Sunday, May 16, 2010

நீ

பெருமழை பெய்து ஓய்ந்தவுடன் ஒரு நிசப்தம்
துவைத்து எடுத்ததுபோல் உலர்ந்துவிடும் இதயம்
பார்வை அறுந்து போக
நீ மறையும் போதும்

மேகம் ஊடாடி நிலவு ஒளிந்ததும் ஒரு வெறுமை
கழற்றி வைத்ததுபோல் வடிந்துவிடும் கண்கள்
கைகள் கழன்றுபோக
நீ விடுவித்த போதும்

அலை மடிந்து அலை மீள்வதற்குள் ஒரு தனிமை
களவு போனதுபோல் ஒடுங்கிவிடும் மூச்சு
குரல் விண்டுபோக
நீ விலகும்போதும்

உள்ளத்தின் பெரு விளைவு நீ.

-லீனா மணிமேகலை.
"ஒற்றையிலையென."

எங்கிருக்கிறீர்கள்?

காற்றிலும் ஒளியிலும் கூடியிருந்த
இறுக்கம் தளர்ந்துவிட்ட இதம்.
சிறிய வீட்டிலிருந்து
மூடாத கதவுகளும்
எண் அறைகளுமான
மிகப் பெரியதொரு வீட்டிற்க்கு
விரிந்திருந்தார்கள் அவர்கள்.

அவர்கள் குரல் மாந்தி
இனித்து எதிரொலிக்கவே
பிறவி எடுத்து நிற்கின்றன
எண் அரைச் சுவர்களும்.

சமையலறையிலிருந்து
"எங்கிருக்கிறீர்கள்
என் அன்பே"
என அவள் விளித்தாள்.
"எல்லா இடங்களிலும்"
என அறிவித்தது அவன் குரல்.

குரல் உதித்த இடம் நோக்கி
தன் கூர்அறிவைத்
தானே வியந்ததுவால்
சிவந்து ஒளிரும் முகத்துடன்
அவள் செல்கிறாள்
கையில் தன் இதயத்தை ஏந்தியபடி.
-தேவதேவன்.
"மார்கழி"

நீக்கமுடியாத வரிகள்

நீ அங்கிருந்த வேளை
நிலைகண்ணாடிப் பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வரிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்

உனக்கு புரிவதில்லை
உன்னை பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மை
-சல்மா
"பச்சை தேவதை "

நெடுஞ்சாலை நடனம்

இரவின் கண்ணீரென வழிந்தோடும்
நெடுஞ்சாலை ஆளரவமற்ற திசையில் கிடக்க
கனவின்
ரூபமாய்த் திரண்டவள் அசையத்துவங்கிறாள்

தனது சிவப்பு முந்தானையை
காலடியில் புரளவிட்டுச் சுழல்கிறாள்
கலவையான ஆட்ட அசைவுகளின் பாவங்கள்
வழியற்றுக் குவிந்த வாகனவாசிகளை
மிரளவைக்கின்றன

ஊரற்ற சாலையில் யாரிவள்
இவளை அகற்றுவது இயலுமாவென
ஒருவருக்கொருவர் புலம்பித் தீர்க்க

அவளின் சுழற்சியிலிருந்தே பெருகும் காற்று
அவளையொரு சருகென அடித்துச் செல்ல
சாலை வெறுமையில் தொங்குகிறது

-மாலதி மைத்ரி.

காதலுக்கு நிகரான

உலகத்து மொழிகளின்
அத்தனை அகராதிகளிலும்
தேடித்தேடி
கடைசியில்
தெரிந்து கொண்டேன்
உன் பெயரில்
காதலுக்கு நிகரான
இன்னொரு சொல்லை
- சுகிர்தராணி
"இரவு மிருகம்"

கூப்பிடும் தூரத்தில் உனது தீவு

மேகம் கவியும் கரையோர
மாலை நேரத்தில் என் முன்னே
நடந்து செல்கிறாய்
உனது இடது கை
வீசி அசைய
அசையா வலது கைக்கு
உனது கருப்பு நிறத்துக்கு ஒத்துவர
கபில நிறத்தில்
வண்ணம் அடித்துள்ளாய்

சிறு செடி நட
என்னை வாரி அணைக்க
நமக்கான சில வரிகளை எழுத
வேறு என்ன கனவு உண்டு
வீழ்த்தப்பட்ட
அந்த ஒற்றை கைக்கு

