனதை
அம்மா ஐநூறு தடவையா சொல்லிட்டு இருக்கா
வீட்டு வேலை முடியட்டும்டா
அடுத்த வாரமே ஊரை மொத்தமாக்கூட்டி
விருந்து வச்சிடுறேன்
இந்தவாட்டி அனுப்புற பணம் கொஞ்சம் அதிகமா
இருக்கட்டும் என்கிறாள்
ஒட்டகங்கள் அசைந்து மெல்ல
நடக்கின்றன கொல்லும் வெயிலிலும்


-கென்.

கனவுக்குள் அசையும் உடல் மொழி

மந்தமாக பெய்யும் மழைக்குள்
வெயில் கீற்று
வயலின் ஒலியாக ஊடுருவும்போது
மறுபடியும் நாம்
காதலைச் சொல்லிக் கொள்கிறோம்

முற்றிய வசந்தம்
முழு அழகையும் வெளிப்படுத்தும் மலைத்தொடரில்
இரண்டு பேரருவிகள் பாய்கின்றன

மண் ருசி …
மண் மணம் … பாய்ந்த உடல்
ஒவ்வொரு சந்திப்புகளிலும்
புது நிலமாகி விளைகின்றது

வார்த்தைகள் எதுவுமில்லை …
ஆனால் நீ கதையொன்று சொல் என்கிறாய்
பன்மடங்கு காதலில் குழைகின்ற கண்களிடம்

வானவர்கள் நமக்காக கூடியுள்ளனர்

உடல்மொழியில்
காட்டுப்புறாவின் கூவல் ஒலிக்கின்றது

கனவுகளை காய்த்து நிற்கின்ற
மா … மரம் நீயென்றால்
நான் உன் கனவிற்குள் சிரித்து
குலுங்கிக் கொண்டிருக்கும்
கொன்றைப் பூ மரமா …

-அனார்.

வாழ்ந்து முடிந்த கதை

புரிந்து கொள்ள முடியாததின் மீது
உயிர் உறைவதும் கரைவதுமாய்
ஒடுங்கி ஒடுங்கி நீள மறுக்கிறது மனது

மிக மிக இரகசியமான எனது
உணர்வுகளின் மீது
சுவாரசியமான நிறங்கள்
தோன்றுவதும் மறைவதுமாய்
கழிகிறது பொழுது

எப்படி இருக்கிறாய்?
இப்படி ஆரம்பிப்பதில் கூட
சிக்கல்கள் இருக்கிறதெனக்கு…

மகிழ்வதும் துயருறுவதுமாய்
தெருவோரத்திலிருக்கும்
இலைகளற்ற மரங்களை
நினைவு கொள்ளச் செய்கிறது வாழ்வு

மழை பெய்து ஓய்ந்த
ஒரு நடு இரவில்
அவாவித் தழுவி
நிராகரித்து நிமிர்ந்து
எழ முடியாது
புணர்வாய் கிழிந்து
புலர்கிறது காலை

சில வருடங்களுக்கு
முன்பான காலங்களில் நீ…
எந்தப் புள்ளியில் விட்டுப் போனாயோ
வாழ்ந்த அதே புள்ளிலேயே
கொண்டுவந்து விடுகிறது சமூகம்.


-தில்லை.

கவிதை இறகு - புரட்டாசி

தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன

கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக்குப்பிகள்

மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்டது போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.


-ஆதிநாதன்.