Monday, March 29, 2010

எப்படி விரட்ட முடிந்தது?

கம்மங்கதிர்
சோளக்கதிர்
மிளகாய்ப் பழம்
பறிக்க
கூட்டமாய் வரும்
பச்சைக் கிளிகளை விரட்ட
பரணையில் ஏறி
தகரடின் தட்டுவோம்
படபடக்க பறக்கும் சில
கூட்டமாய இறங்கும் சில
தவுட்டுக் குருவி
சிட்டுக் குருவி
மைனா...

இந்தப் பக்கம் விரட்ட
அந்தப் பக்கம் ஓடும்
அந்தப் பக்கம் விரட்ட
இந்தப் பக்கம் ஓடும்

முதலில் பயந்த
ராக்காச்சிப் பொம்மைகளின் மீதே
துணிவோடு அமர்ந்து
பேசி பழகிக் கொள்ளும்

பசி தீரும் வரை சாப்பிடுகிற
குழந்தைகளை எப்படி விரட்ட
முடிந்தது என்னால்.
- செஞ்சி தமிழினியன்.

Sunday, March 28, 2010

நாடக இணைப்பு

தயக்கத்தோடு பார்த்தாய்
ஏதோ சொல்ல வருவதாய்த் தெரிந்தது
உன்னை டா போட்டு
கூப்பிடலாமா என்றாய்?
உம் என்றேன்
சாப்பிட்டியாடா
படிச்சியாடா
எழுதினியாடா
தூங்கினியாடா
நலமாடா...
வாடா.. போடா..
அப்பாடா
கண்ணிமைக்கும் நேரத்தில்
எத்தனை டா..
நான் சிரித்துவிட்டேன்
என்னடா சிரிக்கிறாய் என்றாய்
டாடா மட்டும் சொல்லிடாதே !
வெட்கத்தைத் தின்றபடி
மெல்ல சொன்னாய்
ச்சீ...போடா..
மறுபடியும் நான் சிரித்தேன்

எனக்கு நன்றாகத் தெரியும்
குதிரையின் காலில்
கட்டப்பட்டிருக்கும் லாடம் போல
உன்னோடு
இணைக்கப்பட்டிருக்கிறேன்.

என்றேனும் ஒரு தேதியில்
ஏதேனும் ஒரு வீதியில்
விட்டுவிடத்தான் போகிறாய்.
என்னை.

- கோ.வீரா

அவள் தனது கண்களால் போரிடுகிறாள்

அவர்கள் அவனது வாய்க்குப் பூட்டு போட்டார்கள்
கைகளை மரணப் பாறையில் பிணைத்துக் காட்டினார்கள்
பின்னர் கூறினார்கள்.
நீ ஒரு கொலைகாரன் என்று.

அவனது உணவையும் உடைகளையும் கொடியையும்
பறித்தார்கள்.
அவனை மரணச் சிறையில் வீசியெறிந்தார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஒரு திருடன் என்று.

எல்லா முகாம்களிலிருந்தும் அவனைத் துரத்தினார்கள்
அவனுடைய இளம் காதலியையும் பிடித்துக் கொண்டார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஒர் அகதி என்று,

இரத்தம் வடிக்கும்
கண்களும் கைகளும் உடையவனே !
நிச்சயம் இரவு விடியும்
சிறைச்சாலைகள் மிச்சமிரா
கைவிலங்குகளும் எஞ்சியிரா.

நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை.
அவள் தனது கண்களால் போரிடுகிறாள்.

இறக்கும் கதிரின் விதைகள்
விரைவில் பள்ளத்தாக்கைக்
கதிர்களால் நிரம்பும்.
-பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ்.

அக்கணங்களின் அதிர்வலைகள்

நம்ப மறுத்த கணங்களை
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திப் பார்க்கிறது மனம்.

கடந்துபோன ஆற்று நீர்போல்
ஏற்கனவே பெய்த வெயில்போல்
இழந்த கணங்கள் என்றபோதிலும்

பரவசமான கணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
பரவசத்தோடும்

வலிமிகுந்தத் தருணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
வருத்தத்தோடும்.

அக்கணங்களின்
அதிர்வலைகள் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை
-ச.முத்துவேல்.

