Tuesday, December 21, 2010

உங்களின் எல்லாப் பாதைகளும்

உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

-சிவரமணி.

Monday, December 20, 2010

மழை

எந்த ஒரு உரையாடலும்
இல்லாத இடைவெளி
நிசப்தத்தில் உறைகிறது.
இடத்தில் இருந்தவாறே
உணர்வெழும்பி
வேறு இடம் துளாவுகிறது.

வெற்று இடைவெளியில்
எதுவும் இல்லாதபடியால்
உரிய உருவம் ஒன்றினை
அங்கு நிரப்பிக்கொள்ளுதல்
காற்றுக்கு சாத்தியமானது.

அந்தரங்கம் பேணத் தெரியா
இரவிலிருந்து
பகல் ஒளியைத் தேடிக்கொள்வது
பிரகாசம் நிறைந்த சூரியனுக்கு
சாத்தியம் ஆனதே.
குளிர்ந்த உடலைத் தழுவியபடி
எனக்கே உரிய மழை
என்னையே வந்து சேரும்.

என் பாதங்களைக் கழுவ
என்னைத் தழுவிக்கொள்ள
என்னைப் போர்த்திக்கொள்ள
நான் நடக்கின்ற வீதியெங்கும்
சிதறிக் கிடக்க
மழை
போதுமானது எனக்கு.

- பெண்ணியா.

கவிதை இறகு -மார்கழி

கடற்புறம்

காலமகள் மணலெடுத்து
கோலமிட்ட கடற்புறத்தில்
ஏழை மகள் ஒருத்தி.
முன்னே கடல் விரியும்
முது கடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
விழி தொடர நிற்கின்றாள்.

தாழை மர வேலி,
தள்ளி ஒரு சிறு குடிசை;
சிறுகுடிசைக்குள்ளே
தூங்கும் சிறு குழந்தை

ஆழ்க்கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூ வாசம்
தரைக் காற்று சுமந்து வரும்.

காற்று பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு.
கும்மிருட்டே குலைநடுங்கி
கோசமிட்ட கடல் பெருக்கு.

கல்லுவைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது.

திரை கடலை வென்று வந்தும்
திரவியங்கள் கொண்டு வந்தும்
இந்த சிறு குடிசை,
இரண்டு பிடி சோறு,
தோணி உடையான்
தரும்பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு;
பெருமூச்சு.

தானாய் விடி வெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்.
வாழ்வில் இருள் தொடரும்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்.

Friday, November 26, 2010

தணல் பூத்துக் கிடக்கிறதெனதுள்ளம்

பசுமை போர்வையிழந்து
சம்பல் கவிந்த
மேனிய ளாயுள்ளேன்
மாறிக் குளிரில் நனைந்திடினும்
தணல் பூத்துக் கிடக்கிறதெனதுள்ளம் .
துன்பத்துக்கும் துயரத்துக்கும் நடுவில்
உன்னை வாரியணைக்க முடியாத
தாயானேன் நான் .

ஒரு அழகிய காலையை
உனக்கு காட்ட முடியாத
வசந்த காலத்தில்
விளையாட முடியாத
பாலைவன நாட்களையே
உனக்கு பரிசளிக்கின்றேன் .
எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து
உயிர் குடிக்கும் எறிகணைக்குள்
முகில் கலைத்து வானிரையும்
எமதூதப் பறவைகளின்
வருகைகளிற் கிடையில்
துப்பாக்கி வெடியோசையின்
சப்தங்களுக்கிடையில்
எப்படி என்னால்
இனிமையை உனக்குத் தரமுடியும் .
என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை
நீயே சென்றடைவாய்!
விழிகளில் சிவப்பும்
இறக்கைகளில் நெருப்பும்
உனக்கு சொந்தமாகட்டும் .
எம்மை வேகவைத்த காலம்
உன்னால் வேகிச் சாம்பலாகட்டும்
ஒரு புதிய வாழ்வு
உன் கரங்களிலே பிறக்கட்டும் .

- அம்புலி
.

