Thursday, October 21, 2010

உன் பெயர்

உன்பெயர்-

கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.

காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?

உன் பெயர்-

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

* தன் காதலிக்கு பரிசாக தன் காதை அறுத்துத் தந்த வான்கோ
** யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்

-சுகுமாரன்

உனக்குத் தெரியுமா

வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்

வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை

இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக

வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்

குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்

உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.

- மகாதேவன்
ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது

நனைவது

நானும்
நீயும்
ஒரே மழையில்
நீ
குளிருகிறது என்றபோது
நானும்
குளிருகிறது என்றேன்
ஒரே மழை
ஒரே நேரத்தில்
குளிர்விக்கிறது
வெவ்வேறாய் இருக்கும்
ஒன்றை

-கோகுலக்கண்ணன்.

என்னைத் தேடி வரும் அவனுக்கு

சிறகுகளை
ஒவ்வொன்றாய் பிய்த்து போட்டபடி
அந்த கானக வெளியினைக் கடந்தேன்
என்னைத் தேடி வரும் அவனுக்கு
நான் காணாமல் போவதையும்
அடையாளப்படுத்தி..

நெடுநாட்களாகியும்
யாரும் தேடி வராத நிலையில்
காய்ந்த குருதிதுளிகள்
தக்கைகளாயும்
சிறகுகள் இடமாறியும்
போயிருந்தனவென்று
எனக்கு பின்னால் வந்த
பருந்தொன்று
சொல்லிச் சென்றது..

சிதைந்த என் அடையாளங்களைத் தேடி
மீண்டும் வந்த வழி திரும்பினேன்..
சிறகுகளேதும் காணப்படாத நிலையில்
துயருற்று முள் மரத்தின் அடியில்
மருகி நிற்கையில்
அதன் கிளையொன்றில்
என் அத்தனை இறகுகளும்
சேகரிக்கப்பட்டிருந்தது
அருகிலேயே பாதுகாப்பாய்
அவனும்..

- இசை பிரியா.

ஆயிரத்தொரு காரணங்கள்

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

இப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.

-பா.ராஜாராம் .

Wednesday, October 20, 2010

கல்வி-கேள்வி

அப்பா...
ஒரு கதை சொல்லு
ஓடி வ்ந்தாள்
ஒன்றாம் வகுப்பு மீனாட்சி.

ஆர்வத்துடன் ஆரம்பித்தேன்
முயலுக்கும் ஆமைக்கும்
ஓட்டப் பந்தயம்
முயல் உறங்க
ஆமை வென்றது
அபிநயத்துடன்
அரங்கேற்றினேன்.

போப்பா!
தப்புத் தப்பா சொல்றே...
மெள்ள நகரும் ஆமைக்கும்
துள்ளி ஓடும் முயலுக்கும்
போட்டி என்பது நியாயமா?’

ஒன்றாம் வகுப்பின்
கேள்வியால்
நூற்றாண்டுத் தத்துவம்
நோடியில் உடைந்தது.

கேள்வியே கல்வி என்று
இப்போது புரிந்தது
ம்...ம்...பள்ளிக்குப்
போக வேண்டியது
மீனாட்சியல்ல!
-அமிர்தநேயன்.

தடம்

சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்

அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது

நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்

யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது

விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்

இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்

-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்)
ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்

தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவு

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா .
-கவிஞர் கே.ஸ்டாலின்

கவிதை இறகு -ஐப்பசி

ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று
எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்
அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்
அப்படித்தான் சொல்கிறது
பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து
மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு
மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது
அச்சமூட்டுகிறது
மரியாதையை ஏற்படுத்துகிறது
பெருமையளிக்கிறது
மெய்சிலிர்க்கவைக்கிறது

தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட
டெஸ்டரை முதன்முறையாகப்
பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்
தன்வாழ்வின் தோள்மீது
கைபோட்டு அரவணைத்துக்கொண்டு
பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு
நன்றி சொல்லிக்கொள்கிறான்

யாருமற்ற அந்நேரத்தில்
மெல்ல எழுந்து
ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி
இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு
கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்
ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்.
-.முத்துவேல்.