Sunday, February 17, 2013

கவிதை இறகு - மாசி


பெய்த நூல்

அந்தச் 
சாலையோரப் பேருந்து 
வழியில் எதிர்படும் 
மூன்று ஊர்களைச்சுமந்து போகிறது.

எல்லா நிறுத்தங்களிலும் 
தென்படுகிறார்கள்.
நாசியின்கீழ் பதினொன்றாய் 
சளி பயணப்பட்ட உலர்சுவடுகள்;
புறங்கையால் எச்சில்துடைத்த 
பக்கவாட்டு அடையாளங்கள்;
கருமையை வறுமைக்குப்பரிகொடுத்த 
செம்பட்டை மயிர்கற்றைகள்;
மேலேயுயர்த்தவிடாது கைகளைத்தடுக்கும்
கிழிந்த கக்கங்கள்;
பவுடருக்குக்குப் பதிலாக விபூதிபூசப்பட்ட 
கருத்தக் கன்னங்கள்;
நெய்தநூல்களைவிட மிகுதியாய் 
பெய்தநூல்கலான சீருடைகளுடன்
எல்லா நிறுத்தங்களிலும் 
பள்ளி செல்லும் பிள்ளைகள்.

இவர்களுடன்
இடதுபுறமாய் கோணியபடி
வயதான மூதாட்டியைப்போல்
கனத்து ஊர்கிறது
அந்த அரசுப்பேருந்து.
'குட்டிசாத்தான்களே' என்று 
திட்டுமொழிகளால்
நடத்துனர்
செவிகளைக் கௌரவிக்கும்முன் 
வெறுமையாகிவிடுகின்றன படிகள்.

ஒருபுறம்
புத்தக சிலுவைகளை சுமந்தபடி
நின்ற இடத்திலேயே
அறையப்பட்டிருக்கிறார்கள்
பேருந்துக்குள் 
பிள்ளைஎசுகள்.

மறுபுறமோ
கிரீச்சிட்டு 
சக்கரம் தேயும்படி 
ஓட்டுனர் பாதங்களில்
வன்மமாய் மிதிபடும் 
பிரேக்கால்.....
மண்டையுடைந்தாலும் பரவாயில்லை என்று 
அந்தத் தொலைதூரப் பள்ளிக்குச்செல்லும்
எழைசசிறுமிகள்
கெட்டியாய் 
பிடித்துக்கொண்டுதான் போகிறார்கள்....

கம்பிகளை அல்ல 

நாடா  இல்லாத 'பாவாடைகளை '

-போ.மணிவண்ணன் 

Saturday, February 16, 2013

லெனினின் வாழ்க்கைக் கதை

பெரிதாக என்ன சொல்லிவிட முடியும் "அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம் " என்பதை தாண்டி?. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்பதோடு மட்டுமல்லாமல் காரல்மார்க்ஸ் அவர்களின் கனவினை நனவாக்கிய முதல் மனிதர். கம்யூனிசம் என்பதை ஒரு வாழ்க்கை பாதையாக மக்களுக்கு காட்டியவர் . அவர்தான்  "விளாடிமிர் இல்யீச் லெனின்". உலக மக்கள் அனைவராலும் "லெனின்" என்று ஒரே வார்த்தையால் அழைக்கபடும் அந்த புரட்சியாளரின் வாழ்க்கை வரலாறு இப்போது தமிழ் மொழிப்பெயர்ப்பில் நமக்கு கிடைகிறது. கம்யூனிச அறிஞர் " மரீயா பிரிலெழாயெவா"  அவர்கள் எழுதிய "லெனினின் வாழ்க்கைக் கதை " தமிழ் மொழிப்பெயர்ப்பில் பூ.சோமசுந்தரம் அவர்களின் முயற்சியால் நன்கு மொழிப்பெயர்க்கபட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் இறுதி பகுதி இப்படி முடிவடைகிறது.

" இவற்றை எல்லாம் லெனின் காணமுடிந்தால் !

