Monday, May 28, 2012

அணிகலன்களின் தேவதை

அணிகலன்களின்
தேவதையென்று
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
சிமிக்கியைத் தவிர

தேவதைகள் சிமிக்கி
அணிந்திருப்பார்களா
சிமிக்கி அணிந்தவர்கள்
தேவதைகளாவார்களா

தேவதைகளின் அணிகலன்
எதுவாகவும் இருக்கலாம்
அணிகலன்களே இல்லாமலும்
தேவதைகள் இருக்கலாம்

சிமிக்கியைத் தவிர
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
அணிகலன்களின் தேவதையென்று.

-தாணுபிச்சையா.
"உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்"

கவிதையின் தருணம்


மௌனமாகச்
சிறுமழை பெய்யும்
மாலை
சிற்றிரைச்சலுக்கு அடியில்
மண்டியிருக்கும் அமைதி
நேரம்
பழம் போலச்
சீராகக் கனிகிறது
மனம் கலைந்து மங்கி
முழுமையில் கரைகிறது
பேரண்டத்தின்
சிறு துளையென விரிந்திருக்கும்
என் கண்கள் முன்
ஒரு காகிதம் பறந்தாலோ
பூச்சி ஒன்று அசைந்தாலோ
கூடப் போதும்.

-பாலமுருகன்.

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.



மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடி யவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தமுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.

-பண்டிதர் க. சச்சிதானந்தம்.

Thursday, May 24, 2012

கவிதை இறகு-வைகாசி

எல்லாவற்றையும் விழுங்கியவன்

எப்போது பார்த்தாலும்
எதையாவது
மென்று கொண்டும்
தின்று கொண்டும்
இருக்கிறான் அவன்.

முறுக்கு, சுண்டல், கடலை மிட்டாய்
பட்டாணி, மிக்சர், தட்டை
வத்தல், அப்பளம், சாக்லேட்... என
எது கிடைத்தாலும்
வாயில் போட்டுக் கொள்கிறான்.

சமையலறைக்குள் நுழைந்து
வெளியே வந்தால்
பொட்டுக் கடலையோ, சர்க்கரையோ இல்லை
ஹார்லிக்ஸ் , போர்ன்விட்டாவோ
அவன் வாயிலிருக்கும்.

இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை என
எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.
சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், தயிர்,
கூட்டு, பொரியல், அவியல், பச்சடி, ஊறுகாய் என
எதையும் மிச்சம் வைப்பதில்லை அவன்.

மணிக்கொரு முறை
டீயோ, காபியோ குடிக்கிறான்.
கோடை காலங்களில்
இளநீர், மோர், பழரசம், வெள்ளரி,
நுங்கு, தர்பூசணி என
வெளுத்துக் கட்டுகிறான்.

விருந்துகளுக்குச் செல்கையில்
வடை, பாயசம், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பீடா என
மறுமுறை கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.



எதுவும் கட்டுப்படியாகாமல் போக
ஒரு நாள்
பிளேடு, செங்கல், நட், போல்ட்,
ஆணி, உடைந்த ட்யூப் லைட் என
சாப்பிட ஆரம்பித்தான்.
அதுவும் கட்டாது போலிருந்தது.

தன பசியைத் தீர்த்துக் கொள்ள
ஓர் அரசியல்வாதியாக மாறினான்.
எல்லாவற்றையும் விழுங்கி
ஏப்பம் விட்டான்.

ஒரு நாள்
அவன் வாயைத் திறந்து காட்டச் சொல்லி
பார்த்தது
கட்சி மேலிடம்.
உலகமே அவன் வாய்க்குள் இருந்தது.


-கவிஞர் தபசி.

உடன் வேரொடு தமிழரை அழித்துவிடு


வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்
வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும் இன்றுவரை-உலகில்
ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
எதற்கு இறைவா அழித்துவிடு

படமதைப் பார்த்து அழுதேனே-இனி
பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்
மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
கதர உதிர நாளுமென

இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்
ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
செழிக்க வாங்கித் தருவாயா

-புலவர் சா இராமாநுசம்.

Thursday, May 10, 2012

வழுப்படு தலைப்பிலி

காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?

அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.
"திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே"
திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து.....

"நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??"
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.



-சித்தார்த்த 'சே' குவேரா.

ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்!

எங்கள் பரமபிதாவே!

