Thursday, January 20, 2011

கவிதை இறகு -தை

முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள்

செய்யக்கூடாத பாவத்தைச்
செய்ததுபோல் காணப்படுவார்கள்

ஒரு நாளென்பது
ஒரு நாளாக அல்லாமல்
வேலாக அவர்களின் விலாஎலும்பைக்
குத்திக்குடையும்

இஸ்திரி இடப்படாத
அவர்களின் சட்டை சுருக்கங்கள்
அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக்
கொண்டுதரும்

தன் சகாக்களின் முன்பாக
உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத்தயங்கித்
தாமதமாக உண்பார்கள்
சமயத்தில் பட்டினியும் கிடப்பார்கள்

இயல்பான தம் பேச்சுகளை
ஏகடியம் செய்வார்களென்று
வெறுமனே தலையை மட்டும் ஆட்டுவார்கள்

தேர்வைவிடவும்
தேர்வுக்கட்டணத்திற்காக கவலைப்படுவார்கள்

அவர்கள் படிக்க வந்ததை மறந்து
நடிக்கத் தொடங்குவார்கள்

ஆசையிருந்தும்
அழகிய பெண்களை/ஆண்களை
ஆழ்ந்து ரசிக்கத் தயங்குவார்கள்

முடிவாய்ச் சொல்வதெனில்,
முதல் தலைமுறையில்
கல்லூரிக்குள் நுழைபவர்கள்
தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து
அழுதுகொண்டிருப்பார்கள்

-யுகபாரதி.