Wednesday, February 29, 2012

நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்

தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை

“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

-மன்னார் அமுதன்.
கை வலிக்க
கொஞ்ச தூரத்திற்கொருதரம்
கைப்பை சுமையை
இறக்கி கொண்டுவரும்
முகமறியா
சகோதரியிடத்து
"கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்"
எனச் சொல்லியபோது
அவள் பார்வையில் தெரிந்தது
திருடன் என
என் முகம் ....

- படைவீடு அமுல்ராஜ்.

ஈற்றடியில் உரிய தமிழாக்கம் வேண்டி நிற்கிறது


ஈராஸ் பாதிரி அகராதியில் திராவிடர் என்றால்
திரைமிலர் என்னும் கடலின் குழந்தைகள்
சிங்கள பெளத்த அகராதியிலோ கள்ளத்தோணி
ஆழி முந்நீரில் கோடிட்டே எல்லை பிரித்தவன் எவன்?

அக்கரையில் ஆடி முடித்த நரவேட்டைப் பேரினப் படுகொலை
நாளைய நட்சத்திரப் போருக்கு இன்றைய ஒத்திகையாய்.
இந்துமாக் கடலில் மையங்கொண்டது புயல் ஒன்று.
இக்கரையில் வம்சாவழிக்குப் பதவி வேட்டை
ஆரூர்ச் சோழன் பேர-அரசியல்
ஓர் அடிமை மற்றோர் அடிமைக்கு உதவவா முடியும்?

அக்கரைத் திக்கின் முகமெலாம் நெய்தலே கறங்க
இக்கரை ஈர்ந்தண் முழவின் இன்னிசை ஆர்ப்ப
ஆரூர்ச் சோழன் நீரோ பிடிலாய்
செம்மொழி கொண்ட கோலாகலம்
அவைக்களப் புலவோர் மெய்க்கீர்த்திகள்

சர்வதேசப் போர்க் குற்றவாளிக்கும் உடன்போந்த
இந்திய மண்ணில் தேடப்படும் ஓர் குற்றவாளிக்கும்
சிவப்புக் கம்பள நடைபாவடை விரிப்பு

டப்ளின் தீர்ப்பை ஐ.நா. தீர்ப்பும் உறுதிப் படுத்திட
அசோகச் சக்கர நீழலில்
அடைக்கலம் தேடும் ”சிங்க நாசிச ஸ்வஸ்திகா”

புத்திர சோகமே நித்திய சிலுவையாய்
கனக விசயர் காலடியில் ஆரூர்ச் சோழன் மணிமுடி

இன்னொரு கொங்கையும் திருகி எறிந்தனள்
ஒரு முலை இழந்த திருமா பத்தினி

ஆரூர்ச் சோழன் மதுரை மைந்தன் தேர்க்காலில்
இடறிச் சிதறின சில தலைகள்
ஆடும் கடைமணி மணிநா அசைந்திட
அரண்மனை வாயிலில் கயிற்றை இழுத்தன
கன்றை இழந்த ’கற்றா’ யாவும்

இந்து மாக்கடலில் மையம் கொண்ட புயல்
கன்றை இழந்த ’கற்றா’வின் ஆற்றாமை
கொங்கை எறிந்த கண்ணகிச் சீற்றம்

அலையாத்திக் காடுகளின் அரண்கள் தகர்த்தே
ஆழிப் பேரலை மெளனச் சூறை
கரையொதுங்கிற்று ஆரூர்ச் சோழன் மணி முடி

- பொதிகைச் சித்தர் .

Sunday, February 19, 2012

பிறந்த ஊர்

வருசம்
போனது தெரியாமல்
போய்விட்டது.

பட்டணத்துக்கு வந்து
நாற்பத்தைந்து ஆண்டுகள்
ஆகிவிட்டன.

பிறந்த ஊருக்கு
புறப்பட்டேன்.
ஒரு வனாந்தரத்தில்
என்னை இறக்கிவிட்டது
பஸ்.

ஐந்து கிலோமீட்டர் நடை
வெயில்
முள்
பனைமரங்கள்
ஒத்தையடிப்பாதை.

மணல் சுடுகிறது
உடம்பு வியர்க்கிறது
தாகம்.

ஒரு முள்மரத்து நிழலில்
இளைப்பாறுகிறேன்,
எனக்கு முன்னே
என்னுடைய கிராமம்.

என்னைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
பன்றிகள் ஓடுகின்றன
கோழிகளும்
சேவல்களும்
பயத்தில் கெக்கரிக்கின்றன.

சிறுவர்கள்
வேம்படியில்
வேப்பங்கொட்டை
சேகரிக்கிறார்கள்.

தெருவெங்கும்
அடுப்புச் சாம்பல்.
உடைந்து நொறுங்கிய
மண்பானை ஓடுகள்.

ஒரு பாட்டி
ஒரு ஓலையை மடித்து
அதில்
தீக்கங்குகள் எடுத்து வருகிறாள்.

ஒரு அண்ணாச்சி
முறுக்குத் தடியில்
அருவாள்
தீட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு பெண்
தன் குழந்தையை
மடியில்
கிடத்தி
சீழ் துடைத்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில்
கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு
குழந்தை தலைக்கு
தண்ணீர் ஊற்றுகிறாள்
ஒரு தாய்.
குழந்தை உடம்பு முழுவதும் புண்
தண்ணீரில்
மஞ்சள் வேப்பிலை.

கருவாடு சுடுகிற வாசனை
காற்றில் மிதக்கிறது.

ஒரு திண்ணையில்
இரண்டு குழந்தைகள்
கஞ்சி குடிக்கிறார்கள்.

தெருக்கோடி
எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து
நிற்கிறேன்.

வீடு இருந்த இடத்தில்
ஒரு குப்பைமேடு
ஒரு பெரிய கருவை மரம்
இரண்டு கழுதைகள்
படுத்துக் கிடக்கின்றன.

தெருவில்
புழுதி
வெயில்


-மு.சுயம்புலிங்கம்.
"தீட்டுக்கறை படிந்த, பூ அழிந்த சேலைகள்"

கவிதை இறகு- மாசி


தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ…
சூடு பட்டால் மட்டும் உ… ஊ…
அதட்டும் போது மட்டும் எ… ஏ…
சந்தோசத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…
வக்கனையின் போது மட்டும் ஔ…
விக்கலின் போது மட்டும் ஃ…
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று.


- யாரோ(பெயர் தெரியவில்லை).