Wednesday, December 25, 2013

கவிதை இறகு- மார்கழி


உறைப்பு

செம்மிளகாய்ச் சரங்கள்
காய்கின்ற முற்றத்தில்
அலகைக் கொத்தி
காரக் கெக்கெரிப்பில்
கிறுகிறுத்துச் சுற்றும் 
செவலைக் கோழி

வாடிப்போன பூவின்
மகரந்தச் சூலில்
உறைப்புச் சுவை கண்டு
சுழித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி

அடுப்பிலே
குழலூதிக் குழலூதிக் 
காந்திச் சிவந்து
கண்ணிமைகளும் தீயுமெனத்
தவிப்பாள் அம்மா

துரத்திய தேன்குளவி
புருவப்பட்டையில் கொட்டி 
புடைக்க வைக்காதவரை
தேன்குளவியில் காரமிருப்பது
தெரியாது எனக்கு

கேப்பக் கூழ்
கரைத்து விட்டால்
உப்பு வத்தல் இல்லாமல்
ஒத்துழைக்க மறுக்கும்
நாவின் அரும்புகள்

பழைய சோற்றுக்கும்
பச்சை மிளகாய்க்கும்
இருப்பதுபோல்
பண்டப் பொருத்தம்
வராது வேறெதற்கும்

விதவிதமாய் எத்தனையோ
ருசிபேதம் இருந்தாலும்
உறைப்புக்கு ஒரே பழம்
இனிப்புக்கு மட்டமேனோ
பழங்கள் நூறு

விட கேட்டுப்போனால்
சொல்லவில்லை
வெட்டரிவாள் ஏந்திய
சுடலைமாடன்

அவன் பாவம்
எவ்வளவு காரந்தான்
சாப்பிட்டானோ
நாக்கத் தொங்கப்போட்டு
எனக்கேம் தெரியாதென்று
வெறித்திருக்கிறான் வெளிய


- வே.ராமசாமி

கவிதை இறகு - கார்த்திகை

துர்க்குறிகள் 
அங்கும் இங்கும்
சிதறிய
நாளிதழோடு
மிஞ்சிய
தேனீர்க் கோப்பைகளோடு

எனக்குரிய இடத்தை
மீண்டும்
அழுத்திய வண்ணம்

மூலையில் ஒதுக்கிய
குப்பைகளோடு
பாதி வெட்டிய
காய்கறிகளோடு

என்னை
மெல்ல மெல்ல
விழுங்கும் வீடு

இறுதியில்
நீ கேட்பாய்
என் பயணம் பற்றி

உனக்குப்
புரிந்த மொழியில்
உனக்கேயுரிய
அச்சுத்தலோடு

எனக்கே உரித்தான
மென்மையோடு
பதிலளிக்க நான்
நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பேன்

விளக்கமுடியாத
புதிர்களோடு
உனக்கு விளங்காத
என் வெளிகளோடு
நான்
என்னுள்
நிரம்பிக் கிடக்கின்றன
ரகசியங்களோடு
துர்க்குறிகள்

விளக்குடன் விளையாடும்
குழந்தையின் குதூகலம்
உனக்குள்

உனக்குப் புலப்படாமல்
போர்களை நிகழ்த்தியபடி
என் மௌனம்

-கி.கலைமகள்.

கவிதை இறகு -ஐப்பசி

வரையறைகளை எழுதுதல்
ஒரு பெண் சொல்லை
எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம்?
நிச்சயமாக கலகலப்பின் முத்துக்களாக அல்ல.
அதன் சிகப்புக்கூட மாதுளையுடையது அல்ல.
அருங்கிளியின் பாடலாக அல்ல.


கூறியது கூறலில்
அது
புயலின் நாற்சந்தியில் சுழலும் கைகாட்டி.
திசையில் கவனமில்லாத அது
வரைபடத்தின் தடம்கூட அல்ல.
சேருமிடம் அதன் நோக்கமல்ல.


சில நேரங்களில்
அது நிராசைகளின் கொலுசு.
சில நேரமோ அது
உபரியற்ற விழைவுகளின் வேண்டுதல்.
இன்னும் சில நேரமோ
பாதைகளோடு கண்ணாமூச்சியாட
அவாவும் மின்னல்.


