Friday, April 20, 2012

அரங்கேறும் சொற்கள்

கன்று தான் சிங்கம் என்பான்
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான்
பருந்து தான் மஞ்ஞ என்பான்
அன்றிலே காக்கை என்பான்
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம்
வேதமல் லாமல் என்ன?

பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ;
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான்
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம்
உண்மையல் லாமல் என்ன?

நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன் போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?

சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே.

--கவியரசு கண்ணதாசன்.

ஒற்றை ரோஜா

ஒரு ரோஜாப்பூவை
சூடிக்கொண்டிருந்த பெண்
என்ன நினைக்கிறாள்
சீர்காழி பஸ்ஸில் ஏறி
சிதம்பரம் போகிறாளா?
வழியில் எங்காவது
இறங்கி விடுவாளா?

அலுவலகம் போகிறாளா?
வகுப்பிற்குச் செல்கிறாளா?
வீட்டிற்குத்தான் போகிறாளா?

ஒற்றை ரோஜா
புத்தம்புது மலராய் மினுமினுக்க
அவள் கன்னத்திலும்
சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

-அழகியசிங்கர்.

Tuesday, April 17, 2012

கவிதை இறகு - சித்திரை

இன்னும்

புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகளும் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு
காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப் பூட்டும்
கிளைகளில் தவழ்ந்து கொண்டு
பாசிக் கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரை நிழல் கீழமர்ந்து.
பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகள் கேட்டாற் போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்
சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்து கொண்டு
கற்புடைப் பெண்டிற் கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க் கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.


-ஆத்மாநாம்.