Friday, March 26, 2010

எனது தோழிகள்

அவ்வப்போது சண்டையிட்டாலும்
நாங்கள் நல்ல தோழிகளாகவே இருந்தோம்.
அஸ்மாவும், லூஸியாவும், வரலட்சுமியும், ஷோபாவும்.
அவர்களைப் பற்றி நான் பேசும்போது
என்னைப் பற்றி அவர்களும் பேசுவார்களென நினைத்தேன்.
பெரியவர்களின் மதச் சண்டைகள் எங்களுக்கு அநாவசியமாய்
தெரிந்தது
பெரும்பாலும் எங்கள் சமையல் அவர்களுக்கும்
அவர்களது எங்களுக்கும் பிடித்திருந்தது.
நகரத்தில் கலவரம் நேரும்போதெல்லாம்
நாங்கள் கவலைப்பட்டோம்.
அதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?
எங்களுக்கான நேரம் மிகக் குறைவாக இருந்தது.


தவிரவும்,
எங்களை எதுவும் செய்துவிடாதபடி
எல்லோரும் பாதுகாத்தனர்.
நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம்.
தோழிகளாக இருப்பதையே விரும்பினோம்.
ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பிடிக்காவிட்டாலும்.
-சுகந்தி சுப்ரமணியம்.
மீண்டெழுதலின் ரகசியம்.

தொலைந்து போனவர்கள்

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடித்தல் என்பது எதற்குமில்லை.

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல.

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவை நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பாய் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலேதான் தோற்கின்றார்.

ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டை – உன்
அசலைச் சந்தையிலே விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டை – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்?’ என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு.
-கவிக்கோ அப்துல் ரகுமான்.
“சுட்டுவிரல்”

ஒரு மரத்தைக்கூடக் காணமுடியவில்லை

ஒரு மரத்தடி நிழல்போதும்
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என்மனம் தாங்க மாட்டேனென்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.

கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப்போக விழைகிறேன்

மரங்களின் தாய்மை
முலைமுலையாய்க் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையைக்கோதும்

மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள்
வானத்தையும் தீவுகளையும்.
வானமோ
அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே.

ஒரு மரத்தடி நிழல்தேவை
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப்
போவேன்.
-தேவதேவன்.

கதவை சுண்டாதே

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியை கட்ட கடைசி நாள் கேட்பாய்

பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
அவர் தொலைபேசி எண் ? என்பாய்

கையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை

அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவு செய்து ...
-சுந்தர ராமசாமி.

ஒரு வழிப்பயணம்

நேற்று யாரோ ஒருத்தர்
இன்று நான்
நானிருக்கிமிடத்தில்
நாளை வேரொருவர்
அவருக்குப் பிறகு மற்றொருவர்

நான் அவர்களை வெறுக்கவில்லை
நேசித்தேனா தெரியவில்லை

அவர்களும்
என் போல் தான்
என்னைக் கடந்து சென்றிருக்கக் கூடுமோ?

அனுமானத்தோடும்
சந்தேகங்கள் நிறைந்தும்
சுழற்சி முறையில்
நகர்கிறதிந்த மானுடம்!
-பா.ராணி.

வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்

அடுத்த ஆண்டும் வசந்தம்
ஆர்ப்பாட்டமாய் வரும்
அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன் சிட்டு முட்டையிடும்
முட்டையை நேசப்பார்வையில்
அடைகாக்க நானிருக்க மாட்டேன்.

அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழை நாள் இரவில்
பேசித்தீர்க்க நானிருக்க மாட்டேன்...

அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்.
-அ.வெண்ணிலா.

Monday, March 22, 2010

விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை

இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு


எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை
- சல்மா.

Saturday, March 20, 2010

சிறுநளினம் தெளித்த விழி

நிலவைப் பிடித்துச் – சில
கறைகள் துடைத்துக் – குறு
முறுவல் பதித்த முகம்.
நினைவைப் பதித்து – மன
அலைகள் நிறைத்துச் – சிறு
நளினம் தெளித்த விழி.
தரள மிடைந்து – ஒளி
தவழக் குடைந்து – இரு
பவளம் பதித்த இதழ்.
முகிலைப் பிடித்துச் – சிறு
நெளிவைக் கடைந்து – இரு
செவியில் திரிந்த குழல்.
அமுதம் கடைந்து – சுவை
அளவிற் கலந்து – மதன்
நுகரப் படைத்த எழில்.
-நா.பார்த்தசாரதி.

