Saturday, November 28, 2009

என் பிரியத்தின் பிரவாகம்

உயிரின் கடைசித் துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களைப் பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்கூட்டை
என் இருப்பிடமாக்கினாய்
புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக்கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி தாகம் கூட்டினாய்
உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலே பெருந்துயராகிப் போனது


உன்னைக்காட்டிலும் போலியானது
என் காதலைக் கொழுத்து வளரவிட்ட
உன்னைப்பற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்கக்கூடும் . . .
- ந. லக்ஷ்மி சாகம்பரி
ஓடிக்கொண்டேயிருக்கிற நதி
போய்க்கொண்டேயிருக்கிற மேகம்
தினம் பூக்கிற மரம்
பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி
குரலெழும்பாமல் இசைக்கிற காற்று
வீடு முழுக்க வானம்
வானம் நிறைய பறவைகள்
அருகே, மிக அருகே
தொட்டுக்கொள்ளும் தூரத்தில்
என்றில்லாவிடினும்
என் குரல் கேட்கிற தொலைவில் நீ
இது போதும்,
இவை போதும்
வாழும்படிதான் இருக்கிறது -
வாழ்க்கை.
-சே. பிருந்தா

Wednesday, November 18, 2009

கவிதை இறகு -கார்த்திகை

முதலில் அவர்கள் இந்துக்களுக்காக வந்தனர்.
அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை.
ஏனெனில் நான் இந்து அல்ல
பிறகு முஸ்லீம்களுக்காக வந்தனர்
அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன்
ஏனெனில் நான் முஸ்லீம் அல்ல
பிறகு அவர்கள் சீக்கியருக்காக வந்தனர்
கொலையுண்ட சீக்கியரின் உறவினர்கள் கதறியபோது நான் ஒன்றும் சொல்லவில்லை
ஏனெனில் நான் சீக்கியன் அல்ல
பிறகு அவர்கள் கிரிஸ்தவருக்காக வந்தனர்
ஜன்மப்பகை தீர்க்கப்படும்போது எனக்கு ஒன்றும் ஆகவில்லை
ஏனெனில் நான் கிரிஸ்தவன் அல்ல
பிறகு எனக்காக வந்தனர்.
அப்போது நான் தான் அவர்களது முதல் எதிரி என்று சொன்னபோது
நான் உதவிக்காக கூக்குரல் எழுப்பும்போது தான் பார்த்தேன்
யாரும் இல்லாத பரந்த மைதானத்தில் தனியாக கொலையுண்டதை.
-மெளனப்புறா.

Saturday, November 7, 2009

ஊதாப்பூக்களோடு உனக்காக காத்திருந்தேன்...

இளவேனிற் காலத்தில்
திரும்பி வருவதாய்
சொல்லிப்போனாய்
ஊதாப்பூக்களோடு
உனக்காக காத்திருந்தேன்
இலையுதிர்காலம் தொட்டே

இலைகள் உதிர்ந்து
இளவேனிலும் வந்தது
நீ மட்டும் வரவே இல்லை
இதயம் கனத்துக் காத்திருந்தேன்
இன்னும் பல பருவங்கள்
அதன் பிறகும் நீ வரவே இல்லை
பிறகுக்கும் பிறகு வந்த
மற்றொரு இலையுதிர் காலத்தில்
இலைகளோடு சேர்ந்து
நானும் உதிர்ந்து போனேன்
கடைசி விருப்பமாக
நீ வரும் வழியிலேயே
என்னை விதைத்திருக்கிறார்கள்

நீ உணராமல் போன
என் இதயத்துடிப்பைப் போல் அல்ல
உன் பாதச்சுவடுகள் கூட
எனக்குப்புரியும்
என்றைகாவது நீ
என்னைத் தேடி வருவதை
சருகுகள் சொல்லும்போது
நான் விழித்துக்கொள்வேன்
அது ஒரு இளவேனிற்காலமாய் இருக்கும்.
-துறையூர் மணி.

Sunday, November 1, 2009

திசைபழகிய பிறகு..

நீண்ட
நேரம்
பற்றியிருந்ததில்
வெதுவெதுத்திருந்த
உன் விரல்களைச்
சற்று கை மாற்றலாம்
என்ற எத்தனிப்பை
வீழ்த்தியது

நீ
இன்னும்
இறுகப் பற்றியதில்
தண்ணென்று
கசிந்த
ஈரம்
-லீனா மணிமேகலை
"ஒற்றையிலையென"
எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்

-சுகிர்தராணி
"இரவு மிருகம்"
யாருடைய ஆட்காட்டி விரலையோ
பற்றியபடிதான்
திசைகளை வகுக்கிறோம்
திசைபழகிய பிறகு
தன் கைநழுவுமோவென்கிற
தாளவியலாத எளிய பதற்றத்தில் சீர்குலைகின்றன
எல்லா உறவுகளும்
-சல்மா
"பச்சை தேவதை"
வரிசை தப்பிய எறும்பு ஒன்று
வருகிறது தலையணை மேல்
அச்சுவார்த்த உடல்
சிறு அசைவுடன் நகர்கிறது

தலை தூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு

மீண்டும் தேடி எடுத்துக்கொண்டு போகிறது

மடியில் கட்டிவரும் என் அம்மாவின்
மரவள்ளிக் கிழங்கு வாசனையுடன்
- மாலதி மைத்ரி.
பேனாவின் ஈரம்
காயும் முன்
மனமே!
எண்ணியதை
சொல்லி விடு.

நிஜமாய் ஒரு பேச்சு
நிழலாய் ஒரு பேச்சு
பார்த்து பார்த்து
குணமும் மாறிப் போச்சு

நான் எப்படி என
நீ தீர்மானிக்காதே
இடம் மாறி
வலம் மாறி
எங்கும் செல்வேன்

வந்துவிடு என
நீ பணிக்க
வருவேன் என
நினைக்காதே
எல்லையே இல்லாத
பயணம் இது!
நீ
தொடரவும் முடியாது.
தேடலின்
ரகசியத்தை
நீ
தொடவும் முடியாது

என்னை அறிந்தவன்
புரிய முடியாது
என்னை உணர்ந்தவன்
பிரிய முடியாது
என்றாலும்-
நான்
இப்படித்தான்
என நீ
சொல்லி விடாதே

மாறுவேன்
காலத்திற்கு
காலம்.
மரணிப்பேன்
நிமிஷத்திற்கு
நிமிஷம்.
-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"