Thursday, July 26, 2012

ரகசிய காதல்

தன்னந்தனியனாய்
தவறவிட்ட உன்னைத் தேடி

பதற்றப்பட்டு பரபரக்க
உரத்து உன் பெயர் கூவியழைக்க
திராணி இம்மியுமில்லை
கானுயிர்கள் விழிப்புறும் பட்சத்தில்

சருகுகளின் சப்தத்தைத் தவிர்க்க
நுனிக்காலில் நகர்கிறேன்

பட்சிகளின் பொந்துகளிலும்
பட்டைகளின் இடுக்குகளிலும்
சொல்லிவைக்கிறேன் உன்னைப்பற்றி
எங்கேனும் கண்டால்
தகவல் அனுப்பவென்று

சளைக்காமல் தொடர்வேன்
அதுவரையில்
கானகத்தைத்
தீண்டாதிருக்க வேண்டும் தீ

-வி.அமலன் ஸ்டேன்லி.

வாரா மழையும்;வரளும் ஆறும்

கடவுள் வணக்கம்
தமிழ் வணக்கம் சொல்லி
கூட்டம் போட்டது போதும்

செடி வணக்கம்
பூ வணக்கம் சொல்லி
கூட்டம் போட சொல்கின்றன
வாரா மழையும்
வரளும் ஆறும்


-பாலா.

Thursday, July 19, 2012

மூடுதல்

பாழ் வெளியில்
ஓர் அரண் அமைத்து
இன்றெனைக் காக்கிறேன்

அழைப்பின்
எந்தக் குரலுக்கும்
நான் விலக்கப் போவதில்லை
எனது அரணை

என்னிடம்மிருந்ததையெல்லாம்
ஒவ்வொரு முறையும்
பலவந்தமாகப்
பறித்துச் சென்றீர்கள் .

இன்று
இச் சாய்வு நாற்காலியில்
யாருக்கும் தயங்காமல்
கால்களை நீட்டி
அமர்ந்திருக்கிறேன்

இப்பொழுதுதான்
தைரியமாய் இருக்கிறேன்
பாதுகாப்பாய் இருக்கிறேன்

யாரையும் அனுமதிக்க மாட்டேன்
என்னிடமிருந்து
எதையுமே பெற முடியாது

பொறுக்க இயலாதபடி
கத்துகிறார்கள்
சத்தமிடுகிறார்கள்
தூங்கவிடுவதே இல்லை.
எனினும் என் தனிமையை
உருவாக்குகிறேன்
இந்த இரைச்சல்களின் உள்ளிருந்து

எப்போதாவது கேட்கிறது
புதுமையாய்
வியப்பூட்டும் அழைப்பு

யாரோ
எதையோ
கொடுக்க வந்திருக்கிறார்கள்

வஞ்சகமுள்ள அழைப்புகளின்
பயங்களால்
எனது அரணை இன்னும்
வலுப்படுத்துகிறேன்

வழி தவறி வந்த
தேவதைகள் சிலவும்
திரும்பிப் போயிருக்கக் கூடும்.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்"

மென் பாதங்கள்

பனிப்பாளங்களின் குளிர்ச்சியை
என் கால்கள் தாங்காது
ஆனால் அதன் முடிவில் நீயிருந்தால்
உனக்காகத் துள்ளி வருவேன்
பனிக் கதவுகள் ஒரு பொருட்டல்ல....

நடுப்பகல் சூரியக் கைகளின்
வெம்மை தாங்காது என் கால்கள்
ஆனால் எரிமலையின் உச்சியில்
உன்வீடு கட்டப்பட்டிருந்தால்
உனக்காக அக்னியில் நடமாடுவேன்
திரவகக் குழம்புகள் ஒரு பொருட்டல்ல....

மென்மைப் பூக்களை மட்டுமே
தொடுவேன் நான் ; என் கால்கள்
முட்களின் கூர்மையைத் தாங்காது
ஆனால் முட்கள் என் கால்களை
முத்தமிடுவதை நீ விரும்பினால்
சாகும்வரை அதில் நடனமாடுவேன்
முட்கள் எனக்கு பொருட்டல்ல.....

ஆனால்
உன் கோழைத்தன்மையை என்
கால்கள் பொறுத்துக்கொள்வதேயில்லை
மிதித்து அழிக்கவேவிரும்புகின்றன

காதலை சிலசமயம்
கால்களும் தீர்மானிக்கின்றன.