சீதனத்தில் பாதித்தொகை
ஏஜென்சிக்குப் போய்விட்டது.

அரைவருடச் சம்பளத்தின் மிச்சம்
சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.

ஒரு மாதச் சம்பளம்
இயக்கத்திற்குப் போன பின்
எனக்கென்று
ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?

உயிர்த்தெழுந்த யேசுவே!

வேலைக்குப் போகும் போது
தூக்கத்தில்
அருகில் இருக்கும் பெண்ணின் மேல்சாய
அவள் சிரிக்க
பதிலுக்குக் கூடச் சிரிக்க முடியாது
வேலை என்னைத் துரத்துகிறது.

எனது ஆண்டவரே!

விடியலிற்குச் சற்றுமுன் தூங்குகிறேன்
காலை எழுந்து ஓடுகிறேன்.

மிகச் சிறந்த மேய்ப்பரே!

உம்மிடம் இறைஞ்சிக் கேட்கிறேன்
எனது தேசத்தில்
என்ன நடக்கிறது?

இந்த நற்செய்தியை மட்டும்
சொல்லியருளும்
ஆமென்!!!


-சுகன்.

Friday, May 4, 2012

உள்ளே ஒரு வானவில்!


தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்.
இல்லையெனில்
மரண அவஸ்தை

கண் விழித்துப் பார்க்கையில்
பகலா
இரவா
ஏதும் புரியாத மயக்கம்

பகலுமின்றி
இரவுமின்றி
அந்திப் பொழுதாய் இருந்தாலும்
சில்லென்ற குளிர்காற்றும்
சிங்காரப் பூமணமும்
உன் முத்தம் தந்திடுமோ?

நீ நேசிக்கிறாயா
இல்லையா என்று புரியாமல்
காத்திருக்கையிலும்
மனசுக்குள் ஒரு
வானவில் தோன்றுமா?

பகலென்று தெரிந்தால்
சிறகுகளை விரிக்கலாம்.
இரவென்று தெரிந்தால்
கூட்டிற்குள் ஒடுங்கலாம்.

தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்.
இல்லையெனில்
மரண அவஸ்தை.

-சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வி.

'இல்லை' குறித்தான உரையாடல்

இல்லை குறித்தான உரையாடல்
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை
இல்லை என்றுதானே சொல்லமுடியும்
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை
எப்படி நான் நம்புவது ?

உணரத்தான் முடியும் என்கிறீர்
கரண்ட் என்கிறீர்
காற்று என்கிறீர்

கரண்ட் விஞ்ஞானம்
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர்

நீ சொல்வதைத் தீண்டினால்
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம்
'ஷாக்'காவது அடிக்குமா?

காற்று
குளிர்ச்சியை உணர்த்துகிறது
வெப்பத்தை உணர்த்துகிறது
புழுக்கத்தை உணர்த்துகிறது
'இல்லை' எதை உணர்த்துகிறது?

எல்லாம் மாயை எனில்
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர்

பேரழிவு ஏனென்று கேட்டால்
பாவத்தின் பலன் என்கிறீர்
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம்
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால்
அரசியல் பேசுகிறேன் என்கிறீர்

என்னிடம் பேசாதே!
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு
உணர்த்தவாவது செய்யச் சொல்
அதுவரை நான்
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .

- யாழினி முனுசாமி.

ஒரு மிடறு நஞ்சு

கண்ணீரைத் தவிர வேறெதுவுமில்லா
இரவிலிருந்து வெளிப்படும்
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்

நினைவுகளில் எரியும் நெருப்பு
நினைவுகளாய் எரியும் நெருப்பு
நினைவுகளை எரிக்கும் நெருப்பு

எந்த நெருப்பும்
நெருப்பைப் போலவே இல்லை
எந்த நினைவும்
நினைவைப் போலவே இல்லை
நெருப்பைவிட அதிகமாய் எரியும்
வேறேதோவொன்று
நினைவைவிட அதிகமாய் கனக்கும்
வேறேதோவொன்று.

-துரோணா.

Thursday, May 3, 2012

எனது இந்தியா- ஜிம் கார்பெட் ; தமிழ் மொழியாக்கம்.

"வாழ்ந்தவர்கள் மனது விட்டு சொல்லும்போதுதான் வாழ்கை புரிகிறது. ஆனால் அப்படி சொல்லுவதென்பது அபூர்வமாகதான் நிகழ்கிறது "
எப்போதோ படித்த பாலகுமாரனின் வரிகள் . இப்போது இந்த "எனது இந்தியா" புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றுகிறது.