விழியில் உறுத்தும் ஒளியின் நறுக்கு.
சடுதியில் பொருளாகாமல்,
பிரமிப்பில் வைரத்தை நினைவூட்டாமல்,
இறைகட்டளைக்கு முன்னோடி ஆகாமல்,
எந்த ஒழுக்கத்தோடும் சேராமல்
அந்தச் சொல்
சுதந்திரத்தோடு நமக்கிருக்கும் இணக்கம்.


அதனோடு நாமிருக்கும் வெகுதூரத்துக்கான துக்கம்.
தந்தைமையை அடுத்துக் கெடுக்கும்
வாக்கியங்களின் சீட்டுக்கட்டில்
ஒரு ஜோக்கர் துருப்பு.


-பெருந்தேவி.

Tuesday, October 15, 2013

கவிதை இறகு - புரட்டாசி


வாமனன்

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
ஓரடி பூமிமேல் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேசியைப்போல பேசுவது என்ன்?
குடையும் மறைப்புமில்லாமல்.

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
இரண்டாவது அடி ஆகாயத்தில் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேட்டைக்கிறங்கிய
யட்சியைப்போல பேசுவது ஏன்?
மறைப்பும் குடையுமில்லாமல்.

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
எனக்கு உன்மேல் நேசம்
ஆனால்
மூன்றாமடியை என் உச்சியில் அழுத்தி
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்ன இதன் அர்த்தம்?

முடிவடையாத அந்த விசாரணைக்கும்
காலடியிலிருந்து நழுவிய பூமிக்கும்
தலைமுறைகளிடமிருந்து மறைந்த ஆகாயத்துக்கும் மேலாக
நான் சொன்னேன்

எனக்கு உன்னிடம் நேசம்
குடையும் மறைப்புமில்லாமல்..
பயமும் பாசாங்குமில்லாமல்.

-சாவித்திரி ராஜீவன் (மலையாளம்) 

Friday, August 23, 2013

அவள் பிரபஞ்சத்தின் வாசகிஅவன் எழுதுகோல் காதலன்
அவள் பிரபஞ்சத்தின் வாசகி
காலம் அவர்களை நேர்க்கோட்டில் நிறுத்தியது.
அங்கு கனவு போன்ற ஒரு சிறுகதை
உருவாவதாக அவர்கள் நினைத்தார்கள்
அவன் வேண்டும்போது அவள்
தன்னை ஒரு முத்தமாக மாற்றிக்கொண்டாள்.
அவள் விரும்பும்போது அவன்
பெயரற்ற இசையாக வெளிகளில் கரைந்தான்
சிறுகதைக்குள் இருக்கும் அவன்தான்
அந்தச் சிறுகதையை எழுதுவதாக
அவன் நம்பினான்.
கனவிலுள்ள அவள்தான் நிஜமென்று
அவளும் நம்பினாள்.
அகாலம் சிரித்தது.
அவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்
தான் வசித்த கனவு கலைந்த கோபத்தில்
அவள் பைத்தியக்காரியாகவும்
களவுபோன எழுதுகோல் தேடி
அவன் நாடோ டியாகவும்
நமக்கு மிகவும் பழகிய வீதிகளிலேயே
திரிந்துகொண்டிருக்கிறார்கள்.


-கவிதா.

கவிதை இறகு -ஆவணி

நீ...நான்...மற்றும்...
சிறகை அசைத்தேன் 
வெளியில் பறந்தேன் 

தானியம் கண்டு 
தரையை தொட்டேன் 

கிளறிப் பார்க்கும்முன் 
சிக்கினேன் வலையில் 

எத்தனை அசைத்தும் 
எழும்பலை சிறகு 

எதிர்பார்ப்புடனே 
எங்கும் என் துழாவல் 

என்றோ வரலாம் 
என் போல் பறவை 

சிறகை அசைத்து 
சிறகை அசைத்து 

வெளியில் பறப்போம் 
வலையுடன் நாங்கள்

 -தி.சந்தானம்
நீ...நான்...மற்றும்...

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது

நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.
ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.
உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?
உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக… பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி (மலையாளம்)

Wednesday, July 31, 2013

கவிதை இறகு- ஆடி

உன் மனது 
எத்தனை பெரிய மலர்

உன் மனது 
எத்தனை பெரிய அகல் 

உன் மனது
எத்தனை பெரிய கோட்டை

உன் மனது
எத்தனை பெரிய புதிர்

எல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம் !


-விஞர் மகுடேஸ்வரன்.