அங்கிருந்து இங்கு நீ கொண்டு வந்த
உனது ஒரு பிடி தாய்மண்ணை
எனது கனவுகளில் கொட்டிப்பரப்பி
உனது அடையாளத்தை சீய்க்கும்
அகதி வாழ்க்கை

கூப்பிடும் தூரத்தில் உனது தீவு
-மாலதி மைத்ரி.
"சங்கராபரணி"

Saturday, May 15, 2010

வேறு எப்படி சொல்லச் சொல்கிறாய்

தயக்கத்தின் முட்டைகள்மீது
அமர்ந்திருக்கிறது நம்காதல்
எங்கோ ஓரிடத்தில் மென்மையின் நரம்புகள் பூட்டப்பட்ட யாழை
நீ மீட்டிக் கொண்டிருக்கலாம்.


என் வருத்தங்கள் யாவும்
கால் நனையாமல் நீ உலவும்
கடற்கரைப் பொழுதுகள் குறித்துதான்
உயரத்தில் பூக்கும்
கள்ளிப் பூக்களை உனக்குக் காட்டியிருக்கிறேன்
கடலில் குதித்துக் கரையேறும் சிறுபுயலை
உள்நின்று அறிமுகப்படுத்தி யிருக்கிறேன்


காமம் துளிர்விடும் சாயுங்காலம்
சருகுகள் பூத்துக் கிடக்கும் சாலைகளை
நத்தையின் கால் கொண்டு கடந்திருக்கிறோம்
கொடுரமாய் பறக்கவிடப்பட்ட என்னுடலை
சொல்லின்
கனத்த நங்கூரத்தால் பிணைத்தபோதெல்லாம்
நீயும் உடனிருந்தாய்
பசியின் பழச்சாற்றினை நீ அருந்துகையில்
புத்தகங்களைப் பரிசளித்திருக்கிறேன்


இப்போதும் நீ பற்றியிருக்கும்
பிரியத்தின் கோப்பைகளில் மிதக்கின்றன.
என் கவிதைத்துண்டங்கள்
வேறு எப்படி சொல்லச் சொல்கிறாய்
உப்புக்கரிக்கும் என் காதலை
- சுகிர்தராணி.

Friday, May 14, 2010

கவிதை இறகு-வைகாசி

நீ என்னைச் சபிக்கத்
தொடங்கியபோது
உன்னை மட்டுமல்ல
என்னையும் கடந்து
சென்றிருந்தேன் நான்.

திட்டமிட்ட நமது சந்திப்பில்
வாதப் பிரதிவாதங்களுக்குப்
பிறகு மீண்டும்
நண்பர்களாகவோ
அல்லது எதிரிகளாகவோ
பிரிந்து செல்கிறோம்.

இவற்றிற்கிடையே
கதை சொல்லிகளிடம்
போய்ச் சேர்ந்திருக்கும்
நம்மைப்பற்றி அவர்கள்
சொல்ல விரும்பிய கதை.
-அழகு நிலா.

புத்தம் வீடு-ஹெப்சிபா ஜேசுதாசன்.

பனைமரம் தமிழர்களின் அடையாளம், நமது இனத்தின் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறையை தாண்டி வளரும் தமிழ் போல், வறட்சியை தாங்கி போராடி வளரும் இந்த பனைமரம். வளர ஏற்றதில்லை என்று தாவரஇனங்கள் புறகணித்த எந்த மண்ணையும் பனைமரம் புறக்கணித்ததில்லை.
செல்லபிள்ளையாய் தென்னைமரம் தண்ணீரை குடித்து வளர்ந்தாலும் , மேகத்தை மட்டுமே நம்பி வாழும் நம்பிக்கை மரம் அது . மழை பொழிவது எல்லாம் அதற்குதானோ என்று பயணங்களில் எதிர்ப்படும் ஒற்றை பனைமரத்தை பற்றி நினைத்ததுண்டு. வயதோடு வாழும் மரங்களுக்கு மத்தியில் தலைமுறைகளோடு வாழும் மரமது.

பனையை மட்டுமே நம்பி வாழும் வறண்ட நிலங்களின் ஒரு குடும்பத்தை பற்றிய கதை "புத்தம் வீடு".