"ஜிம் கார்பெட்"
நம்ப முடியவில்லை இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் ! இந்த அனுபவங்களின் மூலம் அவரின் வாழ்கை ஒரு உண்மையான, அபூர்வமான, மனிதனின் வாழ்க்கையாக மற்றவர்களுக்கு அர்த்தமாகிறது . அவர் நேசித்த காட்டுயிர்கள், எளிமையான மனிதர்கள் என்று அவர் வாழ்ந்த இடத்திலயே அவர் பெயரால் வன உயிரியில் பூங்கா அமைத்திருப்பது அவருக்கு கொடுக்கும் உண்மையான மரியாதை.

அவர் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் யுவன் சந்திரசேகர் முயற்சியால் நமக்கு படிக்க கிடைக்கிறது. அருமையான மொழிபெயர்ப்பு மூலம் யுவன் சந்திரசேகர் அதை படிக்கும் அனுபவத்தை இனிமையாக்குகிறார். நண்பர்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் மனிதத்தை விரும்பும் அனைவருக்குமான சிறந்த அன்பளிப்பு இந்த "எனது இந்தியா".


"இரண்டு வயது புத்தாலியும், மூன்று வயதுப் புன்வாவும் காணாமல் போனது வெளிக்கிழமை மத்தியானத்தில். மாடு மேய்ப்பவன் அவர்களை கண்டெடுத்தது திங்கட்கிழமை சாயங்காலம் சுமார் ஐந்து மணிக்கு - கிட்டத்தட்ட எழுபத்தேழு மணி நேரம் கழித்து. எனக்குத் தெரிந்தவரை அந்தக் காட்டில் இருந்த காட்டு விலங்குகள் பற்றிய விபரத்தை முன்னரே கொடுத்திருக்கிறேன். அந்தக் காட்டில்தான் எழுபத்தேழு மணி நேரத்தை குழந்தைகள் கழித்திருக்கிறார்கள். மேற்சொன்ன விலங்குகளும் பறவைகளும் இந்தக் குழந்தைகளை பார்க்கவோ,கேட்கவோ இல்லை என்று அனுமானிப்பதற்கு எந்த ஒரு நியாயமுமில்லை.இருந்தாலும் மாடுமேயப்பவன் புத்தாலியையும் புன்வாவையும் அவர்களது பெற்றோரின் கரங்களில் ஒப்படைத்தபோது, குழந்தைகளின் மேல் பற்தடமோ,நகக்குறியோ ஒன்று கூட இல்லை."

"ஒரு மாதமே நிரம்பிய ஆட்டுக்குட்டியை நோக்கிப் பெண்புலியொன்று பதுங்கிப் பதுங்கிப் வந்ததை ஒரு முறை பார்த்தேன். திறந்த வெளியாய் இருந்தது அந்த இடம்.புலி சற்றுத் தொலைவில் வரும்போதே ஆட்டுக்குட்டி அதைப் பார்த்துவிட்டது. கத்தி குழறத் தொடங்கியது. உடனே பதுங்குவதை விட்டு நேராக ஆட்டுக் குட்டியிடம் சென்றது புலி. சில கஜ தூரத்துக்குள் புலி வந்த மாத்திரத்தில், ஆட்டுக்குட்டி அதை எதிர் கொண்டு சென்றது.அருகில் சென்றதும் புலியை முகர்ந்துபார்பதற்காகத் தன் கழுத்தை நீட்டித் தலையை உயர்த்தியது. மூச்சுத் திணரவைத்த சில நொடிகளுக்கு வனத்தின் அரசியும், பிறந்து ஒரு மாதமே ஆன ஆட்டுக்குட்டியும் முகத்தோடு முகம் உரச நின்றனர். பிறகு அரசி திரும்பிவிட்டாள். வந்த வழியே திரும்பிச் சென்றாள்."