Wednesday, July 24, 2013

அவன் அவள்

அவளுக்குத் தெரியும் அவனை. 
திரும்பத்திரும்பத் தேடி வருவான். 
அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான். 
அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது. 
அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக்

கூடியவள். 
இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு. 
இனி நடக்கவிருப்பது வினை. 
விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன் 
வினைக்கு என்ன ஆவான். 


-விக்ரமாதித்யன் நம்பி.

Friday, July 19, 2013

காதலாய்


அன்பை வார்த்தைகளில் 
சொல்வதை விட 
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..

அன்பை எழுத்துக்களில் 
பதிய வைப்பதை போல 
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..

அன்பை புரிந்து கொள்ள 
மறுப்பது போல 
மிக மோசமான வலி எதுவுமில்லை..

அன்பை தயவு தாட்சண்யமின்றி 
மறுதலிப்பது போல 
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை.. 

அன்பை அது எவ்வளவு ஆழமாயினும் 
புறக்கணிப்பது போல 
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை.. 
-இவள் பாரதி.


என் வீட்டின் மல்லிகைச் செடியில்
பூத்திருக்கும் பூக்கள் பற்றியோ…
ரோஜா செடியில் பூத்திருக்கும்
ரோஜாக்களைப் பற்றியோ..
முருங்கை மரத்தில் வால் வாலாய்
தொங்கும் முருங்கை காய் பற்றியோ..
நெல்லி மரத்தில் கொத்துக் கொத்தாய்
ஒட்டியிருக்கும் நெல்லிக்கனிகள் பற்றியோ..
கொய்யா மரத்தில் பூக்கள்
விட்டிருப்பது பற்றியோ…
உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?
அதைப் பற்றியெல்லாம் நம்
திருமணத்திற்கு பிற்பாடு ஆற அமர
பேசிக் கொள்ளலாம்….
முதலாக என்னை காதல் செய்!
-வா.மு.கோமு .

உன் கனத்த கதவுகளை 
அகலத் திறந்துகொண்டு 
இருண்ட காலங்களில் 
வெளிச்சமாய் வருவேன் நான் 
எனினும்...
எனக்காக காத்திராதே.
-மணிபாரதி துறையூர்.

இந்த இரவையே
உனக்கு
கடிதமாக அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா!
-பழனிபாரதி.

நமது முதல் சந்திப்பில்
நீ எனக்காக செய்த புன்னகைக்கும்
அப்போதே தெருவில் எவனோ உரைத்த
அசரீரிக் குரலான
”சாவுடா மவனே”வுக்கும்
என்ன தொடர்பிருக்குமென்று
யோசித்துக் கொண்டிருக்கும்போதே
சுவாசம் திணறத் துவங்கிவிட்டது!
-குகை.மா.புகழேந்தி.  

யாருமில்லாத அறைகளிலெல்லாம்
காதலை
காதலிக்க முடியாது
எல்லோரும் பார்க்கமுடிகிற
பௌர்ணமி நிலவைப் போல
பகிரங்கமாக காதலி
அதற்குப் பெயர்தான்
காதல்!
-குகை.மா.புகழேந்தி.  

பயம்


நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய 
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ 
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது 
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.

-கல்யாண்ஜி.

ஒரு மரத்தின் பெருவாழ்வு


எங்கோ வளர்ந்த மரங்கள்
நமக்கான கனிகளை அனுப்பிக்கொண்டிருப்பது
பக்கத்திலிருக்கும் மரங்களை
பாதுகாப்போம் என்கிற நம்பிக்கையில்தான் .
முதல் இலையின் துளிர்த்தலுக்கும்
கடைசி இலையின் உதிர்தலுக்குமிடையிலிருக்கிறது
ஒரு மரத்தின் பெருவாழ்வு .
இலைகளற்ற தனிமையை
கடப்பதுதான்
மரங்களுக்கும் பெரும்பாடு .
இரைதேடிச் சென்ற பறவை
கூடு திரும்பும்வரை
குஞ்சுகளைத் தாலாட்டும் மரக்கிளை .
காடு
என்கிற சொல்லுக்குள்
எத்தனையெத்தனை மரங்கள் .
எல்லாவற்றையும்
கொடுத்துவிடுகின்றன மரங்கள்
பிறகும் கொலை செய்கிறோம்.
மரங்களிடமிருந்து விடைபெற மனசின்றி
வீட்டிற்குத் திரும்பினேன்
சட்டைப்பையிலிருந்தது ஓர் இலை.


