Monday, February 21, 2011

ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம்

நீதிகேட்டு வழக்காடி
நாட்டை எரிக்கும் வல்லமை இல்லை
உங்களது கழுகுப் பார்வையைக் களைந்து எறியவோ
குறியை வெட்டி எறியவோ
எனக்கான ஒன்றும் இல்லை
செத்துப்போன இந்தப் புல்லும் கல்லும்
சாட்சி சொல்ல வரப்போவதுமில்லை
என்ன செய்தாலும்
உங்களை யாரும் தட்டிக் கேட்கப் போவதுமில்லை

மேலும்
உங்களுக்கு நான்
தாயும் இல்லை சகோதரியும் இல்லை

ஆகவே
என்னை நீங்கள் கொலை செய்ய
நிறையவே காரணங்கள் உள்ளன.

- பெரிய ஐங்கரன்.

"புரிஞ்சுக்கோ"

நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.
வீடு மாறி விட்டாயாம்,
உறுதிப்படுத்த,
உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.
இருந்தும் என்ன?

மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.
உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும்
செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.
தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.
நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?

நம் நினைவுகளைத் தாங்கி
உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.
உன்னோடிருந்த வீட்டின் முன்னால்
நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி
குந்தியிருக்கின்றேன்.
யார் கண்டது?
எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று
உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.

“புரிஞ்சுக்கோ” என கண்கலங்க
என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய்.
பின்நவீனத்துவம்,
பிரேம்-ரமேஷ்,
சிக்மென் பிரைட்,
நீட்ஷே
புரிந்துகொண்ட என்னால்
உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை.

பனிப்போர்வைக்குள்
உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே
நான் விறைத்திருக்க
நீ கடந்து போகலாம்
அது நானென்று புரிஞ்சுக்காமல்.

-கறுப்பி.

கவிதை இறகு - மாசி

ஊரு ஒன்னாதான் இருக்கு
ஊருக்கு தார்ரோடு வேணும்
பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு,
ஊருக்கு ஒரு பஸ் வேணும்…
ஆனாலும் அவரு
காருலதான் போவாரு…

அவரு வூட்ட எட்டுன
புறம்போக்குதான் பஸ் ஸ்டாண்டூ
கைய நீட்டின இடத்துல
பஸ் நிக்கணும் ஏன்னா?
இது எங்க ஊரு பஸ்.
சொன்னாரு
டீசலும் – நேரமும் உங்களுது
பார்த்து ஓட்டுங்க…
சொன்னாரு.

"பஸ் புதுசு அசிங்கமாக்காதீங்க
கடலத் தோலை வெளியில போடு"
சொன்னாரு கண்டக்டர்.

வெத்தலய போட்டு
எச்சிலை வெளியில துப்ப
தொப்புன்னு
பின்ன குந்தியிருந்த
சலவைச் சட்டையில் வுழ
"ஏண்டா…கலப்பை
மம்முட்டி… கோடாரி
நாகரிகந் தெரியாதவனுவோ…"
சுருங்களில்
தலைவர் வூட்டுல
பஞ்சாயத்து.

பஸ் நடுக்கத்தோட வந்திச்சு
"ஏய்யா கண்டெக்டர்
வெளியில துப்ப சொன்னியே
எப்படி உள்ளே வந்திச்சு?"

ஊர் இரண்டாச்சு
தலைவர் கேட்டாரு
இரண்டு பஸ்

முடியாதாம்
முடியாதா?
யாருக்கும் வேணாம்
தீட்டுப் பட்ட பஸ்,
எரிஞ்சது…எலும்புக்கூடா
ஆமாம்… பஸ் என்ன சாதி?

தலைவர் காருலதான் போவாரு
ஊருதான் நடந்து போவுது.-ராஜ்கவி
"படகென்பது துடுப்பையும் சேர்த்து"