Saturday, October 31, 2009

பிறப்பொக்கும்...

ஆண் என்று சொல்லி
பெருமைப்பட
எதுமிருப்பதாய் தெரியவில்லை.

சாவு வீடுகளில்
மாரடித்து கதறியழும்
பெண்களை கவனியாதது போல்,
கதறவும் முடியாமல்
அழவும் தெரியாமல்
திண்ணையில் வாய்ப்பொத்தி
வெறுமனே உட்கார்ந்திருக்கும்
ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம்.
-மு.முருகேஷ்.

பேசப்படாதவள்

பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை

பாடலிபுத்திரத்தில்
அவன் தேர் நகர்ந்த வீதியும்

நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!
சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்
"அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!"
கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!


சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.
-தமிழ்நதி.

Friday, October 23, 2009

கவிதை இறகு-ஐப்பசி

எல்லா வீடுகளையும் போலவே
கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.

'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கிற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.
மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா.
முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;

கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;

மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
-நா. முத்துக்குமார்.

Friday, October 9, 2009

எஸ்.ச‌ஹானா மெர்லின் 4ஆம் வகுப்பு ,ஆ பிரிவு.

சபலம் நிறைந்த கூட்டத்தில்
என்னை நெருங்கி
பெண்கள் பற்றிப் பேசினான்
வீடு, வாசல், படிப்பு
அப்பா, அம்மா, காதலன் என
எல்லோரையும் பற்றிக் கதைத்து
நேரம் பார்த்து விடைபெற்று
இயல்பாய் இருந்தேன்

நேசம், காதல் போன்ற
உணர்ச்சிகளற்று
ஸ்நேகம் பேணிக் கை குலுக்கி
காதலின்றிப் பிரிவது கடினமாயில்லை.

-தான்யா வியாதி வயோதிபம்
மகளுக்குக் கல்யாணம்
தொலைந்த உடைமைகள்
ஆயிரம் சொல்லி
பரிதாபம் விற்றுக் காசு பார்க்காமல்
நீண்ட அலுமினியக் குச்சி
கறுப்புக் கண்ணாடியுடன்
ஓடும் ரயிலிலும்
தடுமாறாமல்
பிளாஸ்டிக் கவர், பேனா ரீபில் விற்கும்
அந்த மனிதனைப் பார்க்கும்போதெல்லாம்
ஏதேனும் வாங்குங்கள்
நீங்களும்
-இந்திய ராஜா.அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில்கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா ?

ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த
பறவை விலங்கு இறந்த வேளையில்
நெருங்கிய உறவை இழந்ததுபோல
துக்கப்பட்டதுண்டா ?

அறமுகமில்லாத ஒருவர்
முகவரிக் குழப்பத்தில் திண்டாடிய போது
தெரிந்தவரைக்கும் சரியாக
வழகாட்டியதுண்டா ?

நலிந்தவர் மூத்தவர்
நிற்கத் தடுமாற
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை
விட்டுக் கொடுத்ததுண்டா ?

விபத்தில் சிக்கி
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக
நெஞ்சு கிடந்து
அடித்துக்கொண்டதுண்டா ?

பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா ?

அப்படியானால்
வாழ்த்துக்கள்

இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்.
-சகாரா
மூடிய மண்ணுக்குள்ளிருந்து
பிரபஞ்சத்தை பார்க்க
எந்தவித ஜன்னலும் இல்லை.

இரவும் பகலும் மாறிமாறிச் சுழல்வதை
அறிய முடியாததொரு தருணத்தில்
தனிமையின் தீராத வலி.

பேச்சுத் துணைக்கு ஆளற்றவனத்தில்
காற்றின் ஓசையும்
தலைவிரித்தாடும் மரங்களின் சலசலப்பும்
விட்டு விட்டு தொடரும் பீதியென

விரல் நீட்டிப்பார்க்க மறுத்த
வேர்களின் நுனியில்
மெளனம் நிரப்பப்பட்டது.
இமைவிரித்து மூடும் கணங்களில்
எவ்வித சலனமுமற்று
கும்மிருட்டுப் பயம் தேங்கிக் கிடக்கும்

