Friday, August 1, 2014

கவிதை இறகு -ஆடி


நான் ஒரு
உடும்பு

ஒரு
கொக்கு

ஒரு
ஒன்றுமே இல்லை

-நகுலன்.

கவிதை இறகு - ஆனி

மாயக் கவித்துவம்

மலைப்பிரதேசக் கனவுக் குடிலோன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில்மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்துக்காக ஆதங்கப்படுகிறாய்.

நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

-சி. மோகன்.

கவிதை இறகு - வைகாசி

உருமாற்றம்

கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.

அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின் கதியில்
தெரிந்து கொண்டது.

வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும்போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.

அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.

-எம். யுவன்.

Wednesday, July 30, 2014

கவிதை இறகு - சித்திரை


ப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது
பழைய மழையா பெய்யிது

பேரு தெரியாத்த பூச்சிகளொக்க
புதுசு புதுசா மொளைக்குது

ஒலகம் போகுது இந்தப் போக்குல

இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்
எழுதிவச்சுட்டு செத்தானாம்

காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு
கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது
எல்லாத்தையும்

இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து
மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக

பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா
அவுத்துட்டு ஓடுங்குறானுக

படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்
உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக

எங்க குட்டிச்சாத்தானப்போல
உருண்டோடுகிற பழைய மேகமே

நீ விடுகிற இடிகளெல்லாம்
இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.


-என். டி. ராஜ்குமார்.

கவிதை இறகு -பங்குனி


கடவுளின் கழுதை

பரிதாபமாக நடந்து போகிறது
ஒரு கழுதை
ரத்தமும் சீழும் வடிகிற
கால்களை ஊன்றி
எல்லோருடைய பாவங்களையும்
சுமந்தபடி

நான் என் மனைவிக்கும்
நீ உன் கணவனுக்கும்
நான் என் காதலிக்கும்
நீ உன் காதலனுக்கும்
நான் உனக்கும்
நீ எனக்கும் இழைக்கும்
துரோகங்கள் அதன் முதுகில்
மூட்டையாக கனத்துச் செல்கின்றன

ரட்சிப்பற்ற காலவெளியில்
கழுதை மெல்ல நடக்கிறது
அதன் பின்னால் நடந்து போகிறான்
ஒரு நொண்டி வண்ணான்.

-ஜீ முருகன்

கவிதை இறகு -மாசி


அன்பின் பதட்டம்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொளவென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம். 

-தேவதச்சன்

Sunday, July 27, 2014

கவிதை இறகு -தை

                                                                மேடை
பெரும் காப்பிய நாடகம்
மேடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது 
ஒளிவெள்ளத்தில் கதாபாத்திரங்கள்
ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் 
கதை வளர வளர 
பார்வையாளர்கள் கதையின் 
பகுதிகளில் இறுக்கமாகிறார்கள் 

கதையின் ரூபங் கண்டு 
திகைக்கிறார்கள் 
நேரம் அதிகரிக்க அதிகரிக்க 
அவர்களே கதா பாத்திரங்களாக 
உருமாறுகிறார்கள் 

மேடையில் பின்பக்கத்திலோ
கண்ணன் குண்டி சொறிகிறான் 
சகுனி பீடி குடிக்கிறான்
பஞ்ச பாண்டவர்கள் 
கேலி பேசிச் சிரிக்கிறார்கள் 
கிரீடங்களை அழுத்தி 
பிடுங்கி எடுத்து 
சொறிந்து கொள்கிறார்கள் 
மேடையின் முன்பக்கம் ஒளியாகவும் 
பின்பகுதி இருளாகவும் 
அந்தரத்தில் நிற்கும்
மேடை 

நாடகம் முடிவடைந்ததும் 
பார்வையாளர்கள் தங்கள் தங்கள் 
நாடகங்களை எடுத்துச் செல்கிறார்கள் 
அவர்களுக்குத் தெரியாமல் 
ஒளியும் இருளும் நிரம்பிய 
மேடை அவர்களோடு 
தொடர்ந்து செல்கிறது. 

 -லஷ்மி மணிவண்ணன்.

Monday, March 31, 2014

பயணங்கள்

ரயில் சந்திப்புகள் தோறும்
பிரிவுகளின் சாட்சியாய் 
அழுது சிவந்த முகங்கள்

தண்டவாளங்களின் சத்தங்கள்

பெறும் கேவல்களென குரலெடுக்கின்றன

கண்ணீரில் தோய்ந்த பயணங்கள்

கசகசத்து கொண்டே இருக்கின்றன

பிரிந்து விடுவதில் இருக்கும் தைரியம்

பிரிவை பார்ப்பதில் இருப்பதில்லை 

- லீனா மணிமேகலை.