Thursday, March 18, 2010

நீரில் அலையும் முகத்தில்

அங்கப் போகாதே
அதை எடுக்காதே
கீழே இறங்கு,
மேலே ஏறாதே,
பேசாம இரு,
சத்தம் போடாதே,
தூங்கு சீக்கிரம்
தொண தொணன்னு பேசாதே
இவற்றோடு
லேசான ஒரு கையுயர்த்தலும்
போதுமானதாயிருக்கிறது
குழந்தைகளை
நம் உலகத்திற்கு
அழைத்துக் கொள்ள...
-அ.வெண்ணிலா.
"நீரில் அலையும் முகத்தில்"

உங்க மதம் பெரிசு?

இருக்கிற மசுர இழுத்து மழிச்சு
எரிச்சல் அடங்க சந்தனம் பூசு -
நீ இந்து

உதட்டுக்கு மேலே சுத்தமா மழிச்சு
கன்னத்துலையும், தாடையிலும்
தனியா வளர்த்தா
நீ இசுலாம்.

ஓட்டலில் சுடும் ஊத்தப்பம் போல
உச்சந்தலை மசுர தொப்பியல் மறைச்சா
நீ கிருத்துவன்.

தாடிமசுர தலைமசுர தலப்பாகையில
மறைச்சு வைச்சா
நீ சீக்கியன்

மொழ மொழன்னு மொட்டையடிச்சா
நீ பெளத்தன்.

உச்சி சுழியில மூனு மசுர உட்டுட்டு
மீதிய மழிச்சா
நீ சமணன்.

பின்னால குடுமி வைச்சா
பிராமணன்.

அல்லையில கொண்ட போட்டா
நம்பூதிரி.

அள்ளி முடிஞ்சா பண்டாரம்.
அவுத்து போட்டா பூசாரி.

நீயா மழிச்சா மொட்டை
தானா விழுந்தா சொட்டை.

இப்படி
இத்துப் போற மசுருலதான்
உங்க இத்தனை மதமும்
இருக்குதுண்ணா...

இந்த மசுர விடவா
உங்க மதம் பெரிசு?
-சுரேஷ்குமார்.

கவிதை இறகு - பங்குனி

பட்டையுரிந்த காதல்

பருவம் கழிந்தொரு விருட்சமாய்
பூத்துக் கொண்டிருக்கிறேன்
அருகம்புற்கள் கிளைத்திருக்கும்
வரப்பின் விளிம்புகளில் நின்று
இருகை நீட்டி அழைக்கிறாய்
மரமாகவே நிற்கிறேன்
காதலின் இனிப்பு திரவம்
உன்னிலிருந்து உருகி வழிந்து
என்னை நனைக்கிறது
அள்ளிப் பருக முடியாமல்
கைகள் புதைந்திருக்கின்றன
சிறு தலையசைப்பின் மூலம்
சில பூக்களை உதிர்த்து
உன் நாட்பட்ட காதலை
ஏற்கலா மெனினும்
காற்றும் பித்துப் பிடித்தாற்போல்
இடம் பெயர்ந்து விட்டிருக்கிறது
யாது செய்வேன்
என் அன்பை யாசித்து யாசித்துக்
கடும்பாலையைக் கடந்து போகிறாய்
திரும்பி வரும்போது புரிந்து கொள்
உன் பெரும்அன்பால் தீய்ந்துபோய்
பட்டையுரிந்து மொட்டைமரமாய் நிற்கும்
என் காதலையும்
-சுகிர்தராணி.

Monday, March 15, 2010

பூனை

காவல் பலிக்கவில்லை
தினமும் பால்திருட்டு
எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ
பின்வைக்கவோ
உனது தந்திரம் புரியவில்லை
துடிக்கும் மீசையில் கர்வம்
கண்களில் கவியும் குரூரம்
உடம்பில் புரளும் முறுக்கு
உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா?
எதிரியாகவா?
சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது
சோறு உனக்குப் பிடிப்பதில்லை
கறி நான் சமைப்பதில்லை
குழந்தையிருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை
நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது வீடு
இன்றுமுதல்
இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ!
எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது
அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது
உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்
என்ன புரிந்து எகிறினாய்
உன் மீன் எனக்கு இரையாகுமா?
என் வாசல் தூய்மை தவறாகுமா?
-பாவண்ணன்.