ஒளியென்று சொல்ல எதுவுமில்லை

-ஹெச்.ஜி.ரசூல்.
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.
-காசி ஆனந்தன்.
பதங்கமாதலின் விரிவைப் படித்துக்
கொண்டிருந்தாள் சஹானா
வீட்டில் சஹானா என்றும்
பள்ளியில் மெர்லின் என்றும் அழைக்கிறார்களாம்
யாரைப்பிடிக்கும் என்கையில் மெட்ராஸ் அப்பா என்கிறாள்
சென்னையிலே குப்பைக்கொட்டும் நான்
சிரித்த‌ப‌டியிருக்கிறேன்
திடம்
திர‌வ‌மாகாம‌ல் வாயு நிலை மாற்ற‌மாம்
ப‌த‌ங்க‌மாத‌ல்.
சூட‌ம் எரித‌ல் எ.கா. என்கிறாள்
ம‌ழலைப்பேச்சில் ம‌றுபடியும் ம‌றுப‌டியும்
ப‌த‌ங்க‌மாக்கிடுகிறாள்
அப்பாவுக்கு முத்த‌ம் கொடு
என்கையில்
ச‌ஹானாவாகி உயிர்ப்பிக்கிறாள்
எஸ்.ச‌ஹானா மெர்லின் 4ஆம் வகுப்பு ,ஆ பிரிவு.
-கென். எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.
-அனிதா.
எப்பவாவது ஒரு
கொக்கு பறக்கும்
நகருக்கு மேலே என்
கவசமும் வாலும் நீளும்
உருகி ஓடும்
ஊருக்கு வெளியே
-தேவதச்சன்.
நீ விரட்டிய
பிரகாரப் புறாக்கள்
வட்டமடித்து விட்டு
மீண்டும் வந்தமருகின்றது
உன் விரட்டலை யாசகம்
பெற.
நீ மீண்டும் கைகளை வீசுகின்றாய்
உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.
-ஆ.முத்துராமலிங்கம்.

Monday, October 5, 2009

உன்னை பிரிவதற்கில்லை நான்!

கரும்பூதமாய் தெரிகிறது
கல்லடிப் பாலம்...
அப்பால், விரிந்த வெளியில்
துயர்போல் இருள் கவிந்துளது...
உறைந்த மௌனத்தினூடு
ஒளியிழந்த வாவியின்
அலைகள் கரையுரசும்
சிறு சிறு ஒலியும் தெளிவுறக் கேட்கும்...
இருள் சூழ்ந்த என் சிறு நகரை,
நேற்றைய நாள் நிகழ்வுகளின்
கீற்றுகள் நெஞ்சிற் கிளர
இங்கிருந்து துயருடன் பார்த்திருப்பேன்!
பௌர்ணமி இரவில்
தங்கச் செதில் முளைத்து
தகதகக்கும் மட்டுநகர்
வாவிக் கரையோரம்
காற்றில் நடக்கும் சுகத்தினை இழந்தேன்!
விளக்குகள் ஒளி சுடரும்
உன் தெருக்களில்
நான் உலவிய இரவுகள் போயின!
எழிலும் வளமும் நிறை
என்சிறு நகரே!
என் இதயத்தினின்றும்
உன் தொப்புள் கொடி அறுந்து போயிற்று
உன்பால் பசியுறுகிறேன் நான்
இன்று உன் வனப்புகளை
உயிர்ப்புடன் உணர்கிறேன்

பொன்னும் கனியும் விளையும்
உன் இளமையில் காதலுறுகிறேன்
உன் வாசத்தை
நுகரத் துடிக்கிறது
என் நாசி
உன் தெருக்களை
அளைய விழைகிறது
என் உடலம்
உன் தேனை உறிஞ்சி
பொலிந்து நிமிர்வுற
அவாவி நிற்கிறது என் இதயம்!
உன்னை பிரிவதற்கில்லை நான்!


-வாசுதேவன்
"வாழ்ந்து வருதல்"

Sunday, October 4, 2009

நானறியா வனமொன்றில்

மீன் தொட்டியிலிருந்து
துள்ளி விழுந்த சிறு மீனாய்
உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும்.
நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய்
நானறியா வனமொன்றில்
வேட்டை மானனென.
- ஆ.முத்துராமலிங்கம்
இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு
எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான்
எதுவுமில்லை

விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

- சல்மா
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

என்னை அழி
அல்லது
புறந்தள்ளி கழி

மகிழ்ச்சி தானெனக்கு

அழிக்க முயன்றால்
மூளையில் இருக்கிறேனென உணர்
கழிக்க முயன்றால்
இதயத்திலிருக்கிறேனென உணர்

எப்படியான போதும்
இருக்கிறேன் நான்.
-பாலபாரதி.
எப்படி இருக்கே?
அம்மா அப்பா நலமா?
அண்ணன் சௌக்கியமா?
ஊர் கதை என்ன?
நண்பனைப் பார்த்தாயா?
உன்னை மறந்தே போனேன்...
எல்லாம் சுகம்தானே??
..................
கேட்கும் மற்றவர்க்குத் தெரியாது,
இறந்த உறவும் இருந்த உறவும்
திடீரென்று ஓர் இரவில்
'இல்லை' என்றானது...

