Friday, June 11, 2010

கவிதை இறகு - ஆனி

தடைதாண்டி

நம் நேற்றைய சந்திப்பு
கடந்த பின் -
நீ -
உன்னை எந்நிமிடமும்
எதிர் கொள்ள
நான் தயாராகவே இருக்கிறேன்.

என் ஆத்துமமும், அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்கு
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை

நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.

எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!

ஓன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்

-ஆழியாள்.

நான்தான் மின் விளக்கு

'நான்தான் மின் விளக்கு’ என்று
அறிவித்தாள் சிறுமி
மாறுவேடச் சுற்றில்.
தொப்பி அணிந்து அதன் மேல்
ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.
மேலும் அவள் சொன்னாள்:
‘என்னை 1869&ம் ஆண்டு
அக்டோபர் மாதம் 9ம் தேதி
தாமஸ் ஆல்வா எடிசன்
கண்டுபிடித்தார்.
அன்று முதல் நான் இந்த
உலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.
என்னை ஈரக் கையால் தொடக் கூடாது’
என்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்.


‘அது சரி. இந்த பல்பு இப்போது
எரிகிறதா இல்லையா?’ என்றாள்
நிகழ்ச்சி நடத்தியவள்.
பதில் ஏதும் சொல்லாமல்
சிரித்தாள் மின்விளக்குப் பிரகாசமாக!
-முகுந்த் நாகராஜன்.

எங்கள் சாமிகள்!

லோகம் துன்பப்பட நேர்கையிலெல்லாம்
இவர்கள் அவதாரங்களாகிப் போரிடுவர்

துர்மிருகங்கள் பற்றிய பயங்களுக்கு
இவர்களின் நாமம் ஜெபித்தாலே போதும்

ஏழைபக்தனைப் பணக்காரனாக்கவும்
பணக்காரத்திமிரை ஏழையாக்கி அடக்கவும்
வெறும் திருவிளையாட்டுக்கள் கொண்டே
செய்யமுடிந்தவர்கள் இவர்கள்

யாருமற்ற அனாதைகளுக்கும்
பால்நினைந்தூட்டும் தாயினும்
சாலப்பரிந்து ஊட்டும்
காருண்யக்கதைகளின்
நாயகர்கள் இவர்கள்

இவர்கள்பால் பற்றுவைத்து
இவர்களே சரணென்று
இவர்களின் பசிதீர்க்க
பிள்ளைக்கறி படைக்கவும்
தயங்காத மானிடர்க்கு
மரணித்த குழந்தையையும்
உயிர்தரிக்க வைக்கும்
மாதிறனுடையவர்கள்

தீமையை அழிக்கவே சமரெனினும்
அரசனைப்போல் அன்று கொல்லாமல்
நின்று கொல்லும்
நிதானம் புரிந்தவர்கள் இவர்கள்

இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!

-செல்வநாயகி.
"நிறங்கள்"

பின்னிரவு மழையில்

தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.
-அய்யனார்.

காலடிகள் என்கவிதை!

காலமெனும் பெரும்பரப்பில்
காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
கொண்டமகள் நடக்கின்றாள்!

ஞாலமெனும் பெரும்பரப்பில்
ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
முனைந்தமகள் நடக்கின்றாள்!

அளவில்லாப் பெரும்பரப்பில்
ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
மறந்தமகள் நடக்கின்றாள்!

உள்ளமெனும் பெரும்பரப்பில்
உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
விந்தைமகள் நடக்கின்றாள்!

விதியென்னும் பெரும்பரப்பில்
விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
இந்தமகள் நடக்கின்றாள்!


நடந்துசெல்லும் மகளிர்தம்
நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
காலடிகள் என்கவிதை!


-பி.ச.குப்புசாமி.

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்
-ஞானக்கூத்தன்.

Tuesday, June 8, 2010

உவமைப்பெட்டி

அவள் தலைகுனிந்து
கூந்தல் உயர்த்தினாள்
அவன் உவமைப் பெட்டியில்
சூரியன் கிரணங்களைக்
கவிழ்த்தது கண்டான்.

அவள் கூந்தல் முடித்துச்
சடையிட்டாள்.
அவன் உவமைப் பெட்டியில்
மேகங்கள் புரண்டு
படுத்தது கண்டான்.

அவள் கண்ணாடி பார்த்து
மலர் சூடினாள்.
அவன் உவமைப் பெட்டியில்
வானத்தில் ஒரு நிலாவைச்
செருகியது கண்டான்.

அவள் அவனை நோக்கித் திரும்பி
கண்களில் வெளிச்சம் பாயப்
புன்னகை செய்தாள்.
அவன் உள்ளம் திறந்து
புன்னகை செய்யுமுன்
உவமைப் பெட்டிக்குள்
தலைகீழாக விழுந்தான்.
-பாலா (எ) பாலசந்திரன்.

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய் விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?
-ஞானக்கூத்தன்.

பாடத்திட்டம்

காட்டுக்குள்
கட்டடங்கள்
குரோட்டன்சுக்குப் பின்னாலிருந்து
என் குழந்தை கேட்கிறது

அப்பா
அவரைச் செடி
ஒரு வித்திலைத் தாவரமா?
இரு வித்திலைத் தாவரமா?

அவரை பயிரிடும்
ஆத்தாவுக்கு இதற்கு
விடை தெரியாது.

மரவள்ளி பயிரிடும்
தாத்தாவுக்கு அதன்
லத்தீன் பெயர் தெரியாது.