கண்டால் லெனின் இப்படிதான் சொல்லியிருப்பார் 
"நின்று விடாதீர்கள். எல்லாம் சாதிக்கப்பட்டுவிடவில்லை.நமது குறிக்கோள் கம்யூனிசம் "

கம்யூனிசம் என்பது நியாயமும் உண்மையும் ஆகும். எல்லோருடைய நல்வளத்துக்காகவும் எல்லோரும் சேர்ந்து உழைப்பதாகும் இது . புதுமையை தேடி  மேலும் மேலும் முன்னே செல்வதாகும் இது. இன்பத்தையும் அழகும் சால்பும் திகழும் வாழ்க்கையையும் பற்றிய நமது கனவாகும் இது.

இதை அடையும் வழியை நமக்குக் காட்டியுள்ளார் லெனின்."
உண்மைதான், ஒரு தத்துவம் காரல்மார்க்ஸ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது . அது பற்றிய முன் உதாரணங்கள் , முறைகள் ஏதும் இல்லாத போது அதை முன்னிறுத்தி , வாழ்க்கை முறையாக , அரசியல் நெறியாக கடைப்பிடிக்க லெனின் எவ்வளவு சிரமங்கள் , துயரங்கள் அனுபவித்திருக்கிறார் என்பது அவரைத் மேலும் பின்தொடர வழியை காட்டுகிறது . வாழ்ந்த காலம் முழுவதும் மக்களின் நல்வாழ்வை  மட்டுமே சிந்தித்து அதை செயல்படுத்தி வாழ்ந்த தலைவராக வரலாறு அவரை அடையாளப்படுத்துகிறது.

வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக வாழ்ந்து , மாபெரும் புரட்சியின் நாயகனாக விளங்கிய அவரின் வாழ்க்கை வரலாறு நூலிருந்து ஒரு பகுதி .

"யாரை பார்க்கவேண்டும் உங்களுக்கு ?"

"லெனினை . முக்கியமான காரணம் இருக்கிறது"என்றான் ரமான் .
"உடனடியான காரியம்" என்றான் இன்னொருவன்.
"அடே அப்பா , பெரிய ஆட்கள்தாம். புரட்சிநாட்களில் எங்கே இருந்தீர்கள்?" என்று தொழிலாளர்கள் மீது கண்ணோட்டியவாறு கேட்டார் மல்க்கோவ்.
"பனிக்கால அரண்மனையை கைப்பற்றினோம். வேறு எங்கே?"

பதினைந்து நிமிடங்கள் சென்றதும் மூவரும் மக்கள் கமிஸாரவைத் தலைவரின் வரவேற்பு அறையில் இருந்தார்கள். பெரிய அறை . சாமான் செட்டுகள் எளியவை. இரண்டு மர சோபாக்கள் அறையை இரு பாதிகளாகப் பிரிந்திருந்தன. ஒருபுறம் மேஜை, மறு புறம் மேஜையும் சில நாற்காலிகளும். இவ்வளவே 

தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்- நம் வீடுகளில் போலவே எளிமையாய் இருக்கிறது என்ற குறிப்புடன்.

செகரட்டரி அலுவல் அறைக் கதவை திறந்தாள்.

"உள்ளே போங்கள், தயை செய்து. தோழர் லெனின் உங்களுக்காக காத்திருக்கிறார் .

லெனின் மேஜையின் பின்னாலிருந்து எழுந்து அவர்களை எதிர்கொண்டார். உயரம் அற்றவர் , துடியானவர் , உயிரோட்டமுள்ள அவர் விழிகள் பளிச்சென்று சுடர்ந்தன.

"வணக்கம், தோழர்களே. அமருங்கள் தயவு செய்து."

அவர்களை அமர்த்திவிட்டு  தாமும் அமர்ந்துகொண்டார். தொழிலாளர்களுக்கு எதிர்ப்பக்கத்தில் அல்ல, அவர்கள் கிட்டத்திலேயே. கையில் இருந்த பென்சிலை ஆட்டியவாறு மளமளவென்று கேள்விகள் கேட்டார்.

"எந்த தொழிற்சாலையிலிருந்து வந்திருகிறீர்கள்? உங்கள் தொழில் என்ன ? தொழிற்சாலையின் நிலவரம் என்ன ? ஆலைக்கு மூலப்பொருட்கள் கிடைக்கிறதா ? ஆலை  நிர்வாகத்தின் மீது தொழிலாளர் கண்காணிப்பு இருக்கிறதா ? என்ன காரியமாக வந்தீர்கள் ? நண்பர்கள் என்ற முறையில் ஒளிவு மறைவில்லாமல் சொல்லுங்கள்".

