Monday, May 4, 2009

சமாதானம்

சமாதானம்
முதல்முதலாக
ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்தபோது
சமாதான விரும்பிகள் ஒன்றுகூடி
ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்கள் மீண்டும் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்த
போது
சமாதான விரும்பிகள்
நீண்டநேரம் தம்முள் விவாதித்து
மீண்டும் ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்களும்
விடாது ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்து வந்தன
சமாதான விரும்பிகளும்
தளராது
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஆடுகள் ஒன்றுதிரண்டு ஓநாய்களை எதிர்த்தபோது
சமாதான விரும்பிகள்
மீண்டுங் கூடிப்
போரை எதிர்த்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்

ஆடுகள் தமது கொம்புகளைப் பிரயோகித்ததில்
ஓநாய் ஒன்று கொல்லப்பட்ட போது
கொம்புகளாற் தாக்குவது
யுத்த விதிகட்கு முரணானது எனவும்
பற்களையும் நகங்களையும் விட வேறெதையும்
பாவிப்பது
அநாகரிகமானது எனவும்
சமாதான விரும்பிகள்
புதிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஆடுகட்குப் பற்களாற் போர் புரியத் தெரியாததாலும்
தமது குளம்புகள் மொட்டையானவை என்பதாலும்
கொம்புகளாலேயே போரிட்டன
சமாதான விரும்பிகட்குப்
போரை நிறுத்த வழிதெரியாததாலும்
தீர்மானங்களை நிறைவேற்றுவதை விட
வேறேதும் இயலாததாலும்
ஆடுகளின் அநாகரிகமான போர்முறையைத்
தொடர்ந்துங் கண்டித்துத்
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்

ஓநாய்கள்
சமாதானத்துக்கு உடன்படாவிட்டாலும்
ஆடுகள் அநாகரிகமானவை என்ற் கூறி
அவற்றை அண்டுவதை நிறுத்தின
சமாதான விரும்பிகள்
ஆடுகளின் அநாகரிகமான நடத்தையை
இன்னமும் மன்னிக்க மறுக்கிறார்கள்
ஆயினும்
ஆடுகள் பாதுகாப்பாக உள்ளன.

-சி. சிவசேகரம்.
"போரின் முகங்கள்".