கண்ணபச்சி அவர் குடும்பத்தின் பெரியவர். அவரது பொறுப்பற்ற இரு மகன்கள். மூத்த மகனின் மகள் லிஸி.இளைய மகனின் மகள் லில்லி.லில்லியின் இளவயது காலத்தில் ஆரம்பமாகிறது கதை.
பழம்பெருமைகளோடு வாழும் ஒரு வீடு "புத்தம் வீடு" மற்றும் அதன் மனிதர்கள்.பெருமையும்,வறுமையும் கொண்ட இரு உள்ளங்களுக்கிடையே ஒரு காதல்.காலம் மாறுகிறது,வாழ்கையில் மனிதர்களும் மாறுகிறார்கள் அவரவர்களின் சொந்த விருப்பங்களை கணக்கில் கொண்டு. லில்லி இந்த கதையின் உயிர்முச்சு , அவளை சுற்றியே இந்த கதை முழுவதும்.

மனிதர்கள் மாறுகிறார்கள்,சகோதரர்கள் பகை கொண்டு அலைகின்றனர்,
சகோதரிகளும் மாறுகிறார்கள்.எளிய வாழ்வு ,தூய்மையான அன்பு இவைமற்றுமே இவர்களது இலக்கு.பனையின் வாழ்வு போலவே இந்த புத்தம் வீடு குடும்பமும் ,வறுமை எதிர்ப்பு என்று அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்கின்றனர்.

உண்மைதான் ,இவள் கூட கண்டுகொண்டாள்.

"அக்கா,வீட்டிலே என்ன காரியமிண்னு கேக்கப்போறக."

குரலில் ஒரு நடுக்கமும் இல்லையே! லில்லியா பேசுகிறாள்! அவள் இட்டுத் தாலாட்டின, எடுத்து சீராட்டின, சின்ன லில்லிக் குட்டியா இவள்? கண்களில்தான் சந்தேக நிழல் எப்படிப் படர்கிறது!

"என்ன சொன்னே லில்லி?"

"எனக்குத் தெரியும் அக்கா.அதோ, அங்கே பார்."

ஐயையோ! இன்னும் நின்றுகொண்டிருக்கிறானே ! மரியாதையோடு பிழைத்துபோக விடமாட்டான் போலிருக்கிறதே!

அவளால் லில்லியின் முகத்தை பார்கவோ அவளுக்கு ஒரு வாக்குப் பதில் சொல்லவோ முடியாத நிலையிலிருந்தாள். அவள் குற்றம் செய்தவள்தானா? என்ன குற்றம் செய்தாள்? தனக்குத்தானே பதில் கொடுக்க முடியவில்லையே! தனது குறுகுறுக்கும் நெஞ்சையே சமாதானம் செய்ய முடியவில்லையே! இந்த கல்லாக நிற்கும், இந்த சிறுக்கிப்பெண்ணுக்கு எப்படி சமாதானம் சொல்வது?

" அப்பவோ,பெரியப்பாவோ அறிஞ்சா..."

".................."

"எலும்பெ மீதி வைக்கமாட்டாவ."

"...................."

"கண்ணபச்சி அறிஞ்சா சாவாரு."

" லில்லி! எனக்க பொன்னு லில்லிக் குட்டீ! கண்ணபச்சிக்கிட்டே இதெச் சொல்ல ஒனக்கு எப்படி மனசு வருது? நான் அப்படி என்ன செஞ்சேன்? நானாப் போய்ப் பேசினேன்? அப்படி நெனைச்சியா?"

" அக்கா, ஒன்னே ஆரு சொன்னா? அவனைத்தானே சொன்னேன். அவங் கண்ணப் பாரு. கீரெ வித்தெக் கொண்டு வந்தான்.நீயா கேட்டே?"

" உஸ், லில்லி பையப் பேசேன், மானம் போவுது."

" அவுக அறிஞ்சா மானம் போவாதா? யக்கா ? அவங்காலே முறிச்சுப் போடுவாவ. பொறவு பனையேறமாட்டான்.?"

"ஒனக்கு இப்ப என்ன வேணும்? கண்ணபச்சிக்கிட்டே சொல்லனுமா? "

"அது நீ நடக்யதை பொறுத்திருக்கு."

"நான் நடக்யது! என்னா நடக்யது! நீ இப்ப போலீஸ்காரியா வந்து ரொம்பக் கண்டுபிடிச்சிற்றே! நீ ஸ்கூலிலே போயிற்று வந்திற்று இருந்தப்போ ஆரு ஓம் பின்னாலே திரிஞ்சு உளவு பாத்தது?"

"எம்பின்னலே திரிஞ்சா ஆருக்கு என்ன கண்டுபிடிச்ச முடியும் ?"

"நீ இப்ப கண்டுபிடிச்சது என்னண்ணுதான் கேக்யனே ? இப்படி நீ மானத்தை வாங்குதியே ?"

அவளுக்கு துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.அவள் கண் கலங்குவதை பார்த்து லில்லிக்கும் குழப்பமாக இருந்தது. ஆனாலும் விடாமல்,

"அக்கா நான்தான் சொல்யனே, நான் இப்ப ஆருக்கிட்டேயும் ஒண்ணும் சொல்லப் போவலேணு. எனக்கு பெலத்த சந்தேகமாயிருந்தது.
ஆனாலும் இதுக்கு இடம் கொடுக்கப்படதக்கா. இனி உன்கிட்டே இவன் பேசிச் சிரிக்கியதெப் பாக்கட்டும். ஆமா , நான் சொல்லிப்போட்டேன் !"

"உனக்கு எம்மேலே பெலத்த சம்சயமாயிருந்ததா ? குட்டீ ! நீ என்னே ஆருண்ணு நெனச்சே? நான் தேவடியா , நீ உத்தமி.அதுதானே ? நீ என்னே அக்கா அக்காண்ணு ஏன் விளிக்யே ? என்கிட்டே சொல்லிப் போட்டியா ? என்னத்த சொல்லிபோட்டே ? ஆமா, நானும் சொல்லிப்போட்டேன். நீ என்ன அக்காண்ணு வாய் நிறைய விளிக்கணுமானா என்னே அக்காண்ணு நினைக்கணும். இல்லே தேவடியான்னு நெனேச்சியானா, எனக்குப் போலீஸ்காரியா மாத்திரம் இரு. அக்காண்ணு விளிக்காதே. வேண்டாம்! வேண்டாம்! !"

மனம் பொருமி அழுதேவிட்டாள் லிஸி. அவள் அழுவதை கண்டு லில்லியும் மனம் கலங்கினாள். கண்களில் நீர் துளிக்க, தமக்கையின் கையை பற்றிக்கொண்டு " அக்கா, பொன் அக்கா..." என்று ஏதோ கூறவந்தவளின் கையை வெடுக்கென்று தட்டிவிட்டு கண்ணிரை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டாள் லிஸி.லில்லிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

எளிய மொழி,மனிதர்கள் வாழ்க்கையை மிகைபடுத்தாத கதை,காலங்களின் மாற்றங்களை சொலும் விதத்தில் இது தமிழின் கவனம் பெற்ற,பெறவேண்டிய ஆக்கங்களில் இதுவும் ஒன்று.என்று படித்தாலும் அத்தனை காலத்திற்கும் பொருந்தும் நூல்களில் "புத்தம் வீடு" பனையை போலவே தலைமுறை தாண்டிநிற்கும்.

புத்தம் வீடு
ஆசிரியர்-ஹெப்சிபா ஜேசுதாசன்.

காலச்சுவடு பதிப்பகம்.
669,கே.பி.சாலை.
நாகர்கோவில்.629 001.
போன் -4652-278525.
விலை - 120/-INR
பக்கம்- 157.

Tuesday, May 11, 2010

நண்பன்

பசியோடு அலைந்தவனுக்குப்
பாவப்பட்டு உணவளித்தேன்.
எனது சம்மதமின்றியே
வீட்டில் சேர்ந்து கொண்டான்.

காவல் வேலையை
கருத்தாகச் செய்தான்
சம்பளப் பிரச்சனை ஏதுமில்லை.
ஓரிரு கவளம் சோறு போதும்.

பிள்ளைகள் விளையாட
பொம்மையானான்.
வயசுக்கு வந்த மகளை
பள்ளிவரை சென்று
விட்டு வந்தான்.
கொல்லையில் மனைவி
குளிக்கும்போது கூட
தட்டியருகே நின்று
இசட் பிரிவு பாதுகாப்பளிப்பான்.

என்னோடு வயலுக்குத்
துணையாக வருவான்.
அவனது காவலில்
கோழியும், குஞ்சுகளும்,
வெள்ளாடும், குட்டிகளும்
காளைகளும், எருமைகளும்
பத்திரமாக இருந்தன.