Thursday, March 11, 2010

அவள் கை நீட்டும் திசையில்

எதிர்பாராமல்
சாலையில் கடந்து போன
சித்தியைப் பார்த்த குழந்தை
ஆட்டோ உள்ளே இருந்து கூவுகிறாள்.
வண்டி நிற்குமுன்
ஆட்டோ பின்னால் இருக்கும்
சின்ன ஜன்னல் வழியாக
தன குட்டிக்கையை நீட்டி
சித்தியை அழைக்கிறாள்.
பரபரப்பான போக்குவரத்து
அவள் கை நீட்டும் திசையில்
சென்று மீள்கிறது ஒரு கணம்.
-முகுந்த் நாகராஜன்.

Sunday, March 7, 2010

மெளனத்தின் மிச்சம்

ஆத்தா
ஆடு வளத்தா...!
கோழி வளத்தா...!
நாய் வளர்க்கல..!
ஏன்னா..
அடிச்சுத் திங்க முடியாதில்ல.
-விகடகவி.
நீ
சொல்லியபடி
வரைந்தபடி
இல்லை
பறவைகள்.

நேரில்
பார்த்தபோது
பறவைகளாக இருந்தன.
பறவைகள்.
- வே.பாபு.
ஒருமுறை அல்ல
இருமுறை அல்ல.

ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் கொண்டிருக்கிறாள்.
அம்மா.

கூட்டக் கூட்ட
வந்து கொண்டேயிருக்கிறது
குப்பை.

-பொன்.குமார்.
கடவுள், குழந்தை
இரண்டும் ஒன்று
இனியும் சொல்லாதீர்
இப்படி.....

கருவறை தாண்டி
வெளியே வர முயன்றவை.
குழந்தைகள் மட்டுமே.
-நாணற்காடன்.
பகல்ல பூராவும்
பஞ்சாலையில் கெடந்து மாய்ஞ்சு
பொழுது சாஞ்சா
அடுப்புல கெடந்து மாய்ஞ்சு
வகையா பொங்கி
ஆசையோட பரிமாறும் மீனாட்சிக்கும்
"நீ மொதல்ல
சாப்புடு புள்ள" ன்னு
அன்பாய் அதட்டும்
அவ புருசனுக்கும்
இன்னக்கி வரைக்கும்
தெரியாது
என்னக்கி காதலர் தெனமுன்னு.
-அருணோதயம்
ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு கேள்வி
ஒவ்வொரு கேள்வியும்
ஒரு சந்தேகம்
ஒவ்வொரு சந்தேகமும்
ஒரு கல்

ஒவ்வொரு கல்லும்
ஒரு சந்தேகம்
ஒவ்வொரு சந்தேகமும்
ஒரு கேள்வி
ஒவ்வொரு கேள்வியும்
ஒரு வார்த்தை

ஒவ்வொரு வார்த்தையும்
மெளனத்தின் மிச்சம்.
-சுகுமாரன்
வாழ்தலின் பாதுகாப்பு
குறித்து
பிரக்ஞை ஏதுமற்றிருந்தேன்
உருளும் எதிர்காலம் விழிகளினுள் தேக்கி
வேட்டுவனின்
விரல்களிடை யொழுகும்
கயிற்றின் நுனியில் தலைகீழாய்ப் படபடக்கும்
பறவைகளிரண்டின்
பயணமென்றினைக்
கடக்காத வரை
-கலாப்ரியா.

Friday, March 5, 2010

உன் புன்னகைகள்

என் பூக்கள்
மொத்தமும்
பரிசளிக்க காத்திருந்தேன்.
வேர்பிடுங்க வந்தவள் நீ
என்றறியாமல்..

ஆடைக்குள்
ஆயுதங்களை
மறைத்துக்கொண்டு
புறாக்களுக்கு
இரையிடுவதைப் போன்றிருக்கின்றன
உன் புன்னகைகள்.

காதல் சதுரங்கத்தில்
எதிரெதிராய்
நீயும் நானும்..

காய்களை நகர்த்தி
ஆடுகிறேன் நான்.
கருப்பு வெள்ளைக்
கட்டங்களையே நகர்த்தி
ஆடுகிறாய் நீ.
-ஸ்ரீராம் பொன்ஸ்.