Thursday, September 23, 2010

கவிதை இறகு -புரட்டாசி


அக்காவின் பைபிள்

அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ்எஸ்எல்சி புத்தகம்.

அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.

-மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்.
தமிழில் : சுகுமாரன்

பிரியமானவன் யார்?


ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்

அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?

-(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)
சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி
தமிழில் மதுமிதா.

கதைச் சொல்லு.

கதைச் சொல்லு

கதைச் சொல்லு
எனக்கொரு கதைச் சொல்லு.
உன் கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.
இருக்கட்டும்
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
சுபமாக முடியும் என்று.

கதைச் சொல்லு
எனக்கு.
மூச்சுத் திணறும் அணைப்பில்
வேப்பமரத்தடியில்
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..
கதைச் சொல்லு எனக்கு.

உன் கதைக் கேட்டு
அடிப்பட்ட மான் போல
துடிதுடித்து அழவேண்டும்.
கதை முடிவில்
தொலைந்து போன குழந்தைகள்
சந்தர்ப்பவசத்தால்
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..
கதைச் சொல்லு எனக்கு.

ஒரே ஒரு ஊரில்
ஓர் இளவரசியாம்
அவளைக் காதலித்தானாம்
துணிகளை வெளுக்கும் அவன்..

இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..
கதைச் சொல்லு எனக்கு.
கதைச் சொல்லு.

- பிரதிபா நந்தகுமார்.

Wednesday, September 1, 2010

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்

- சல்மா.