Tuesday, July 27, 2010

ஒரு பழைய வீடு

இந்த வீடு மிகவும் சிறியதுதான்
இதன் வெளிப்புறச் சாயங்கள்
மங்கிப்போய் விட்டன
சுவர்கள்
சரியத் தொடங்கி விட்டன
இன்று யாரும்
இங்கு வசிப்பதில்லை
இந்தத் தெருவாசிகளுக்கு
இதுவும்
மற்றொரு
பாழடைந்த வீடு

சுவாசத்தைச் சற்று அடக்கி
ஒட்டடைகளைச் சிறிதே விலக்கிக்
கொஞ்சம்
உள்ளே வாருங்கள்

இந்தத் தூசிபடிந்த தரையில்
காடாகி விட்ட
இக்கொல்லைப்புறத்தில்
இன்னும்
இவ் வாசற்படிகளில்
திண்ணையில்
சற்றுக் கவனமாய்ப் பாருங்கள்

சிறிதும் பெரிதுமாய்ச்
சில காலடிகள் தெரியவில்லை ?
மனிதர்கள் வாழ்ந்த
இடம்தான் இது

இந்தக் குழந்தைகள் வளர்ந்தும்
பெரியவர்கள் இறந்தும்
காணாமல் போய் விட்டார்கள்
உண்மைதான்

ஆனாலும்
தடங்களை முழுக்க
இவர்களால்
அழித்துவிட முடியவில்லை

இந்தக் காரை உதிரும் சுவர்களில்
சிவப்புத் தொப்பியணிந்த
போலீஸ்காரன் படங்களும்
கரடி
ரயில்
டில்லி களும்
இன்னமும் மங்கலாய்
எனக்குத் தெரிகின்றன

இந்த மாட்டுத் தொழுவத்தைத்
தாண்டுகையில்
மார்கழி மாதப்
பறங்கிப்பூ மணம்
வீசவில்லை ?

இன்னும் இன்னும் ...
அங்கே அதோ ...
சரி சரி
உங்கள் அவசரம் புரிகிறது
ஆனால்
என்னதான் சொல்லுங்கள்
இன்னமும்
இது
என் வீடுதான்.


-வெ. அனந்த நாராயணன்.

வனதேவதை

அநாதி காலத்தில் சந்தித்திருக்கிறோம்
உனக்காக நான் கொண்டு வந்த வார்த்தைகள்
தொண்டைக் குழியை முட்டுகின்றன.

மௌனத்தை உடைக்கும் முனைப்பில்
அசட்டுத்தனத்தோடு வெகு இலகுவாகப்
பொய்யுரைக்கின்றன

வெற்றுப் புன்னகைகள் மனதைத்
துளைக்கும் பொழுதுகளில்
நாணிச் சிரிக்கின்றேன்

அப்பொழுதெல்லாம்
உதிர்ந்து கிடக்கும் வருத்தங்கள்
பேரழுகையாய் விண் முட்டுகின்றன

எனது கால இடைவெளிகளில் எல்லாம்
தொலைந்துபோன தேவதைகள் குறித்து
வனமெங்கும் பிதற்றித் திரிகிறேன்.

-நிஷாந்தினி .

Sunday, July 18, 2010

கவிதை இறகு-ஆடி

வானப்பறவை கூவி சொன்னவை

தன் காலங்களின்
வரையறைகளுக்கேற்ப
இயல்பாகவே அப்பறவை
நம் நாட்டை நோக்கி வருகிறது

உயரங்களில் இருந்து
பார்க்கையில்
நிலப்பரப்புகளின் தன்மையில்
சாதாரணமற்ற தோற்றம்

கீழ்நோக்கி நெருங்க
கண்களுக்குள் வலியுறச் செருகியது காட்சிகள்
வயல் வெளிகளை
விழுங்கி நிற்கும்
கட்டிடங்கள்

காடுகளின் பசுமைமிகு
ஆடைகளைக் கிழிக்கின்ற
சுற்றுலாத் தளங்கள்

புல்வெளிகளின்
அழகுத் தோற்றம் மறைத்து
மக்காத பொருட்களின் ஆக்கிரமிப்பு

நீரோட்டம் தவிர்த்து
மரணித்த நதிகளின்
சலனமற்ற சடலத் தோற்றம்

ஆங்காங்கே மிச்சமாகி
நிற்கும் உயிரிழந்த
மரங்களின் எலும்புக்கூடுகள்

அவற்றில் ஒன்றின்
இறுதி இலையும் நிலம் சேர
அப்பறவியின் ஒற்றை விழிநீர்த்துளி
அதன்மேல் விழுந்து சிதறியது ....

மனம் கதற
திரும்புகையில்
அப்பறவை ஒலியதிரக் கூவியது

மிச்சம் இருக்கும் பசுமையையும்
அழித்துவிடாதீர்
இந்நாட்டின் சொந்தப் பறவைகள்
இங்கு இருக்கின்றன ஏராளம்

அவைகளுக்கு கண்டம் தாண்டத் தெரியாது....!
- கலாசுரன்.

முதல் சந்திப்பில் உன் முன்னால்...

முதல் சந்திப்பில் உன் முன்னால்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகினை
நான் பிய்த்தெரிந்தது பற்றி
எனக்கொன்றும் கவலையில்லை
பல நூறு வண்ணத்துப் பூச்சிகளும்
பறவைகளும் மலர்களும்
மரங்களுமுடைய என் தோட்டத்தில்
உன்னைக் குறித்து எதுவும் தெரியாமல்
அனுமதிக்க முடியாது
பிய்ந்த சிறகுகளுக்கான ரத்தம்
உன்னிடமிருந்து ஒழுகுவதைப்
பார்க்க வேண்டும் நான்.
- யூமா.வாசுகி.
"அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு"