Sunday, February 17, 2013

கவிதை இறகு - மாசி


பெய்த நூல்

அந்தச் 
சாலையோரப் பேருந்து 
வழியில் எதிர்படும் 
மூன்று ஊர்களைச்சுமந்து போகிறது.

எல்லா நிறுத்தங்களிலும் 
தென்படுகிறார்கள்.
நாசியின்கீழ் பதினொன்றாய் 
சளி பயணப்பட்ட உலர்சுவடுகள்;
புறங்கையால் எச்சில்துடைத்த 
பக்கவாட்டு அடையாளங்கள்;
கருமையை வறுமைக்குப்பரிகொடுத்த 
செம்பட்டை மயிர்கற்றைகள்;
மேலேயுயர்த்தவிடாது கைகளைத்தடுக்கும்
கிழிந்த கக்கங்கள்;
பவுடருக்குக்குப் பதிலாக விபூதிபூசப்பட்ட 
கருத்தக் கன்னங்கள்;
நெய்தநூல்களைவிட மிகுதியாய் 
பெய்தநூல்கலான சீருடைகளுடன்
எல்லா நிறுத்தங்களிலும் 
பள்ளி செல்லும் பிள்ளைகள்.

இவர்களுடன்
இடதுபுறமாய் கோணியபடி
வயதான மூதாட்டியைப்போல்
கனத்து ஊர்கிறது
அந்த அரசுப்பேருந்து.
'குட்டிசாத்தான்களே' என்று 
திட்டுமொழிகளால்
நடத்துனர்
செவிகளைக் கௌரவிக்கும்முன் 
வெறுமையாகிவிடுகின்றன படிகள்.

ஒருபுறம்
புத்தக சிலுவைகளை சுமந்தபடி
நின்ற இடத்திலேயே
அறையப்பட்டிருக்கிறார்கள்
பேருந்துக்குள் 
பிள்ளைஎசுகள்.

மறுபுறமோ
கிரீச்சிட்டு 
சக்கரம் தேயும்படி 
ஓட்டுனர் பாதங்களில்
வன்மமாய் மிதிபடும் 
பிரேக்கால்.....
மண்டையுடைந்தாலும் பரவாயில்லை என்று 
அந்தத் தொலைதூரப் பள்ளிக்குச்செல்லும்
எழைசசிறுமிகள்
கெட்டியாய் 
பிடித்துக்கொண்டுதான் போகிறார்கள்....

கம்பிகளை அல்ல 

நாடா  இல்லாத 'பாவாடைகளை '

-போ.மணிவண்ணன் 

No comments:

Post a Comment