Sunday, September 20, 2009

ஆறாத கதிரொளி

நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
-கல்யாண்ஜி கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!
- ப்ரியன். அடுத்த இளம்பனிக்காலத்தில்
கட்டிடங்கள் கொண்டுவிடும்
பழம்பெரும் வறண்ட குளம்

பெருநகர் கூளங்களும்
மண்ணும் சரளையுமென
கொட்டி நிரம்புகிறது

போக்கிடமற்று ஒழிந்துபோகலாம்
கொக்கும் நாரைகளும்

சுவரிடுக்குகளில் வாழ
புறாக்களிடமும்
எச்சில்களை ஜீரணிக்க
காக்கைகளிடமும்
கற்றுக் கொள்ளட்டும்
சீக்கிரமே அவை
மனிதரைப் போல...
-வி.அமலன் ஸ்டேன்லி
கடையேழு வள்ளல்கள்
கண் மூடாது இருந்திருந்தால்
நன் கொடை ரசீதுகள் கண்டே
ஓட்டாண்டிகளாகி இருப்பார்கள்!
-தரணி.
பழகிய அறையில்
இருள்
பழகிவிட்டிருக்கிறது.
பழகாத அறையில்
இருள்
பார்க்க
மிகக் கருப்பாக இருக்கிறது.
-ச.முத்துவேல்
நான் உன்னிடம்
பேசியதை விட
நீ என்னிடம்
பேசியதை விட
நம்மைப்பற்றி
அதிகமாய் பேசுகிறது ஊர்.
-திருவைக்குமரன்.
அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
-சுகுமாரன்
வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்
-ஷண்முக சுப்பையா.
கடல் மீது ஒரு பறவை
தனது பழைய தீவைத் தேடிச்செல்கிறது
தீவு இதுவரை அறிந்திராத
புதிய தானியத்தை விதைக்க
அலகில் முற்றிய கதிரோடு
மண்வாசனையை ஞாபகம்கொண்டு

பறவைக்கும் தீவுக்குமிடையே
ஆறாத கதிரொளி
-மாலதி மைத்ரி.


இன்றைகில்லையெனில்
நாளை
நாளையில்லையெனில்
இன்னுமொரு நாள்
இப்படித்தான் தெரியும்
வாழ்வை
நினைவு தெரிந்த நாளிலிருந்து.
-சல்மா.

Sunday, September 13, 2009

கவிதை இறகு-புரட்டாசி


வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
" கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு "
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன்.


"எதுக்குத்தா .. இதுல என்ன போட்டிருக்காக? "
"நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன்னு
போட்டிருக்காங்க "
"ஆமா .. அதாம் நமக்குப் படியளக்கப் போவுது..
கோட்டையில பொண்ணுபொறந்தாலும்
போட்ட புள்ளி தப்பாதுனு
எங்கிட்டுப் போயி இழுபடப் போவுதோ ..
அங்கிட்டு வீசிட்டு
ஆவுற சோலியப் பாப்பியளா "
கொல்லையிலிருந்து
முள் நறுக்கிக்கொண்டு
கத்தும் அம்மா

" நீ கையெழுத்துப் போட்டா நேரமாயிரும்
மை தடவுறேன் ... ரேக வையுப்பா "
" நான் என்ன கையெழுத்துப் போடத் தெரியாதவனா ?
கையெழுத்துப் போட்டுத்தான் ஓட்டுகூட போட்டேன் "
பேனா பதிப்பார், கலப்பை போல் அழுத்தி...
அட்டை கிழிந்து அடி வாங்கும் பயத்தில்
துடிக்கும் மனசு

உச்சி வெயிலில் " பட்" டென வெடிக்கும்
உளுத்தம் நெத்தாய்
"சடக்" கென முகம் நிமிர்த்தி
சந்தேகம் கேட்பார்
"வழிவிட்டான் மவன் சன்னாசின்னுதானத்தா
போடணும் ? "
" வ போட்டு புள்ளி வச்சு
ஒம் பேர எழுதுப்பா நேரமாவுது "

" அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து
எம்பேர எழுதுத்தா
பாத்து பாத்து வெரசா எழுதிர்றேன் "
மாடொன்றைத்
தவறவிட்டு வந்து
பண்ணையார் முன் நிற்கும்
மேய்ப்பவராய்த்
தாழும் அவர் குரல்

" இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்
ரேகை வையுன்னு "
எழுதி வைக்கும் பெயரைப்
பாத்து பாத்து எழுதிக் கொண்டிருக்கும் போது
போதாமல் போய்விடும் இடம்
" அடுத்த கோட்டுல மடிச்சி எழுதவா "
அழுகை வந்துவிடும் எனக்கு

" அடுத்த பரிச்சைக்கித்தான்
அங்க எழுதணும் "
அட்டையைப் பறித்துக் கொண்டு
அவர் பெயரில் குறையும்
ஓரெழுத்தையோ .. ரெண்டெழுத்தையோ
மதகில் அமர்ந்து நானே எழுதி
"போன தடவை மாதிரி
எல்லார்கிட்டயும் காட்டி
சொல்லிச் சிரிக்காம இருக்கணுமே
சுப்ரமணிய சாரு "
கவலையோடு நுழைவேன் வகுப்பிற்குள்.

-கவிதாயினி இளம்பிறை.

அறியாச் சிறுமியாய் அணைத்துக்கொள்...

அம்மாவுக்கு கவிதையெல்லாம் சும்மா
அடுக்களை இருட்டுள்
அம்மாவின் சூரியன் சுருங்கிப் போச்சு
தன் வீடு, கணவன், குழந்தை
சமையல், புடவை
இவையன்றி வேறேதும்
அறிவாயோ அம்மா சொல்.

உன் கனவுகளின் சருகுகள்தான்
உனக்கு காலடிப் பாதையோ ?
அம்மாவுக்கு தனியாய் ஏதும் இல்லை;

இருப்பினும் அம்மா எல்லாமும் ஆவாள்.
அம்மாவின்
மெட்டிக் கால் தடங்கள்
தரையிலும், மனதின் கரையிலும்
அம்மா நீ
வரைந்த சித்திரங்கள்
காற்று வெளியிலும்
என் கனவு வழியிலும்

மனத்தெளிவில்
முக்கிப் பார்த்தால்
சாயம் வெளுத்து
பல் இளிக்கும் சொந்தங்கள்
புன்னகைச் சருகுகள்
போர்த்த புதைகுழிகள்
பாதை எங்கும்.
என் கற்பனையின்
சவங்கள் நாறும்
கவிதை நோட்டில்.

புத்தக வார்த்தையாய்ப் போச்சு
பிரியமும், நேசமும்.
எனவே அம்மா நீ
மறுபடி தொட்டிலிடு
உன் மடியில்.
எனக்காக
அறியாச் சிறுமியாய்
அணைத்துக்கொள் என்னை!
-உமா மகேஸ்வரி.

Saturday, September 12, 2009

ஒரு துண்டு வானம்

தேவதைகளை சந்தித்ததில்லை
என்று பொய் சொல்ல விரும்பவில்லை
வந்திருக்கிறார்கள்
வந்து வெறுமனே
வணக்கம் சொல்லிப் போய்விடுவார்கள்
- மு.மேத்தா.
செவலையெனும் சித்தப்பா!

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.
- சிவராஜ்.
எரியாமல் இருப்பதால்
எனக்குள் நெருப்பில்லை
என்றா நினைகிறாய்?

-தமிழ் பரிதி.
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
அபயம் அபயம் என்றாலும்

நழுவி பின்னால் சென்று ஒரு
வார்த்தை மாற்றம் செய்திடுமோ?
அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
-உமர் கய்யாம்
ருபாயத்
எறிந்ததென்னவோ
ஒரு கல்தான்.
அதுவும் ஒரே முறைதான்.
தரை தொட்டுவிட்டதா
தெரியவில்லை.

அது கிளப்பிய
வட்ட வட்ட அலைகள்
விரிந்துகொண்டேயிருக்கிறது

-ச.முத்துவேல்
சலனமற்று இருத்தலின் பொழுது
ஒரிரு இலையசைவு
அணிலுக்கும் ஓணாணுக்குமானது.