- கவிஞர் தாமரை .
"ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்"

கவிதை இறகு - ஆடி


அதிசயம்
திண்டுக்கல் பக்கம்
பயணிக்கிறபொழுதெல்லாம்
திராட்சைத் தோட்டங்கள்
கண்ணைக் கவரும்

சத்தியமங்கலத்தில்
வேலைகிடைத்தபோதுதான்
முதன் முதலாக
புகையிலைச் செடி பார்த்தேன்

நண்பனைக் காண
கொத்தமங்கலம்
போக நேர்ந்தபோது
மலைகளுக்கு நடுவே
மல்லிகைத் தோட்டங்கள்

நீக்ரோவின் முடியழகாய்
மனத்தைக் கவ்வின
ஊட்டி மலைச் சரிவுகளில்
தேயிலைச் செடிகள்

கன்னியாக்குமரியருகே
ரப்பர் மரங்களில்
பால் வடிவது கண்டு
குழந்தையைப் போல்
குதுகலித்திருக்கிறேன்

காபிச் செடியின்
நெருப்பு நிறக் கனிகளை
வருடிப்பார்த்திருக்கிறேன்
ஏற்காடுக் காடுகளில்

இவையெல்லாம்
அதிசயம்தான்

ஊருக்கெல்லாம் சோறுபோட
நெல்மட்டுமே விதைக்கும்
தஞ்சாவூர்க்காரனுக்கு.


-கோ .வசந்தகுமாரன்.
"மனிதன் என்பது புனைபெயர் "

Wednesday, July 11, 2012

அதுவே அதுவே உனது வேளை

நான் இல்லாத வேளை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
என் மகளே
வயலின் இசைத்துக் கொண்டு
தொலைபேசியில் உன் நண்பர்களோடு
அறையினுள்
அல்லது
உனது விரல்களில் வழியும்
வர்ணங்களின் கோடுகளோடு
அப்படியே தான்
நான் இல்லாத வேளையில்
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ
அதுவே அதுவே
உனது வேளை
என் மகளே.

-அப்பாஸ்
"ஆறாவது பகல்."

எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்த்து

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்த்து

-வி. அமலன் ஸ்டான்லி.
"மேய்வதும் மேய்ப்பதும் யாது..."

பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பர்சிக்கும போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

-கவிஞர் இசை
"உறுமீன்களற்ற நதி"

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்.

-வண்ணநிலவன்.
"தங்களுக்கும் ஒரு இறந்த காலமும்
ஏக்கமும் உருவாகுமென்று
ஸ்கூட்டர்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை
அவைகளுக்கும்
ஒரு காவிய முடிவும்
வழியனுப்புதலும் நிகழ்ந்து விட்டன.
மஞ்சள் விளக்குகள்
கடற்காற்று
அவைகளின் நினைவை அழித்துவிடுகின்றன
பட்டறைகளிலும்
எங்கோ இருட்டறைகளிலும்
கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றன
இந்த நெடிய பூமியில் எல்லோரும்
தொலைந்து போகும் அபாயத்தை எண்ணி..."

-சங்கரராம சுப்பிரமணியன்.

Thursday, July 5, 2012

"எரியும் பனிக்காடு"


"சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்."
என்ற தமிழ் நதியின் கவிதை நமக்கு சொல்வது நிறைய.

கோடை காலத்தில் எல்லோரும் மலை வாசஸ்தலங்களுக்கு சென்று அங்கிருக்கும் அழகை கண்டு களிப்போம்.குறிப்பாக தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு சென்று அங்கிருக்கும் செடிகளின் நடுவில் புகைப்படம் எடுப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

தேயிலை மற்றும் காபி செடிகளை விரும்பும் நாம் அவை செடிகள் என்று நினைத்திருப்போம். அவை ஒவ்வொன்றும் மரங்கள் போன்று வளரும் இயல்பினை உடையவை ஆனால் அதை கவாத்து செய்து மீண்டும் மீண்டும் அவைகளின் வளர்ச்சியை செடியாகவே வைத்திருக்கும் உண்மையை வசதியாக மறந்து விடுகிறோம் .

அந்த தோட்டங்களின் பிண்ணனியில் பல ஆயிரம் தொழிலாளிகளின் உழைப்பு மற்றும் தியாகம் இரண்டும் உள்ளது நமக்கு தெரியாது.அங்கு இருக்கும் ஓவ்வொரு செடியும் அவர்களின் கண்ணீர் மற்றும் ரத்தம் கலந்த வரலாறுக்கு சாட்சி.ஓவ்வொருவரையும் ஏமாத்தி அழைத்து சென்று அங்கு நடத்திய மனித உரிமை மீறல் என்பது எந்த பதிவுகளில்லும் மற்றும் ஆவணத்திலும் காணமுடியாது.தமிழர்களின் வரலாற்றில் மிக செம்மையாக மறக்கடிக்கப்பட்ட சயாம் மரண ரயில்பாதை போல இந்த தேயிலை தோட்டங்களின் அவர்களின் மரண போராட்டம் எவராலும் பதியப்படவில்லை.நாமும் அதைப்பற்றி கவலைபட்டதில்லை .

இருக்கும் ஒரே ஒரு நூல் மற்றும் நாவல் பி.ஹெச் .டேனியல் எழுதிய red tea மட்டுமே ஆகும்.இந்த நூலை தமிழில் மொழிப்பெயர்த்து இருக்கும் இரா.முருகவேலின் பணி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. தடையில்லா ,பிழையில்லா முழுமையான மொழிப்பெயர்ப்புக்கு இந்த நூல் ஒரு எடுத்துக்காட்டு.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வறட்சியின் காரணமாக பிழைப்பு இல்லாமல் அவதிப்படும் கருப்பன் ஒரு நாளில் தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏமாற்றி அழைத்து செல்லும் மேஸ்திரி சங்கரபாண்டியன் என்பவனை சந்திக்கிறான்.பணம் சம்பாதிக்கும் ஆசையை வளர்த்து, கருப்பனின் சூழ்நிலையை சங்கரபாண்டியன் அவனுக்கு சாதகமாக்கி கொள்கிறான்.தேயிலை தோட்டங்களை பற்றி அறியாத கருப்பனும் அவனது மனைவி வள்ளியும் அங்கு சென்று படும் அவஸ்தைகளே இந்த நாவல்.

மனதை கனக்கவைக்கும் ஒரு நாவல்.படித்து முடித்த பின்னும் கருப்பனும் .வள்ளியும் அவர்களின் வேதனைகளும் தாங்க முடியாத, நம் மனதை கலங்கடிக்கும் ஒரு நூல்.அங்கு ஆண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அவமானங்களும், பெண் தொழிலாளர்களுக்குஏற்படும் பாலியல் தொந்தரவுகளும் அவர்கள் அங்கு எப்படிப்பட்ட வாழ்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பது பற்றிய கவலையை நமக்கு நிச்சயம் உருவாக்கும்.

"பாடின்னா வரிசையா வீடுக இருக்கும்.அதை எஸ்டேட்ல லைன்னு சொல்லுவாக.ஓவ்வொரு குடும்பத்துக்கும் படுத்துகிறதுக்கு ஒரு அறையும்,சமைக்கிறதுக்கு ஒரு அறையும் குடுப்பாக.ஒரு லைன்ல அஞ்சு வீடு இருக்கும்.சில சமயம் ஆறு ஏழு கூட இருக்கும்.அதனால எஸ்டேட்டும் நம்ம ஊரு மாதிரிதான்லே.எங்கயோ வந்திட்ட மாதிரியோ,தனியா இருக்குற மாதிரியோ இருக்கவே இருக்காது.நெறைய காசு கெடைக்கும் .நல்ல சோறு கெடைக்கும்.சின்ன சின்ன வேலைதான் செய்ய வேண்டியிருக்கும்.சந்தோசமா இருக்கலாம்".

"எஸ்டேட்டுக எல்லாம் காட்டுக்கு நடுவில் இருக்கும்னும்,அங்கிருக்கிறது ரொம்ப கஷ்டம்னும் சொல்லுதங்களேண்ணே?"

"அதெல்லாம் முட்டாபயக பேச்சு.ஒரு காலத்தில் நெசமாலுமே காடாத்தான் இருந்திச்சு.ஆனா இப்ப ஒவ்வொரு ஸ்டேட்டும்,நம்ம ஊரு பத்துப் பதினஞ்சை ஒண்ணா சேத்தா எவ்வளவு பெருசா இருக்குமோ அவ்வளவு பெருசா இருக்கும்.சோம்பேறிப் பயல்களுக்கு எங்கயிருந்தாலும் கஷ்டம்தான்.வேல செய்யணும்,காசு சேக்கணும்னு நெனைகிறவனுக்கு அங்கே எவ்வளவு நல்லாயிருக்கும்னுதெரியுமாடே. நீ இங்க பொழைக்கிற நாய்ப் பொழப்புக்கு அது எவ்ளவோ நல்லயிருக்கும்லா!.

"ஒண்ணு ரெண்டு மாசத்துல இந்த வாழ்க்கைக்கு பழகிப் போயிருவ. அப்புறம் இத்தன வெசனம் இருக்காது"என்றான் முத்தையா.

"எங்களுக்கு இந்த இடம் புடிக்கல. ராத்திரி குளிர்ல தூக்கமே வரமாட்டேங்குது . தண்ணிகூட ஜில்லுன்னு இருக்குது.கை கழுவினா வலிக்குது.இங்க எல்லாமே பயங்கரமா இருக்கு.வெள்ளத் தொரைங்க தங்கமானவங்க, அன்பானவங்கன்னு மேஸ்திரி சொன்னான்.ஆனா நான் பாத்தவரைக்கும் அந்த மாதிரி தெரியல. மேஸ்திரி கூட இங்க வந்த பின்னாடி ஆளே மாறிட்டான். ஒரு வருஷம் முழுக்க இவங்கிட்டே வேலசெய்யவே முடியாது.எங்களுக்கு இந்த எடம் புடிக்கல.ஊருக்குப் போறோம்னு நாளைக்கு சொல்லபோறேன்".

"ஊர விட்டு வரும்போது மேஸ்திரிகிட்ட பணம் எதாவது வாங்கினியா?"சங்கன் கேட்டான்.

"மேஸ்திரி பணம் கொடுக்கல. ஆனா வெள்ளத் தொரையோட ஏஜெண்டுன்னு ஒருத்தன்கிட்ட நாற்பது ரூபாய் வாங்கினேன் "

"அப்ப உன்னப் போக விடமாட்டாங்க. மொதல்ல பணத்தக் குடுத்துட்டுப் போன்னுதான் மேஸ்திரி சொல்லுவான். அதோட திரும்பப் போகப் பணத்துக்கு என்ன பண்ணுவ?" சங்கன் கேட்டான்.

"நாங்க நடந்தே போயிருவோம். மூணு நாள்ள ஊருக்குப் பொய் சேந்திடுவோம்னு நெனைக்கேன்"

"புதுசா வரவங்க ஒவ்வொருத்தரும் இதே தப்பைத்தான் செய்யறாங்க" என்றான் சங்கன்.

"ரயில்ல இங்க வர இரண்டு நாளாச்சுங்கறதால மூணு நாள்ல திரும்ப நடந்து போயிரலாமுனு நெனைக்காத.எவ்வளவு தூரம் ரயில்ல வந்திருக்கேன்னு உனக்கு தெரியாது.உங்க ஊருக்கு இங்கிருந்து 200 மைலுக்கு மேல இருக்கும்.இவ்வளவு குறைந்த தூரத்த நீங்க நடந்தே போனாலும் ஊரு போய்சேர குறைஞ்சது ரெண்டு வாரமாவது ஆகும்"

"பரவால்ல.நான் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நாங்க எவ்வளவு தூரமா இருந்தாலும் நடப்போம்.சாப்பாட்டுக்கு வழியில பிச்சை எடுத்துக்குவோம்" கருப்பன் தளராமல் சொன்னான்.

"இந்த மாதிரி பேசி பிரயோஜனமேயில்ல. நாற்பது ருபாய் திருப்பித் தராம மேஸ்திரி உன்னப் போக விடவே மாட்டான்."

