Tuesday, December 21, 2010

உங்களின் எல்லாப் பாதைகளும்

உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

-சிவரமணி.

Monday, December 20, 2010

மழை

எந்த ஒரு உரையாடலும்
இல்லாத இடைவெளி
நிசப்தத்தில் உறைகிறது.
இடத்தில் இருந்தவாறே
உணர்வெழும்பி
வேறு இடம் துளாவுகிறது.

வெற்று இடைவெளியில்
எதுவும் இல்லாதபடியால்
உரிய உருவம் ஒன்றினை
அங்கு நிரப்பிக்கொள்ளுதல்
காற்றுக்கு சாத்தியமானது.

அந்தரங்கம் பேணத் தெரியா
இரவிலிருந்து
பகல் ஒளியைத் தேடிக்கொள்வது
பிரகாசம் நிறைந்த சூரியனுக்கு
சாத்தியம் ஆனதே.
குளிர்ந்த உடலைத் தழுவியபடி
எனக்கே உரிய மழை
என்னையே வந்து சேரும்.

என் பாதங்களைக் கழுவ
என்னைத் தழுவிக்கொள்ள
என்னைப் போர்த்திக்கொள்ள
நான் நடக்கின்ற வீதியெங்கும்
சிதறிக் கிடக்க
மழை
போதுமானது எனக்கு.

- பெண்ணியா.

கவிதை இறகு -மார்கழி

கடற்புறம்

காலமகள் மணலெடுத்து
கோலமிட்ட கடற்புறத்தில்
ஏழை மகள் ஒருத்தி.
முன்னே கடல் விரியும்
முது கடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
விழி தொடர நிற்கின்றாள்.

தாழை மர வேலி,
தள்ளி ஒரு சிறு குடிசை;
சிறுகுடிசைக்குள்ளே
தூங்கும் சிறு குழந்தை

ஆழ்க்கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூ வாசம்
தரைக் காற்று சுமந்து வரும்.

காற்று பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு.
கும்மிருட்டே குலைநடுங்கி
கோசமிட்ட கடல் பெருக்கு.

கல்லுவைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது.

திரை கடலை வென்று வந்தும்
திரவியங்கள் கொண்டு வந்தும்
இந்த சிறு குடிசை,
இரண்டு பிடி சோறு,
தோணி உடையான்
தரும்பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு;
பெருமூச்சு.

தானாய் விடி வெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்.
வாழ்வில் இருள் தொடரும்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்.