Friday, August 1, 2014

கவிதை இறகு -ஆடி


நான் ஒரு
உடும்பு

ஒரு
கொக்கு

ஒரு
ஒன்றுமே இல்லை

-நகுலன்.

கவிதை இறகு - ஆனி

மாயக் கவித்துவம்

மலைப்பிரதேசக் கனவுக் குடிலோன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில்மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்துக்காக ஆதங்கப்படுகிறாய்.

நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

-சி. மோகன்.

கவிதை இறகு - வைகாசி

உருமாற்றம்

கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.

அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின் கதியில்
தெரிந்து கொண்டது.

வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும்போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.

அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.

-எம். யுவன்.