ஆடலாயும்,
குரங்குகள் மீதேறித் தாவ‌
சில கிளைகளினசைவாயும்,
இருக்கும் அனைத்தும் சுழன்றாட
ஒத்திசைத்தே தென்றலாயும்,
விட்டு விட்டு வெறும்
அதிர்வையும் சப்தத்துடன்
எதிர்கொண்டு
குலுங்கிக் குலுங்கித் தவிக்கையில்
மனிதனால்
வெட்டப்படுவதாயும்
நிற்கிறது மரம்.
- க்ருஷாங்கினி.
ஒரு இரவைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்
-ஸ்ரீநேசன்.
ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்
-பாலைநிலவன்.
மலர்கள் தவிர்த்து
நதியிடம் எந்த உரிமையும் இல்லை
ஒரு பட்டாம் பூச்சிக்கு...

மீன் கொத்திக்கன்றி
பட்டாம்பூச்சிக்குத் தருவதற்கு
எதுவுமில்லை நதிக்கும்...

சுழித்தோடும் கண்ணாடியில்
மௌனம் பார்த்துக் கொள்ளும்
பட்டாம் பூச்சிக்கு
அப்படியென்ன சந்தோசம் இருந்துவிடக்கூடும் ...

நதிக்கும்
பட்டம் பூச்சிக்குமான உறவில்
நமக்கென்ன வேலை...
- கவிதா பாரதி

சிறுமியின் பிரார்த்தனை

வளர்ப்பு நாயின் சுகவீனத்தால்
கவலை கொள்ளும்
சிறுமியின் பிரார்த்தனை
கடவுளுடைய இருப்பிற்கான
பரிசோதனையாய் மாறுகிறது...

நாயின் மரணம் சம்பவித்தவேளையில்
உருளும் கண்ணீர் துளியில்
தோல்வியை ஒப்புக்கொண்டபடி கரைகிறது
சிறுமியின் மனதிலிருந்து
கடவுளெனும் கற்பிதம்
- கரிகாலன்.
ஆறாவது நிலம்
.அந்தச் சின்னக் கல்லை மெதுவாக,
உதைத்து உதைத்து முன்னேற்றி,
தன்கூடவே பள்ளி வரை
அழைத்துக் கொண்டு போகும் காரியத்தில்
கவனமாக இருந்தவள்,
எதிரே வந்த தெரு நாயைக்
கொஞ்சம் தாமதமாகத்தான்
கண்டு கொண்டாள்.


அமைதியான அந்த நாய்க்குப்
பயந்து விலகியபோது,
சின்னக் கன்றுக்குட்டி ஒன்று
பின்னாலிருந்து ஒடி வந்து,
அவளைச் சற்றே உரசிச் சென்றது
கூட்டிக் கொண்டு வந்த கல்லை
அப்படியே விட்டுவிட்டு
விரைந்து நடந்தாள்


முகத்தில் ஆர்வம் பொங்க
இந்தச் சம்பவத்தைத் தன்
தோழிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல
அவளுக்கு ஒரு பீரியடு போதுமோ,
இரண்டு பீரியடு ஆகுமோ.
-முகுந்த் நாகராஜன்.
அருகே வரும் வரை
பின்னாலிருந்து
தாண்டும் வரை
காலடியில்

தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்

திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலிசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளிரென மீளும் போது
தன்னிச்சையாய் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோஷ வெளிச்சம்
காணாமலாக்கும்
கவலையின் நிழல்களை...
- கலாப்ரியா.
வீதி விளக்குகள்.

குழந்தை என்னிடம் கேட்டது
மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
இல்லை என்றேன் நான்
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்
சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்
காலை நேரத்துக் கல்லறையைப் போல
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்
குழந்தை மறுபடியும் கேட்டது
உனக்கு எப்படித் தெரியும் அது
இறந்து போனாலன்றி?
-பிரெய்ன் டர்னர் (தமிழில்: எஸ். பாபு).
ஆளரவம்
ஓய்ந்தவொரு தெருவில்
பின்னிரவில்
மூன்று சக்கர
சைக்கிள் பழகும்
அச்சிறுவனின் முகத்தில்தான்
எத்தனை குதூகலம்.
இரண்டு கால்களும் செயலிழந்த
அச்சிறுவனை அமர்த்தி
சைக்கிளைத் தள்ளும்
அம்மாவின் சிரிப்பில்தான்
ஏதோ ஒரு ஊனம்.
-ச.முத்துவேல்.சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-நா.விச்வநாதன்.