எல்லோரும் அவனை
"நாய்" என்று சொல்லுகிறார்கள்.
நான் மட்டும் அவனை
"நண்பன்" என்றுதான் அழைக்கிறேன்.
-வி. சகாயராஜா

பிரிய‌மென்ப‌தை த‌விர‌

தாழப் ப‌றந்திடும் மேக‌மொன்று
பிடிவாத‌மாய்
இட‌ம் மாறி மாறி
ம‌றைந்திருக்கும் உனது
பாறைப் பிரிய‌ங்க‌ளில் பொழிவிக்க‌
காத்திருக்கும் அட‌ர்ம‌ழையை

காற்றை அலைக்க‌ழிக்கும்
பிரிய‌ங்க‌ளில் நிழ‌ற்குடை
க‌டும் சிர‌ம‌த்தோடு த‌ன்னை
ஆழ‌ப் ப‌ற்றிக் கொண்டு
உன‌து வெயிலிலும் ம‌ழையிலும்
ந‌னைந்த‌ப‌டி த‌ந்திருக்கும் நிழ‌லினை

பெருங்கருணையோடிருக்கும்
பிரிய‌ங்க‌ளுக்கும்
பிரிய‌மென்ப‌தை த‌விர‌
கார‌ணிக‌ள் வேறு
எப்போதுமில்லை.
-லாவண்யா சுந்தரராஜன்

மிதக்கும் மகரந்தம்

பாதம் பாவாமல் எச்சரிக்கையாக
வந்தால் உணரலாம்
எல்லா இடங்களும் மலரின் சாட்சியங்களே
அரும்பும் மொட்டுகள் இதழ்விரியும்
விரிந்த நேரத்தில் தடைபடும் கூம்பல்கள்
என வாசம் விரியும்
வீடுகளின் தோற்றங்களிலும்
எதிர்ப்படும் முகங்களிலும்
மிதக்கும் தாவும் மலர்களென
பறவைகள் விலங்குகள்
முகிழ்க்கும் தூரத்து மலைகள்
பச்சைப் பூச்செண்டுகளாய் மரங்கள்
பெருமலரொன்றின்
ததும்பும் தேனூற்றில்
மிதக்கும் மகரந்தம் நானும்.
-எழிலரசி.

Saturday, May 8, 2010

கோடைகாலக் குறிப்புகள்

ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல
கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன்
வெயில்
எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக் கொல்கிறது
என் நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன

பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன
காலிக் குடங்கள் அலறுகின்றன
கோபத்துடன் நிமிரும் கைகளில் விலங்குகள்
பளபளக்கின்றன
வயிற்றிலடிக்கப்பட்டவர்களின் ஊர்வலங்கள் நகர்கின்றன
தார்ச்சாலை உருகி
பாரவண்டிக்காரனின் கால்கள் புதைகின்றன

காற்றைக் கடந்தன யாருடையதோ சொற்கள்:
'கொடுமையானது
இந்த கோடைக் காலம்'
இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடை காலத்தில்...
- சுகுமாரன்.

என்றென்றைக்கும் ஆனவன் நான்

இருமைகள் என்பது எதார்த்தம் எனில்
அதில் ஒரு கை அள்ளி
என் கண்களைக் கழுவுவேன்
இரவு பகலோ, இறப்போ பிறப்போ
இருமைகள் றெக்கைகளாக
ஒரு பறவைக் கூட்டமாய்
பழுப்பு வானில் பறந்து திரிவேன்


மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி
அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்
இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்
இடமோ பொழுதோ வெளியோ
சிந்தும் இன்மையின் இனிமையை
பருகி மகிழ்வேன்


ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்
எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற
ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது
அதன் வெண்மணற் பரப்பில்
கோபுரங்களும் மலைகளும் கடல்களும்
நகரங்களும் ஆகாயமும் கூட
சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்
புதைந்து கிடக்கின்றன


என் புல் வெளியில் மரணம்
ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்
நான் ஒரு நாகலிங்க மரமாவேன்
என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்
பூக்களாய் தொங்கும்
எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.
-சமயவேல்

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை

நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை

டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்

தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது

இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது

கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது

திறந்தவெளிக் காற்று
யாருக்கு கிடைக்கும்

எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.
-மு.சுயம்புலிங்கம்.