"காட்டு மரங்களை வெட்டும் பணியினால், காட்டுயிர்களின் நிம்மதியான வாழ்கை ஒழுங்கு குலைந்தது .நிர்க்கதியான, அனாதையாகிய பிராணிகளுக்கு என்னுடைய சிறிய கூடாரத்தில் அடைக்கலம் தர வேண்டி வந்தது. இரண்டு கவுதாரிகள்-கருப்பு ஒன்று,சாம்பல் நிறம் ஒன்று- நான்கு பெண் மயில் குஞ்சுகள்,இரண்டு முயல் குட்டிகள், குச்சிகால்கள் கொண்டு நிற்கப் பழகும் கலைமான் குட்டிகள் இரண்டு என்று என் கூடாரத்தின் ஜனத்தொகை அதிகமாகிவிட்ட சமயத்தில்,ரெக்ஸ் என்னும் மலைப்பாம்பு என் கூடாரத்தில் வந்து குடியேறியது.

இரவு கவிந்து ஒரு மணிநேரம் கழித்துக் கூடாரத்துக்கு வந்தேன். நான்கு கால் பிராணிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தபோது, கூடாரத்தின் மூலையில் ஏதொவோன்றின்மேல் லாந்தர் ஒளி பட்டுப் பளபளத்தது.அருகில் சென்று பார்த்த போது,மான்குட்டியின் படுக்கையாக இருந்த வைக்கோல் மீது ரெக்ஸ் சுருண்டு கிடந்தது.கூடாரத்தின் இளம் உறுப்பினர்களை எண்ணிப் பார்த்தேன்.எண்ணிக்கை சரியாக இருந்தது.எனவே,ரெக்ஸ்சை அது தேர்ந்துகொண்ட மூலையில் இருக்குமாறு விட்டுவிட்டேன். தினந்தோறும், வெயில் காய்வதற்குக் கூடாரத்தைவிட்டு வெளியேறும்.சூரியன் மறைந்ததும் தன்னுடைய மூலைக்கு திரும்பிவிடும்.இவ்வாறு கழிந்த இரண்டு மாதங்களில்,கூடாரத்தில் தன்னுடன் வசித்த இளம் குருதுக்களுக்கு அது ஒரு தீங்கும் இழைத்ததில்லை."


இந்தியாவின் நைனிடால் பகுதியில் பிறந்த ஜிம் கார்பெட் ,42வது வயதில் தான் ஒருமுறை பிரிட்டன் சென்றுள்ளார்.தன் வாழ்கை முழுவதையும் இன்றைய உத்ராஞ்சல் என்று அழைக்கப்படும் பகுதியில் கழித்த ஜிம் கார்பெட் ,இந்தியா விடுதலை பெற்ற பிறகு பிரிட்டனின் இன்னொரு காலனி நாடான கென்யாவிற்கு குடியேறி அங்கயே இறந்தார்.

முன்னுரையின் ஒருபகுதியில் " இவர்கள் நிஜமாகவே ஏழைகள்,இந்தியாவின் பஞ்சைப்பராரிகள் என்று அழைக்கப்படுபவர்கள்.இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கிறேன்,இவர்களை நேசிக்கிறேன். இந்த புத்தகத்தில் இவர்களை பற்றித்தான் பேசப்போகிறேன்.இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்" என்று அவர் யார் மத்தியில் வாழ்ந்தாரோ அவர்களுக்கு சர்ப்பணம் செய்திருக்கிறார்.

"எனது இந்தியா" மனிதத்தை விரும்பும், சக மனிதனை நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.


"எனது இந்தியா"
ஜிம் கார்பெட்- தமிழாக்கம் "யுவன் சந்திரசேகர்".
காலச்சுவடு பதிப்பகம்.
#669 கே.பி.சாலை.
நாகர்கோயில்-629 001.
தொலைப்பேசி-91-4652-278525.
விலை-125/-
பக்கங்கள்-229.

Wednesday, May 2, 2012

பயணம்

சருகென இறங்கும் பறவை
வந்த தூரம் வாலுக்குப் பின்னே
வியாபித்திருக்கிறது
எல்லை சிறு புள்ளியாய்
எதிர்பார்ப்புகளோடு துவங்கிற
பயணம் வெறுமனே நிகழ்கிறது

பறக்கும் வரை அது பறவை
அழியும் வரை அது காடு
நிலைக்கும் வரை அது மலை
இருக்கும் வரை யாம்.


-பொன். இளவேனில்.

இந்த விளையாட்டை...

பிறிதொரு மார்க்கத்தில்
உன்னை
பின்தொடர யத்தனிக்கும்
வேளையில்
நீயாகவே அழைத்துப் பேசி
தொடரச் செய்கிறாய்
இந்த விளையாட்டை
இன்னுமோர் முறையும்.

-செல்வராஜ் ஜெகதீசன்.