Thursday, September 27, 2012

முடியுமா மிஸ்?

தாமதமாக வந்ததற்கு
மன்னிக்க வேண்டும் மிஸ்
நடந்ததை கேளுங்கள் - பிறகு
தண்டனை தாருங்கள்

புத்தகப்பை சுமையுடன்
ஊர்ந்து வந்தேன் மிஸ்
பனியில் குளித்த புற்களில்
தூக்கம் க்லைந்த பட்டுப்பூச்சிகள்
ஓட்டப்பந்தயம் நடத்தின மிஸ்

அசிங்கமாய் புத்தகத்தில் வரைந்திருந்த
அழகான வண்ணத்துப்பூச்சி
கையில் வந்தமர்ந்து
கண்ணை உருட்டி உருட்டி
கூடப் பறக்க அழைத்தது என்னை மிஸ்

புத்தகப்பை நசுக்கிக் கீழே
விழுந்து காயமாச்சு மிஸ்
குட்டி அணில் எட்டி நின்று
கண்ணாமூச்சி ஆடியது
சிட்டுக்குருவியும் என்னைப் பார்த்து
வாய்ப்பாட்டு பாடியது மிஸ்

காக்கா கூட கரைந்து கரைந்து
கதைகள் சொன்னது மிஸ்
உங்கள் தண்டனைக்குப் பயந்து
ஊர்ந்த என்னை எழுந்து நடக்க
எறும்புகள் சொன்னது மிஸ்

இவற்றையெல்லாம்
படித்தது எந்த பள்ளிக்கூடம்
என்று கேட்டேன் மிஸ்
பார்த்து கைகொட்டிச் சிரித்தன
பள்ளிக்கூடம் கேள்வி பதில்
பரீட்சை அடி உதை கூட
இல்லாமல் படிக்க முடியுமா மிஸ்?


-உதயசங்கர்

Wednesday, September 26, 2012

காத்திருக்கிறோம்

இந்த அறையை நோக்கி 
பூமியின் எப்பகுதியிலிருந்தும் 
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை 

இந்த அறைக்கு 
நண்பர் என்றுசொன்ன 
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை 

பறவையின் குரல் 
நாயின் குரல் 
வானின் குரல் 

எதுவும் தொட்டதில்லை 

சூரியனின் கதிருக்குக் 
காத்திருந்து காத்திருந்து 
மனமொடிந்ததுதான் மிச்சம் 

காற்று மட்டும் 
அறீயாமல் வந்து 
உயிரைக் காப்பாற்றுகிறது 

அறையும் நானும் 
காத்திருக்கிறோம் 
அறிமுகமான 
மனித முகம் வேண்டி 

 - பவுத்த அய்யனார்.
மேன்ஷன் கவிதைகள்.

வார்த்தைகளிலான பிரியம்



பிரியங்களை அறிவிக்கும் வார்த்தைகளை 
கூறி விளையாடும் பருவம் கடந்துவிட்டோம் 
என்றாலும் என் அன்பை 
வார்த்தைகள் கொண்டே 
வெளிப்படுத்த யத்தனிக்கிறேன் 

வார்த்தைகளற்ற அன்பை 
உணர மாட்டாயாயென்பது
எப்பொதும் உன் கேள்வியாக இருக்கிறது 
நீயும் வார்த்தைகளின்றி 
உணர்வாய் என்று தெரிந்தே 
சொல்லிக் கொண்டிருக்கிறேன் 
என் பிரியங்களை 

சொன்னால்தான் தீருமென்றில்லை
எதையும் அடைத்து வைக்கும் 
தீர்மானத்தை வலுக்கட்டயமாக 
அதீத அறிவோடுடான செயல்பாடுகளை தவிர்க்கிறேன் 

வார்த்தைகளால் அவிழ்கவியலாத
இறுக்கம் புதை மணலாக 
எனை புதைத்துக் கொள்ளலாம் 
வார்த்தைகளிலான பிரியங்களே
எப்பொதும் உதவியாக இருகின்றது 

உணர்வுகளும் வார்த்தைகளும் 
நிறைந்ததே என் பிரியம் 
தினம் பெய்யும் மழையாக
அதைக் கொண்டு உனை நனைக்கவே 
எப்பொதும் என் விருப்பம் 

-லாவண்யா சுந்தரராஜன் 
'நீர்க்கோல வாழ்வை நச்சி"

Monday, September 24, 2012

கவிதை இறகு - புரட்டாசி


இது ‘கின்லே’, என்னமோ ஈஸியா கேக்குற!

விரிந்து கிடக்கும்
தண்டவாள உதடுகளுக்கிடையே
ரயில் பெட்டிகள் பேசிக் கொள்ளும் மொழியின்
அர்த்தம் தேடி அழைந்தது மனது.

திசுக்களால் ஆன
பாராளுமன்ற வாதிகளின்  இதழ்களில் இருந்து
வெளிவரும் பட்ஜெட் உரையை விட
இரும்பு இதழ்களிலிருந்து பெறப்படும்

ரயில் பயணத்தின் ஓசைகள்
மனதுக்கு இதமானவை.
கூடவே ரயிலில்
பயணம் செய்தவர்களின் குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்த் திசைதிருப்பியது
என்னை.

கொடுத்த காசுக்கு இடம்பிடிக்கத் தெரியாது
குத்துக்காலிட்டு வழியில் கிடந்த பெரியவர்
தயங்கித் தயங்கி
இருக்கையிலிருந்தவரிடம் இறைஞ்சினா.

“கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க”
இரட்டுற மொழிதலில் பதில்வந்தது….

“இது பாட்டில் தண்ணிய்யா”

உள்ளுறை உவமம் அறியாப் பெரியவர்
“பாட்டில் தண்ணியா பரவாயில்லை
கொடுங்க”
என ஆவலாய்க் கை நீட்ட

“பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கின
பாட்டில் தண்ணிய்யா
என்னமோ ஈசியா கேக்குற!”

ஈரப்பசையற்ற வார்த்தைகள் எதிர்பாய
பீறிட்டு வந்த பெரியவரின் தாகம்
தன்மானத்தோடு தொண்டைக் குழியிலேயே
தற்கொலையானது.

தண்ணீரால் ஒரு மனிதனின் இதயத்தை
இரும்பாக்க முடியும் என்ற நசவாதத்தைக்
கண்ட எனக்கு
சில இரும்பு இதயங்களை
அவலம் தாங்காது அலறும் பெட்டியின்
அர்த்தம் புரிந்தது அப்போது.

-துரை.சண்முகம்.

Tuesday, September 4, 2012

ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு


பஞ்சாரக் கோழிகள் சிறகடிப்பும்
கட்டிப்போட்ட நாய்களின் உறுமல்களும்
சின்னக் குழந்தை
ஆற்றாமையில் வடிக்கும் கண்ணீரும்
பொருள் கொள்ளாது நிகழ்கிறது
கிடையில்
ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு

-கவிஞர் சங்கரபாண்டியன்.
சந்ததிகள்
வேரறுக்கப்பட்டதை எண்ணி
புகைகிறது
அடுப்படியில்
மரம்.


-கவிஞர் சுரேஷ்.

நினைவுள் மீள்தல்

ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

-தானா.விஷ்ணு
"நினைவுள் மீள்தல்"

பறத்தல் பறவையியல்!

திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்…

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

- கீதமஞ்சரி