Wednesday, December 25, 2013

கவிதை இறகு- மார்கழி


உறைப்பு

செம்மிளகாய்ச் சரங்கள்
காய்கின்ற முற்றத்தில்
அலகைக் கொத்தி
காரக் கெக்கெரிப்பில்
கிறுகிறுத்துச் சுற்றும் 
செவலைக் கோழி

வாடிப்போன பூவின்
மகரந்தச் சூலில்
உறைப்புச் சுவை கண்டு
சுழித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி

அடுப்பிலே
குழலூதிக் குழலூதிக் 
காந்திச் சிவந்து
கண்ணிமைகளும் தீயுமெனத்
தவிப்பாள் அம்மா

துரத்திய தேன்குளவி
புருவப்பட்டையில் கொட்டி 
புடைக்க வைக்காதவரை
தேன்குளவியில் காரமிருப்பது
தெரியாது எனக்கு

கேப்பக் கூழ்
கரைத்து விட்டால்
உப்பு வத்தல் இல்லாமல்
ஒத்துழைக்க மறுக்கும்
நாவின் அரும்புகள்

பழைய சோற்றுக்கும்
பச்சை மிளகாய்க்கும்
இருப்பதுபோல்
பண்டப் பொருத்தம்
வராது வேறெதற்கும்

விதவிதமாய் எத்தனையோ
ருசிபேதம் இருந்தாலும்
உறைப்புக்கு ஒரே பழம்
இனிப்புக்கு மட்டமேனோ
பழங்கள் நூறு

விட கேட்டுப்போனால்
சொல்லவில்லை
வெட்டரிவாள் ஏந்திய
சுடலைமாடன்

அவன் பாவம்
எவ்வளவு காரந்தான்
சாப்பிட்டானோ
நாக்கத் தொங்கப்போட்டு
எனக்கேம் தெரியாதென்று
வெறித்திருக்கிறான் வெளிய


- வே.ராமசாமி

கவிதை இறகு - கார்த்திகை

துர்க்குறிகள் 
அங்கும் இங்கும்
சிதறிய
நாளிதழோடு
மிஞ்சிய
தேனீர்க் கோப்பைகளோடு

எனக்குரிய இடத்தை
மீண்டும்
அழுத்திய வண்ணம்

மூலையில் ஒதுக்கிய
குப்பைகளோடு
பாதி வெட்டிய
காய்கறிகளோடு

என்னை
மெல்ல மெல்ல
விழுங்கும் வீடு

இறுதியில்
நீ கேட்பாய்
என் பயணம் பற்றி

உனக்குப்
புரிந்த மொழியில்
உனக்கேயுரிய
அச்சுத்தலோடு

எனக்கே உரித்தான
மென்மையோடு
பதிலளிக்க நான்
நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பேன்

விளக்கமுடியாத
புதிர்களோடு
உனக்கு விளங்காத
என் வெளிகளோடு
நான்
என்னுள்
நிரம்பிக் கிடக்கின்றன
ரகசியங்களோடு
துர்க்குறிகள்

விளக்குடன் விளையாடும்
குழந்தையின் குதூகலம்
உனக்குள்

உனக்குப் புலப்படாமல்
போர்களை நிகழ்த்தியபடி
என் மௌனம்

-கி.கலைமகள்.

கவிதை இறகு -ஐப்பசி

வரையறைகளை எழுதுதல்
ஒரு பெண் சொல்லை
எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம்?
நிச்சயமாக கலகலப்பின் முத்துக்களாக அல்ல.
அதன் சிகப்புக்கூட மாதுளையுடையது அல்ல.
அருங்கிளியின் பாடலாக அல்ல.


கூறியது கூறலில்
அது
புயலின் நாற்சந்தியில் சுழலும் கைகாட்டி.
திசையில் கவனமில்லாத அது
வரைபடத்தின் தடம்கூட அல்ல.
சேருமிடம் அதன் நோக்கமல்ல.


சில நேரங்களில்
அது நிராசைகளின் கொலுசு.
சில நேரமோ அது
உபரியற்ற விழைவுகளின் வேண்டுதல்.
இன்னும் சில நேரமோ
பாதைகளோடு கண்ணாமூச்சியாட
அவாவும் மின்னல்.


விழியில் உறுத்தும் ஒளியின் நறுக்கு.
சடுதியில் பொருளாகாமல்,
பிரமிப்பில் வைரத்தை நினைவூட்டாமல்,
இறைகட்டளைக்கு முன்னோடி ஆகாமல்,
எந்த ஒழுக்கத்தோடும் சேராமல்
அந்தச் சொல்
சுதந்திரத்தோடு நமக்கிருக்கும் இணக்கம்.


அதனோடு நாமிருக்கும் வெகுதூரத்துக்கான துக்கம்.
தந்தைமையை அடுத்துக் கெடுக்கும்
வாக்கியங்களின் சீட்டுக்கட்டில்
ஒரு ஜோக்கர் துருப்பு.


-பெருந்தேவி.