எனக்கு, எல்லாமே..இனி
நீயென்றாகிப் போனது!!
- வேதா மஹலஷ்மி.
நீ
அந்தக் கடிதத்தை
எழுதாமலேயே விட்டிருக்கலாம்
எழுதிய கடிதம்தான்
வாசித்தால் முடிந்துவிடும்

எழுதாமல் விட்டிருந்தால்
முடிக்காமல்
வாசித்துக் கொண்டே இருந்திருப்பேன்
வந்த கடிதத்தில்
இருப்பதுதான் இருக்கும்

வராமல் விட்டிருந்தால்
நினைப்பதெல்லாம் இருந்திருக்கும்
நீ
அந்தக் கடிதத்தை
எழுதாமலேயே விட்டிருக்கலாம்

-வாசுதேவன்
வாழ்ந்து வருதல்

சகல கிரகங்களும்
சனீஸ்வரனாகி இருந்தன
அவன்
காதலிக்க
துவங்கி இருந்தான்
செல்வேந்திரன்
ஓடிக்கொண்டிருந்தது நதி.
கரையில் அமர்ந்திருந்தேன்.
வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய்
நீ
நதியின் சுழல், ஆழம், குளிர்மை
எனப் பேசிக்கொண்டே போனாய்.
ஓடிக்கொண்டிருந்தது
நதி.

கேட்டுக்கொண்டிருந்தேன்
ஒரு முடவனைப் போல.
ஏதோ ஒரு தருணத்தில்
உன் தலை சிலுப்பில்
பூ தூறலாய் விழுந்தது
நதி என் மேலும்.
நீந்த முடியாத நதி.
-மாலினி புவனேஷ்

Thursday, October 1, 2009

ஞானாட்சரி நீ சொல்வாயா?

யார் யார் என்னை பார்க்கிறார்கள் ?
பார்க்கிறார்கள் என்ற உயர்திணை
முடிவு கூடத் தவறு தான்.

எது எவரால் பார்க்கப் படுகிறேன் என்பதே சரி.
வீதியில் நடந்தால் கல்லாப் பெட்டிக்
கிண்ணத்து வழவழப்பைத் துழாவிக்கொண்டு
கடைக்காரர் என்னைப் பார்க்கிறார்.

தெருமாறிச் செல்லும் நாய் பார்க்கிறது
அதைத் தொடரும் மற்றொரு நாயும் பார்க்கிறது
ஒரு சிறுவன் ஒரு சிறுமி அவர்களிடம் நானொரு
காதல் கடிதத்தை இன்னாளிடம்
கொடுக்கச் சொல்வேனோ என்று பார்க்கின்றனர்.

பெருமாள் மாட்டுடன் எதிரில் வந்தவன்
ஒன்றும் கேட்காமல் என்னைப் பார்க்கிறான்.
அவனது மாடும் என்னைப் பார்க்கிறது.
வெள்ளைப் புள்ளிகள் மேவிய ஆடுகள்
கிளுவை இலைகளைப் புசித்துக் கொண்டு
என்னைப் பார்க்கின்றன.
தபால்காரர் கையில் அடுக்கிக் கொண்ட
கடிதக் கடடுகளை விரல்களால் பிரித்து
எனக்கு கடிதம் இல்லை என்று
சொல்லாமலே என்னைப் பார்க்கிறார்.

குட்டிகள் பின்பற்ற தெருவின் ஓரத்தில்
குறுங்கால்களோடு நடக்கும்
பெரிய பன்றி என்னைப் பார்த்தது.
ஆனால் குட்டிகள் என்னைப் பார்க்கவில்லை
தாயைத் தவிர யாரையும் பார்க்கத்
தெரியாதவை. மேலும் இன்னும் வயதாகவில்லை

வரிசையாய் மின்சாரக் கம்பிமேல்
உட்கார்ந்திருக்கும் காக்கைக் கூட்டத்தில்
ஒன்றாவதென்னைப் பார்க்காமலா இருந்திருக்கும் ?

எல்லாம் எல்லோரும் என்னைப் பார்ப்பது
போலப் பிரமை எனக்கேன் வந்தது
ஞானாட்சரி நீ சொல்வாயா
எப்போதும் என்னை விமர்சிக்கும் உன் வாயால் ?
-ஞானக்கூத்தன்.

தமிழ்மொழி செய்த பாவம்

தமிழ்மொழி செய்த
பாவம்
தமிழ்நாட்டுத்
தமிழர்களுக்குத்
தாய் மொழியாய்
வாய்த்தது

ஈழத் தமிழர்கள் செய்த
பாவம்
தாய் மொழியாய்
தமிழ் வந்து
தொலைந்தது
-மதுரா பாலன்.

இடையீடு

சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை
எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.

எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று

-கவிஞர் சி.மணி.