ஆதலால் அலறுகிறான்.....

நீ நிரம்பி வழியும் கடலின்
கரையொதுங்கிய சிறு தாவரமாய்
அலைவுறுகின்றேன்

ஓராயிரம் ஓங்கரிப்புகளுடைய
உன் அன்பின் அடிவாரத்தில்
காலூன்றி களித்திருந்த நாட்களில்
நீ கரைந்த உன்னில்
பருவம் பருவமாய் மூழ்கி
காதலின் முத்துகளைச் சேமிக்கிறேன்

குளிரும் சுழலும் உள்குமைந்து
உன்னை உருமாற்றிய கணத்திலும்
அலை இதழ்களால் என்னை
முத்தமிட்டுச் சென்றிருக்கிறாய்

உன்னையும்
நுரைத்துப் பொங்கும் காதலையும்
இழத்தல் என்பது
ஒப்பீடுகளற்றது என்னும் தருணத்தில்
காலத்தின் நங்கூரம்
என் வேர்களைப் பறிக்கிறது

உன்னிலிருந்து கிளம்பி
உன்னிலேயே பயணித்து
உன் கரையிலேயே ஒதுங்கிய
என் காதலின் பெருவாழ்வு
இன்னொரு முறை வாய்க்கட்டும்

-சுகிர்தராணி.
காதலர் தினத்தன்று
காதலைச் சொல்லவில்லை என்று
குறுஞ்செய்தியில் கோபிக்கிறாய்.
உன்னிடம் காதலைத் தவிர
வேறு எதையுமே
சொன்னதில்லையே இதுவரைக்கும்.
-முகுந்த் நாகராஜன்.
கூச்சத்தின் புதருக்குள் ஒளிந்து கிடக்கிற
குழிமுயல் அவன்
அள்ளி அணைத்துக்கொள்

பெருமழையில் நனைந்து நடுங்கும்
சிறு ஆடு அவன்
விரல்களால் வெயில் போர்த்து

கனவு வாகனங்கள் மிகுந்த சாலையில்
நினைவு தப்பிய பூனை அவன்
ஒளிபாயும் கண்களால் வழிகாட்டு

அருகாமை வீடுகளின் கறிச்சோறு ஞாயிறுகளில்
தனியே பசித்திருக்கும் நாய்க்குட்டி அவன்
ஒரு கவளம் அன்பெடுத்து ஊட்டு

இல்லையென்றால்
ஒரு சிங்கமென அவன் குகைக்குள் வா
இரையாகப் போட உள்ளங்கையில்
இதயம் சுமந்து காத்திருக்கிறான் பாவி மகன்.

-முருகன்.ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் போதாது காதலுக்கு..
நிலா வேண்டும், மழைவேண்டும்,
மீன் வேண்டும், காடு வேண்டும்,
தும்பி வேண்டும், மழலை வேண்டும்,
மண்புழு வேண்டும்,
கவிதை வேண்டும்..

-பழனிபாரதி.
தொலைபேசியில் பேச்சென்ன?
பாட்டே பாடு
பக்கம் பக்கமாய்
கடிதம் எழுது
பழயதானாலும் இருக்கட்டும்
உன் புகைப்படத்தை அனுப்பு

நேரில் வராதே
நானும் அப்படியே
முடியாது என்னால்
இன்னுமொரு முறை
உன் பிரிவை தாங்க.
-தமிழ்பரிதி. விடை தரமுடியாது
என்னால்
விழிகளில் என்னை
கொண்டு
செல்.
-ஆனந்தி.

Monday, September 7, 2009

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து....