அறிவியலும் புவியியலும்
தெரியும் என் குழந்தைக்கு
செடி வளர்க்கத் தெரியாது.
-முழுநிலவன்.

வலிகளின் வலி

காதலை விட மலிவானதும்
விலையுயர்த்ததும்
ஏதுமில்லை..

எதைக் கொடுத்தும்
வாங்கி விடலாம்.
எதைக் கொடுத்தும்
பெற முடியாது..

காதல்
முரண்களின் முரண்
சுகங்களின் சுகம்
வலிகளின் வலி
-இசை பிரியா.

காரணமில்லாமல்...

எப்போதும் வருவதில்லை மழை
மழை வேண்டும் உழவர்கள்
மனம் கனத்துக்
காத்திருக்கும் சூழல்களில்
அதன் சுவடே தெரிவதில்லை.

நனையக் காத்திருக்கும்
சிறுவர்கள் விருப்பமும்
அதற்கொரு பொருட்டல்ல.

தாகம் தீர்க்கும் நதி
தாகம் கொண்ட பொழுதுகளில்
அது தலை காட்டுவதுமில்லை.

கட்டிடக் கூட்டுக்குள்
பதுங்கித் திட்டும்
மனிதர்களைக் காணவும்
சாக்கடையோடு இணைந்து
சாலைகளில் ஓடவும்

கனத்த மழைக்கோட்டுகளில்
ஒலியெழுப்பவுமே
ஆசைகொண்டு எப்போதும்
நகரங்களில் தன்னைக்
கொட்டித் தீர்க்கிறது
காரணமுமில்லாமல்
காரியமுமில்லாமல்!


-சு.திரிவேணி,கொடுமுடி.

Monday, June 7, 2010

என்னாலா மைக்?

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருலா கண்டா?
நாம கூட்டாளிங்க
பீர் குடித்து
ஜாலியா இருப்போம்
வா லா மைக்
எடுத்துக்கோ 'எக்ஸ்டசி'
சும்மா
என்ஜாய் பண்ணுலா.

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
நாம மக்கள்ஸ்லா
நமக்குள்ளாற என்னாலா?
எவன்டா முறைச்சான்
காட்ரா
சொருவிடலாம்

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருக்குலா தெரியும்?
இது உன் 'பசாலுலா'
நமக்கொன்னும் தெரியாது
குத்தினது யாருன்னு
கேட்டான்
சொல்லிட்டேன்லா
தமுளன்லா!
-லதா
"பாம்புகாட்டில் ஒரு தாழை"

நீரில் வளரும் வளையங்கள்

யார் நீரில்
அதிக வட்டங்கள்
ஏற்படுத்துவதென்ற
நமக்கான போட்டி
குளத்துப் படிக்கட்டுகளில்
தாவியிறங்கிக் கொண்டிருந்தது

கூழாங்கற்களுக்கிடையில்
கவிதை வரிகளைத்
தேடியெடுத்து
விட்டெறிந்ததெல்லாம்
என்னுடைய வளையங்கள்...

நீ கண்ணசைத்த
கண நேரத்தில்
யட்சனைப் போல
மழையொன்று வந்து
ஆயிரமாயிரம் வளையங்கள்
போட்டுச் சென்றது...

உன் விழிவழிப்பார்வையினால்
திணைகளும் துறைகளும்
திசை மாறிப் போகுமென்ற
பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை
நீரில் வளரும் வளையங்களினூடே
அந்தப் பாசி படர்ந்த
படிக்கட்டுகளும் படித்துக் கொண்டன...
-அவனி அரவிந்தன்.

எதிரியின் எதிரில்

எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எழுமிச்சை மரம்
ஒரு கிணறு,ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்,ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும்வரை

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள்,எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்.
- மஹ்மூட் தார்வீஷ்.

மழையைப் போலவே

மழைபெய்து கொண்டிருக்கிறது
மழை மகிழ்சியின் குறியீடு என்கிறாய்
எனக்கு மழை தனிமையின் குறியீடாய்.
ஒரே நாளில் பெரியவர்களின் உலகில்
அடித்து தள்ளிய அன்றைப் போல
அத்துமீறலின் குறியீடாய் குழந்தைதனங்களின்
வீழ்ச்சியாய் மழை துயரத்தை பேசுகிறது

பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுட் தனிக்கிறேன்.
மழை பெய்து கொண்டேயிருக்கிறது
நிற்பதற்கான அறிகுறிகளற்று..
அன்றைப் போலவே இரைச்சலுள் காணமல்போன
உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எல்லோரும் சொல்கிற அழகியை
நீயே கண்டுபிடித்தது போல அழகி என்கிறாய்.
யார் தான் அழகில்லை என்கிறேன்
எல்லோரும் பேசுகிற அரசியலை பேசுகிறாய்
எல்லோருடைய எல்லாவற்றையும் புறக்கணிக்காத நீ
தனித்துவமாய் பெண்ணியம்,
சமத்துவம்,பின்னவீனத்துவம்
என எல்லாப் புண்ணாக்கையும் பேசுகிறாய்

நீ மழையை மழைக்காய் இரசிக்கிறாயா?
அல்லது
எல்லாரும் இரசிக்கிறார்கள் என்பதற்காக இரசிக்கிறாயா
எனக்கு நீயும் மழையைப் போலவே அந்நியமாய் இருக்கிறாய்.
-தான்யா.