பீசாப் பிள்ளைகள்

சாணத்தால் மெழுகிய
அத்தை வீட்டுத் திண்ணை
கிரானைட் பளபளப்பாய் மின்னியது.
தீற்றுக் கல்லினால் தேய்க்கப்பட்டதால்.

அவித்த பனங்கிழங்கை
மேல்சட்டை
உரித்துப் போட்டாள் அத்தை.

நுனிகடித்து சர்ரென
கிழங்கைப் பிளக்க
பளீரென வெளிப்பட்டது
இளஞ்சந்தன நிறத்தோடு மணம்.

மெத்தென்ற திசுக்களாய் இருந்தது
முதலில் ருசித்த குருத்து.

உரிக்கச் சுலபமாய் வந்தது.
வரிக்கோடாய் விழுந்திருந்த
மெல்லிய நார்கள்.

திரண்ட கிழங்கை
சடக்கென ஒடித்து
தேங்காய்த் துண்டுடன் மெள்ள
வாய்க்குள் சுவை கூடியது.

இந்த அனுபவம்
எப்படிச் சொல்வது ?
பிசினைக் கடிப்பது போல் இழுத்து
"பீசா" தின்னும்
என் பிள்ளைகளுக்கு.
- கு.ரா.

காசு

அம்மா...
நலம், மாப்பிள்ளையும்
நானும்.

நீ செய்து விட்டுப் போன
ஆடி மாச
அசத்தல் சீரால்.
வாம்மா... போம்மா..
வாய்நிறைய அன்பு
அத்தைக்கு என் மீது.

எதிர் வீட்டு
மாமியார் மருமகளுக்கிடையே
மல்யுத்தம்.
பிறந்தநாள் பரிசாய்
நீயளித்த
கடிகாரம் பார்ப்பதற்காகவே
அடிக்கடி மணி பார்க்கிறார்
மாமா.

மாதா மாதம்
நீ கொடுத்தனுப்பும்
அரிசி, பருப்பு,
அஞ்சல் வழிப் பணம்...
தலைகால் புரியவில்லை
மாம்பிள்ளைக்கு..

மலைக்குப் போன
மச்சினருக்கு
நீ செய்த மரியாதை
உறவுக் காரங்க மத்தியில்
ஒசந்த இடம்
நமக்கு.

சமைஞ்சு நின்ன
நாத்தனாருக்கு
நீ தந்த வளையல்தான்
ராசி நகையாம்.

அதற்குப் பின்னால்
அணி வகுத்ததாம்.
ஐந்தாறு வலையல்கள்
ஆமாம்...
நீ சிறுநீரகம்
விற்ற காசில்
மிச்சம் மீதி இருக்கிறதா?

அடுத்த வாரம்
வருகின்றோம்
மாப்பிள்ளையும்
நானும்
- கவிஞர் உமா சக்தி.

என் ஏகாந்த வனம்

எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
என் அடர்ந்த வனங்களில்
படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ
ஏனோ இப்போது
என் காட்டில் குயில்கள் எல்லாம்
கூவித் திரிகின்றன
உன் பெயரை....
உன் வருகைக்குக் காத்திருக்கும்
என் வாசனைப் பூக்கள்....
நீ கால் நனைக்க
கன்னம் சிவக்கும்
என் காட்டு நீரோடை.....

எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
ஏனோ இப்போது
என் வசமில்லை என் வனம்
ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்
என் ஏகாந்த வனத்தில்......?
-ஜான்சி ராணி.

சராசரிகளில் ஒருத்தி

குற்றத்தை சுமத்தும் அளவிற்கு
நான் குற்றமற்றவளோ
குற்றத்தை சுமக்கும் அளவிற்கு
நான் குற்றவாளியோ அல்ல..

சரியும் தவறுகளும் உடைய
சராசரிகளில் ஒருத்தி..

திருத்திக் கொள்ளச் சொன்னால்
திருத்திக் கொள்வேன்..
பொறுத்துப் போகச் சொன்னால்
பொறுத்துப் போவேன்..

எனக்கும் உன்னுடைய
கனவுகளைப் போலான
கனவுகள் வந்து போகின்றன..
நீ அடைக்காக்கிறாய்
நான் பொரித்து விடுகிறேன்..
-இசை பிரியா.