"அப்படியே ஒருவேள இந்த எஸ்டேட்டிலிருந்து தப்பிச்சு போனாலும் பொள்ளாச்சி பொய் சேரவே மாட்ட". முத்தையா தீர்மானமாக கூறினான். "பொள்ளாச்சி தாண்டி வரும்போது ஊமையாண்டி முடகு என்ற இடத்த தாண்டி வந்தது நியாபகமிருக்கா. அங்க ரோட்டுக்கு பக்கத்துல ஒரு கட்டடத்துல ஒரு டாக்டரும், ஒரு ப்யுனும் இருக்கிறதப் பார்த்திருப்பே. கூலிக்காரங்க தப்பி ஓடிரக்கூடாதுன்னுதான் அவங்கள வெள்ளை தொரமாரு அங்கன வச்சிருக்காங்க. அது பக்கத்துல ரோட்டோரமா ஆளுக ஏற முடியாத மல ஒன்று இருக்கு. இன்னொரு பக்கம் பயங்கரம்மான பள்ளம். இந்த எடத்த தாண்டாம நீ போக முடியாது. பாஸ் இல்லாம உன்ன தாண்டி போக விடவும் மாட்டாக. எஸ்டேட்டுல இருந்து பாஸ் இல்லாம வாறவங்கள புடிச்சு வேற ஆளுங்க பாதுகாப்போட திரும்பவும் எஸ்டேட்டுக்கே அனுப்பிடுவாக. அப்படி பிடிபட்டா உனக்கு நரகம்தான். இதுக்கு முன்னால ஓடிப்போன எத்தனையோ கூலிகாரன்கள மேஸ்திரிக அடிச்சே கொன்னிருக்காவ தெரியுமா? தயவு செஞ்சு இங்கேருந்து ஓடிப் போணும்முன்னு மட்டும் நெனைக்காத. தைரியமா இரு. ஒரு மாசம் தாக்குப் புடிசேன்னா இடமும், குளிரும் பழகிரும். பொறவு இவ்வளவு வருத்தம் இருக்காது . சங்கரபாண்டியன் மேஸ்திரியோட வந்தது உன்னோட யோகம் தெரிஞ்சிக்க. மத்த மேஸ்திரிங்கள விட அவன் பரவாயில்ல. இதே கம்பெனிக்கு சொந்தமான இன்னொரு எஸ்டேட் பக்கத்துல இருக்கு. அதில யூசுப்புன்னு ஒரு மாப்ளா மேஸ்திரி இருக்குதான். அவன் கூலி ஆளுகள ஆடுமாடு மாதிரிதான் கேவலமா நடத்துவான். ராத்திரி நேரத்துல எல்லா கூலிகளையும் லைனுக்கு உள்ளே அடச்சு கதவுகள வெளியே பூட்டிடுவான்.பகல் நேரத்துல கூட யாரும் ஓடாம பாத்துக்கறதுக்கு காவல்காரங்க இருப்பாக. யாராவது கிறுக்குத்தனமா தப்பிச்சு ஓடினா அவன அடிச்சே கொன்னுடுவாங்க. இந்த மாதிரி யூசுப் நிறைய கூலிகளை கொன்னிருக்கான். இந்தத் தோடத்தில்லாவது நாம நம்ம குடும்பத்தோட இருக்கலாம். யூசுப் மேஸ்திரி குடும்பமா இருக்கிற யாரையும் வேலைக்கு சேர்க்கமாட்டான். அவனோட கூலிங்க பெரும்பாலும் ஆம்பிள்ளைங்கதான். கூலிகளுக்கு சமைச்சுப் போடுறதுக்கு ஆம்பள சமையல்காரனதான் வச்சிருப்பான். அவங்களுக்கு காலையிலும் கஞ்சிதான் ராத்திரியும் கஞ்சிதான். கூலிகள கவனிக்குறதுக்குனே நெறைய ரவுடிகள வச்சிருக்கான். ஒரு சின்னப் பிரச்சனன்னாக்கூட ரவுடிகள வுட்டு அடிச்சு நொறுக்கிடுவான். நெறைய கூலிங்க செத்துப் போயிருக்காவ. கொலைகார யூசுப் மேஸ்திரிக்கு அதப்பத்தியெல்லாம் கவலையே இல்ல. துரைங்களுக்கு அவங்க வேல நடந்தா போதும். மத்தப்பத்தி அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. இதையெல்லாம் கணக்கு போட்டா சங்கரபாண்டியன் கிட்ட எவ்வளவோ நல்லயிருக்கலாம் தெரிஞ்சுக்கோ."

கூலிகளாய் ஆசை காட்டி அழைத்துவரப்பட்டு அவர்களை கொடுமைப்படுத்தி எஸ்டேட் தோட்டங்களை வளப்படுத்திய துயரம் சொல்லும் ஆவணம் இந்த
"எரியும் பனிக்காடு". நல்ல நூல்களை விரும்பும் அனைவரின் நூல்கள் சேமிப்பில் தவறாது இடம் பிடிக்கக்கூடிய நூல் இது.

"எரியும் பனிக்காடு" - பி.எச்.டானியல். தமிழில் -இரா.முருகவேள் .
விலை -ரூ 150 /-
விடியல் பதிப்பகம்,
88 , இந்திரா கார்டன் 4வது வீதி ,
உப்பிலிபாளையம் அஞ்சல்,
கோயமுத்தூர் - 641 015 .
தொலைப்பேசி- 0422 2576772 , 94434 68758 .
email - vidiyalpathippagam2010@gmail .com .