Sunday, November 21, 2010

திரும்பியே வராத

பின் திரும்பியே வராத
பிள்ளையின் அம்மாவிற்கு
அவ்வப்போது காணநேரிடும்
பைத்தியக்காரர்களின்
பிளாட்பார மரணங்கள்
பின்னிரவு நெடுங்காய்ச்சலை
பரிசளிக்கின்றன.

-பா. திருச்செந்தாழை.

பிரிய மழை

பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்

வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.

- யுகபாரதி.

கவிதை இறகு-கார்த்திகை


"என்ன செய்து கிழித்தார் பெரியார்?"
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை சேய்பவர் கேட்டார்.

"பெரியாரின்
முரட்டுத் தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க"
இது
முடிவெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

"என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?"

இப்படி 'இந்தியா டுடே' பாணியில்
கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே
டெலிபோன் டிபார்ட்மென்டில்
'சுபமங்களா'வை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சை
செய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன் .

Friday, November 12, 2010

சந்தித்தல்

சந்திப்பதற்கென
ஒரு நாளின் மாலையைத் தேர்ந்தேன்
கொஞ்சம் கவிதைகள்
கனிவூட்டும் இன்னிசை
காதலின் சுவை கலந்த தேநீர்
வாசனை தந்து வரவேற்க மலர்கள்
எல்லாம் ஆயத்தமாக.
அழகிய மாலைகளும்
கடிகாரமும் யாருக்காயுங் காத்திருப்பதில்லை
மஞ்சள் மாலை மெதுவாய்க் கறுக்க
மணலிற் பரவும் நீரெனப் பரந்தது இரவு
நிகழாது போன வருகையும்
பகிரப்படாத கவிதைகளும்
சொல்லப்படாத காதலும்
பருகப்படாத தேநீரும் வாடும் பூக்களோடு
ஒவ்வொரு அழகிய மாலையிலும்
எங்கோ ஒரு வீட்டின் தோட்டத்தில் கைவிடப்படுகின்றன.

-வினோதினி.

Wednesday, November 3, 2010

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.

-பூமா ஈஸ்வரமூர்த்தி.
"காதலைக் காதல் என்றும் சொல்லலாம்"

கதவு

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
"யார்"
என்று கேட்டேன்
"நான் தான்
சுசீலா
கதவைத் திற"என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

-நகுலன்.

நீ வருவதென்பது

பழுத்ததாய்த் தேடி வந்தமர்கிறது
கிளி.
எதுவென்று கேட்க முடியாது.
காடெங்கும் பாம்புகள்.
சொல்லித் தீராத கதை
ஒன்றும் புரிவதாக இல்லை.
உயர உயர எழும்புகிறது
சுவர்.
உறைக்குள் மின்னுகிறது
வாள்.
கதிரவன் மறையும் நேரமிது.
இருள் சூழ்ந்து இமைமூட
நீ வருவதென்பது
வராமலேயே இருப்பதாகிறது.

-அழகுநிலா.

Monday, November 1, 2010

வரம்


நின்றிருக்கிறேன் நானும்
அவ்விடத்தில்
மரமில்லாதொரு பொழுதில்
என்றாலும்
என் மீதில் அமர்ந்ததில்லை ஒரு நாளும்
எந்தப் பறவையும்
-குகை.மா.புகழேந்தி.
ஆத்தா அடிச்சி
அஞ்சாறு மணி நேரமாச்சு
அதென்னமோ
சாயந்தரம்
அப்பனக் கண்டதும் தான்
விபரம் சொல்லி வலிக்குது
குழந்தைக்கு !
-சக்திகா.

கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொடுக்கின்ற கடவுள்
முதலில் எங்களுக்கு
கூரையைக் கொடுக்கட்டும்...!
- ஆதம்பாவா.
என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி.
-மு.சுயம்புலிங்கம்.
”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்”

வரம்

நான் என்ன கேட்டேன்?
நீ என்ன தந்தாய்?
புரியாததெல்லாம் புரியக் கேட்டால்,
புரிந்ததெல்லாம் புரியாதுபோக வரம் தருகிறாய்!
-குவளைக்கண்ணன்.

Thursday, October 21, 2010

உன் பெயர்

உன்பெயர்-

கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.

காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?

உன் பெயர்-

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

* தன் காதலிக்கு பரிசாக தன் காதை அறுத்துத் தந்த வான்கோ
** யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்

-சுகுமாரன்

உனக்குத் தெரியுமா

வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்

வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை

இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக

வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்

குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்

உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.

- மகாதேவன்
ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது

நனைவது

நானும்
நீயும்
ஒரே மழையில்
நீ
குளிருகிறது என்றபோது
நானும்
குளிருகிறது என்றேன்
ஒரே மழை
ஒரே நேரத்தில்
குளிர்விக்கிறது
வெவ்வேறாய் இருக்கும்
ஒன்றை

-கோகுலக்கண்ணன்.

என்னைத் தேடி வரும் அவனுக்கு

சிறகுகளை
ஒவ்வொன்றாய் பிய்த்து போட்டபடி
அந்த கானக வெளியினைக் கடந்தேன்
என்னைத் தேடி வரும் அவனுக்கு
நான் காணாமல் போவதையும்
அடையாளப்படுத்தி..

நெடுநாட்களாகியும்
யாரும் தேடி வராத நிலையில்
காய்ந்த குருதிதுளிகள்
தக்கைகளாயும்
சிறகுகள் இடமாறியும்
போயிருந்தனவென்று
எனக்கு பின்னால் வந்த
பருந்தொன்று
சொல்லிச் சென்றது..

சிதைந்த என் அடையாளங்களைத் தேடி
மீண்டும் வந்த வழி திரும்பினேன்..
சிறகுகளேதும் காணப்படாத நிலையில்
துயருற்று முள் மரத்தின் அடியில்
மருகி நிற்கையில்
அதன் கிளையொன்றில்
என் அத்தனை இறகுகளும்
சேகரிக்கப்பட்டிருந்தது
அருகிலேயே பாதுகாப்பாய்
அவனும்..

- இசை பிரியா.

ஆயிரத்தொரு காரணங்கள்

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

இப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.

-பா.ராஜாராம் .

Wednesday, October 20, 2010

கல்வி-கேள்வி

அப்பா...
ஒரு கதை சொல்லு
ஓடி வ்ந்தாள்
ஒன்றாம் வகுப்பு மீனாட்சி.

ஆர்வத்துடன் ஆரம்பித்தேன்
முயலுக்கும் ஆமைக்கும்
ஓட்டப் பந்தயம்
முயல் உறங்க
ஆமை வென்றது
அபிநயத்துடன்
அரங்கேற்றினேன்.

போப்பா!
தப்புத் தப்பா சொல்றே...
மெள்ள நகரும் ஆமைக்கும்
துள்ளி ஓடும் முயலுக்கும்
போட்டி என்பது நியாயமா?’

ஒன்றாம் வகுப்பின்
கேள்வியால்
நூற்றாண்டுத் தத்துவம்
நோடியில் உடைந்தது.

கேள்வியே கல்வி என்று
இப்போது புரிந்தது
ம்...ம்...பள்ளிக்குப்
போக வேண்டியது
மீனாட்சியல்ல!
-அமிர்தநேயன்.

தடம்

சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்

அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது

நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்

யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது

விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்

இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்

-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்)
ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்

தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவு

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா .
-கவிஞர் கே.ஸ்டாலின்

கவிதை இறகு -ஐப்பசி

ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று
எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்
அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்
அப்படித்தான் சொல்கிறது
பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து
மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு
மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது
அச்சமூட்டுகிறது
மரியாதையை ஏற்படுத்துகிறது
பெருமையளிக்கிறது
மெய்சிலிர்க்கவைக்கிறது

தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட
டெஸ்டரை முதன்முறையாகப்
பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்
தன்வாழ்வின் தோள்மீது
கைபோட்டு அரவணைத்துக்கொண்டு
பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு
நன்றி சொல்லிக்கொள்கிறான்

யாருமற்ற அந்நேரத்தில்
மெல்ல எழுந்து
ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி
இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு
கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்
ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்.
-.முத்துவேல்.