மேடை
பெரும் காப்பிய நாடகம்மேடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது
ஒளிவெள்ளத்தில் கதாபாத்திரங்கள்
ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்
கதை வளர வளர
பார்வையாளர்கள் கதையின்
பகுதிகளில் இறுக்கமாகிறார்கள்
கதையின் ரூபங் கண்டு
திகைக்கிறார்கள்
நேரம் அதிகரிக்க அதிகரிக்க
அவர்களே கதா பாத்திரங்களாக
உருமாறுகிறார்கள்
மேடையில் பின்பக்கத்திலோ
கண்ணன் குண்டி சொறிகிறான்
சகுனி பீடி குடிக்கிறான்
பஞ்ச பாண்டவர்கள்
கேலி பேசிச் சிரிக்கிறார்கள்
கிரீடங்களை அழுத்தி
பிடுங்கி எடுத்து
சொறிந்து கொள்கிறார்கள்
மேடையின் முன்பக்கம் ஒளியாகவும்
பின்பகுதி இருளாகவும்
அந்தரத்தில் நிற்கும்
மேடை
நாடகம் முடிவடைந்ததும்
பார்வையாளர்கள் தங்கள் தங்கள்
நாடகங்களை எடுத்துச் செல்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியாமல்
ஒளியும் இருளும் நிரம்பிய
மேடை அவர்களோடு
தொடர்ந்து செல்கிறது.
-லஷ்மி மணிவண்ணன்.
No comments:
Post a Comment