-குகை மா.புகழேந்தி

Saturday, July 13, 2013

கவிதை இறகு - ஆனி

முகம் பூத்த நிறங்கள்
கோடைக்குப் பின்னான 
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில் 
வரையத் தொடங்கினாள் சிறுமி 
தன் வளையலால் வட்டத்தை 
அருகமர்த்திய இரு மலைகளிடையே 
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள் 
மேலும் சிலரோ 
கட்டங்களில் வீட்டையும் 
ந-இட்டு காகத்தையும் 
எப்படியேனும் 
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும் 
ஐந்தில் நாயையும் வரைந்து 
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை 
உடைத்துடைத்து ஒட்டி 
பூசிய நிறங்களால் 
பளிங்குச் சிலையென தகதகக்க 
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன 
முகமெங்கும் வர்ணங்களாக...
-ந.பெரியசாமி.

சாபம் அய்யா


கண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.
'மணக்கொல்லைக்கு' அழைத்திருந்தார்.

ஒரு முற்பகலில்
ஊரைச் சுற்றிக் காட்டினார்.

ரெட்டியார் கிராமம்.
பத்து பன்னிரெண்டு போலத்
தோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.
இடையிடையே சில இடிந்து கிடந்தன.
எருக்கு முளைத்திருந்தது.

"சாபம் அய்யா-
கழுத விழுந்து பொரளணும்!
குடியத்துப் போவணும்!"

டு இந்த வீடு இன்னு
சில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.
இங்க நின்ன இதான் பறவீரன் கோயில்.
அது பறவீரன் குளம்.
அந்த வீஒரு அழிஞ்சி மரத்துலதான்
தல கீழா தொங்கவுட்டு
வைக்கோலப் போட்டு கொளுத்துனாங்களாம்

இதான் அந்த நெலம்
அந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில
அப்புடி கம்பு வெளஞ்சிருந்துதாம்.
தோ, புலியூரு
அந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்
ஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்

கேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி
நெறமாத கர்ப்பிணி-
'பசிக்குத் திருட வந்தவன,இப்புடி
பண்ணிப்புட்டீங்களேடா பாவிவோளா'ன்னு
மண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.

அப்ப,
அப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க
இப்ப வித்து மாறிகிட்டிருக்குது
கொளுத்னவனுவோ வீடுங்க
எருக்கு மொளச்சி கெடக்குது"

நின்று நினைத்தேன்:
கோயில், அடையாளம் என்று நின்ற வேல்,
நாவாக அசைந்து சொன்னது.
'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும் 
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.

-பழமலய் 

முயற்சி


சறுக்கல் விளையாட
ஆசைப்பட்டான்.
‘சார்
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்க
ஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை
ஏறுதலே முயற்சி.

-பழ.புகழேந்தி

Wednesday, June 12, 2013

கவிதை இறகு -வைகாசிஅப்பாவிச் சாட்சியின் கேள்விகள்

நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸ்திவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும் 
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன

வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை

நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ 
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த் தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?


-பாவண்ணன்.

கவிதை இறகு -சித்திரை


தனித்து தோப்பாகு
கண் துடைக்க மாட்டேன்
ஒரு கவளம் ஊட்டமாட்டேன்
தலைகோதி
ஆறுதல் தரவும் மாட்டேன்
துக்கத்திற்கான ஆறுதல்
என்னிலிருந்து கிடைக்காது

ஆறுதல் உனது மோட்சத்தை
எந்திரத்திலிட்டு மாவாக்கியது
உதிரப்பாசம்
உச்சியிலிருந்து வீழ்த்தியது

என் மென்மையான இறகின் கீழ்
நீ கதகதப்பாய் இல்லை
கருகிப் போனாய்

நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.

புரிந்து கொள்
மிகு பாசத்தில் நெட்டி வளர்த்தால்
பள்ளிப் பிள்ளையாய்
பலப்பம் தின்பாய்
கண்டெடுக்கச் சொல்லி கத்தினால்
பழத்தின் முள்பிளந்து
வாழ்வின் ருசியறிவாய்.

-எழில்வரதன்.

Tuesday, March 19, 2013

கவிதை இறகு - பங்குனி

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி


அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது


அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன


அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு


மலையாளம்  சச்சிதானந்தன்
தமிழில் நிர்மால்யா