இவ்வாறு கூறிப் புன்னகை செய்தார் லெனின். நல்லியல்பு ததும்பும் புன்னகை.

லெனினுடைய இந்தப் புன்னகையால் ரமான் துணிவு அடைந்தான். மக்கள் கமிஸாரவை தலைவரிடம் தாங்கள் வந்த முக்கியமான காரணத்தை மறைக்காமல் விவரித்தான் அவன். தொழிற்சாலையை பற்றி லெனினிடம் சொல்ல அவனுக்கும் அவன் தோழர்களுக்கும் ஆசைதான். ஆனால் இப்போது அவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை . அவர்கள் தொழிலாளி வர்கத்திலிருந்து தற்போதைக்கு விலக்கப்பட்டு மக்கள் கமிஸாரகத்தில் வேலை  செய்ய அனுப்பபட்டிருகிறார்கள். ஜார் காலத்து சிப்பந்திகள் ஓடிவிட்டார்கள் . சோவியத் ஆட்சியுடன் ஒத்துழைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஓடாமல் எஞ்சி இருப்பவர்களும் வேலை செய்வதற்கு பதிலாக சோம்பல்தனம் கொண்டு வேலையை இழுத்தடிக்கின்றார்கள். ஆகவே  அங்கே வேலை செய்ய தொழிலாளர்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள்.

"சோவியத் ஆட்சிக்கு உதவத்தானே?" என்று குறுக்கே கேட்டார் லெனின். பின்னே என்ன?"

லெனின் விழிகளை இடுக்கிக்கொண்டு ரமானை ஊடுருவி நோக்கியவாறு இருந்தார். ரமானுக்கு எக்கச்சக்கமாய் போய்விட்டது. அவன் முடியை கோதிகொண்டான்.

"எங்களால் முடியவில்லை விளாடிமீர் இல்யீச். கஷ்டமாய் இருக்கிறது. தொழிற்சாலையில் பயனுள்ள வேலை  செய்தோம். மக்கள் கமிஸாரகத்திலோ குருடர்கள் போல தடவுகிறோம்."

"அரசை நிர்வாகிப்பது எனக்கு லேசாய் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ? எனக்கு அனுபவம் இருப்பதாக நினைகிறீர்களா? நான் மக்கள் கமிஸாரவை தலைவனாக முன்பு ஒரு தரமும் இருந்ததில்லையே. நம்முடைய கமிஸார்களும் முன்பு அந்தப் பதவியை வகித்தது இல்லை. அல்லவா? என்று திருப்பிகேட்டார் லெனின்.

ஒரு தொழிலாளன் தயக்கத்துடன் தலையை ஆட்டினான்.

"எல்லாம் ஆனாலும் ரொம்பப் புதிது ."

"பழையவற்றைத்தான் நாம் உடைத்து எறிந்து விட்டோமே! நமக்கு பதில் யார் புதிதாக நிர்வகிக்கப் போகிறார்கள்?"

லெனின் குதூகலம் அடைந்து , நாற்காலியை தொழிலாளர்களுக்கு இன்னும் அருகில் நகர்த்திக்கொண்டு விவரிக்கத்தொடங்கினார். அனுபவ ஞானம் இல்லாமல் மக்கள் கமிஸாரகத்தில் வேலை செய்வது தொழிலாளர்களுக்கு கஷ்டந்தான். ஆனால் அதற்குப் பதிலாக பாட்டாளிக்கு இயல்பான உய்த்துணர்வு அவர்களிடம் இருந்தது. மக்கள் கமிஸாரகத்தில்  நம்முடைய, கட்சியினுடைய, சோவியத் கொள்கைகளை செயல்படுத்தவேண்டும். அதை தொழிலாளர்கள் தவிர வேறு யார் செயல்படுத்துவார்கள் ?
எங்கும் தொழிலாளர்களின் மேற்பார்வையும் , தொழிலாளர்களின் கண்காணிப்பும் வேண்டும் .

"அனால் நாங்கள் தவறு செய்து விட்டாலோ ?"

"தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். முடியாவிட்டால் கற்றுகொள்வோம். ஆகவே, தொழிலாள தோழர்களே , கட்சி உங்களை அனுப்பி இருக்கிறது. கடமையை நிறைவேற்றுங்கள்" என்று எழுந்து நின்று கண்டிப்புடன் கூறினார் லெனின். பின்பு உற்சாகமூட்டும் இனிய புன்னகையுடன் மறுபடி சொன்னார் " முடியாவிட்டால் கற்றுக்கொள்வோம் "

லெனினுடன் நடந்த இந்த உரையாடலுக்கு பின் தொழிலாளர்களின் தயக்கம் எல்லாம் போயே போய்விட்டது. இனி அவர்கள் காலை முதல் நள்ளிரவு வரை மக்கள் கமிஸாரகத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். அதன் நெளிவு சுளிவுகள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிடுவார்கள்.

"தோழர் லெனின் , கடமையை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்" எண்டார்கள் தொழிலாளர்கள். 
லெனினின் முழு வாழ்க்கை கதை, அவரின் வாழ்கையில் உற்ற துணையாக இருந்த அவரது மனைவி "க்ரூப்ஸ்கயா " , இருவரின் வாழ்வியல் பார்வைகள், என்று இந்த நூல் முழுவதும் ஒரு மாபெரும் புரட்சியாளரின் வரலாறு. இளைய தலைமுறையினருக்கு பரிசாக வழங்க நல்ல தேர்வு இந்த புத்தகம்.

"லெனினின் வாழ்க்கை வரலாறு "
- " மரீயா பிரிலெழாயெவா" தமிழில் பூ.சோமசுந்தரம்.  
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் .
41- B ,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.
அம்பத்தூர் . சென்னை - 600 098.
தொலைபேசி - 044 - 26258410, 2251968, 26359906.
விலை - 180/- (2013)
email -ncbhbook @ yahoo .co .in 

Friday, February 8, 2013

ஸ்னேகிதம்

உன்
மௌனம்
எனக்குத் தெளிவாய்ப்
புரிகிறது...
உன் பேச்சு
என்னை மிகவும்
குழப்புகிறது...
பேசாமல் இரு.
நாம் பேச வேண்டியதை
நம் மௌனங்கள்
பேசிக் கொள்ளட்டும்...
மெள்ள் மெள்ள
ஆனால்
மிகத் தெளிவாய்..

- பா.செந்தாமரை
பொத்திப் பொத்தி
பூத்த
மௌனப் பூக்களை
சூடிக் கொண்டலைகிறாய்
சத்தமிட்டு சத்தமிட்டு
சருகாகிக் கிடக்கிறேன்.

- முருகன்.
 ஸ்னேகிதம்

நேற்று நீ மறந்து போனாய்
போகையில் முத்தம் கொடுக்க
மறுபடி மறுபடி நெஞ்சில்
இக்குறை வந்து தாக்க
பூக்களை முத்தமிட்டேன்
புற்களை முத்தமிட்டேன்

காகிதம்,பேனா,பென்சில்
கடக்கின்ற காற்று, கை விரல்
ஒவ்வொன்றாய் முத்தமிட்டேன்.

நேற்று நீ மறந்து போனாய்
ஊர் முழுக்க ஸ்னேகிதமாச்சு
திடுமென்று நினைவு மின்னி
மறுபடி எனைப் பார்க்க வந்தாய்

உன் பக்க கணக்கு முழுவதும்
வெட்கமின்றி சொல்லுவாயோ.

- பாலகுமாரன்.
என்றாவது ஒருநாள்
வற்றக்கூடும் என் கண்ணீர்
அன்று எண்ணிக்கொள்
நீ எறிந்த கற்களை.

-கவிதாயினி ராஜேஸ்வரி.

நான்
உன் கதவைத் தட்டுகிறேன்
வாசலின் அந்தப் பக்கம் இருந்து

நீ உன் வாசலின் மறுபக்கம்
திறந்துவிட்டாய்
உனது கதவை

ஆனால்
நாம் இன்னும்
சந்திக்கவேயில்லை.

-அப்பாஸ்.

மானம் பாத்த பொழப்பு


மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.

வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

வக்கத்த போக்கு பாத்து
நாம்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே
காத்திருக்கேன்.

- கீதமஞ்சரி .