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே -

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
-சேரன்.
இரண்டாவது சூரிய உதயம்.
நாள்
மூங்கில்கள் நெரியும் கரை
மஞ்சளாய் நெளிகிற நதி
அக் கரையருகே நீ.....

எனது புரிதல் நிகழாதென்று
உனக்குத் தெரிந்தும்
உனது மொழியில்
உரத்துச் சொல்கிறாய்.
எனக்கு,
எனது மொழியில் தான்
பேச இயலும்.
உனக்குக் கோபம் வருகிறது
நான் என்ன செய்ய?

மீண்டும் மீண்டும்
உனது மொழியில் கடிதம் எழுதுவாய்,
சிரமம் எடுத்துப்
புரிந்து கொள்வதற்கான
குறைந்த பட்ச நேசமும் அற்றுப் போயிற்று;
இப் போதைக்கு நட்டம் எனக்குத்தான்
எனினும்,
நான் அவற்றை அடுப்பில்
போடுகிறேன்;
கிழித்தே எறிவேன்!

இனி -
அவர்கள், எனது மக்களும்
அதைத்தான் செய்வார்கள்.

காற்று வீசுகையில்
மூங்கில்கள் நெரியும் கரையில்
நெருப்புப் பற்றும்
பிறகு,
உனது வீட்டிற்கும் பரவும்.
-சேரன்
"இரண்டாவது சூரிய உதயம்"
எனது நிலம்
சிறகுவலை விரித்த பரவைக் கடல்.
மேலே மூச்செறியும் காற்று
கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை
விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம்
கரை தெரிகிறது,
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்.

அலையும், எஞ்சின் இரையும்பொழுது
சிதறும் துளியும்......
ஒன்றரை மணி நேரம்
எப்படி முடிந்ததாம்?

பிறகு, மணல் நிமிர்ந்த வெளி
அதனுள் புதைந்த பனைகள்,
ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக்
கன்னி மணல் மீது தலைநீட்டும்...
மணலோ,
கண்ணாடி விதையிட்டுச்
சூரியன் போய்க் குடியிருந்த
பொன்னின் துகள்....
அதன் கீழ் -
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக, என்முன்னோர் நடந்த
நிலப்பரப்பு.
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது.

துயிலாது, இந்த அலைகரையில்
நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகின்றதைப் பார்த்திரங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளி பிளந்து
கரை சேரும் நாவாய்க்குக்
காத்திருந்த இன்னொருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை, அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலை காற்றாடும் வெளியின்
மண் மூடிய சுவடுகளில்,
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு செய்தி;

நூறுநூறாயிரம் தோள்களின்மீது
ஏறி நின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன் மேல் எழுகிற அலைகளை மீறி
அதனைக் கொண்டு போய்,
எங்கும் ஒல்லிக்கிறது காற்று

"எனது நிலம்
எனது நிலம்"
-சேரன்.
இரண்டாவது சூரிய உதயம்.

Saturday, September 5, 2009

அம்மாவின் பொய்கள்.....

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களை குத்தும் என்றாய்


தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்


எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்


தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயோ?


அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?


தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
-ஞானக்கூத்தன்.

Friday, September 4, 2009

ஈரம் இல்லை மழைக்கு....

வேறு மழை....

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
-ஆதவன் தீட்சண்யா. தனிமையில்
காற்றுவரத் திறந்து வைத்த
யன்னல்
கடந்து அறைக்குள் வந்த
மழை

வாசனை பிடிக்கத் தெரியும்
பூனைக்கு
வாசலால் தப்பி ஓட

மேசையில் உயிரோடு திரிந்த
கவிதைகளைக் கொன்று
வெய்யிலில் நடந்து
மறைந்தது

ஈரம் இல்லை மழைக்கு.
ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை
-செழியன்.
ஈரமில்லாமல்
பொழிகிற
இந்த மழைக்கு தெரியுமா
என் கூரைகள்
கரைவது பற்றி ...

தெரிந்தாலும்
தெரியாவிட்டாலும்
நனைக்கவே
செய்யும் மழை...

நனைக்கத்தான்
மழை
நனையத்தான்
குடை...
- யுக பாரதி.