Saturday, July 25, 2009

கவிதை இறகு - (ஆடி மாதம்)

கன்னியாகுமரி
-மாலதி மைத்ரி

விரிந்த கரையின் தனிமையில்
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
விடியலில் வந்தவள்
இன்னமும் திரும்பவில்லை

காலையிலேயே வாதம் தொடங்கிவிட்டது
எதையோ இவள் கேட்பதும்
அவள் மறுப்பதுமாக

சிறுபிள்ளையின் ஆசைக்குச் சிறிது
அக்கறை காட்டியிருக்கலாம் அவள்
இவ்வளவு பெரியவளால்
கொஞ்சமாவது உதவமுடியாதா என்ன

நீலம் பச்சை வெளுப்பு
எத்தனை முகம் காட்டினாலும்
இவள் விடுவதாக இல்லை கோரிக்கையை
பின்பு சிவக்க

எட்டி இடதுகையால் மறுவிளிம்பைப்
பிடித்து இழுத்து
வலதுகையால் ஆரஞ்சு மிட்டாயை எடுத்து
வாயில் திணித்துக்கொண்டு திரும்புகிறாள்
உதட்டிலிருந்து ஒளிச்சாறு வழிய


சிறுமியிடம் தோற்ற சோகத்துடன்
முக்கடலும் முகம் கறுத்துக் கிடக்கிறது

Friday, July 24, 2009

தமிழனுடைய மூளையில் மட்டும் தமிழ் இல்லை!

வெடிகள் சிதறும் ஒலிகள்
வேடிக்கை தெருவெல்லாம்
என்ன வெளியே?
எட்டிப் பார்த்தேன்.

தேர்தல் வெற்றித் திருவிழா ஊர்வலம் நம்மவர்,
மேளங்கொட்டுறார், குதிக்கிறார், விழுகிறார்.
கோஷம் போடுவார்
நடுவே
கோடியுடுத்த மாப்பிள்ளையாக
மா.அ. சபைத் தலைவர் வருகிறார்
மாலை மரியாதையுடன்
வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தை
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.

58இல் தொடங்கி அடுத்தடுத்து
அடிவிழுந்த பின்னாலும்
என்ன செய்தார் இவர்கள்?
அடித்தாரைச் சொல்லி
அழுதழுது வாக்குப் பெற்றார்;
கூட்டுச் சேர்ந்தும் கொள்கை முழக்கி
வெற்றிகள் குவித்தார்.

தேர்தல் எனும் வேசி
விடுதலைக் குழந்தை ஈவாள் எனச்சொல்லி
பாராளுமன்றத்தில் 'கூடல்' செய்தார்.
மாவட்டந் தோறும் தங்கு மடங்கட்ட
முண்டு கொடுப்போம் என்றார்.
தேர்தல் பந்தல் சோடனைகள்
ஒருபுறம் நடக்க மறுபுறம்
தீண்டிற்றே நெருப்பு.

77இன் எரிதழற் காயங்கள் ஆறமுன்னம்
மீண்டும் எரிநெருப்பில் தமிழ்-ஈழம்

காக்கி உடைகளும் காடையர் கூட்டமும்
கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார்
எரிமலைப் பிரதேசம் போல்
எல்லாமே நாசம்.

தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத்
தமிழரெல்லாம் ஒப்பாரி வைக்கிறார்;
விடுதலை பெற வியலாத
மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும்
பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய்
பதவிகளை உதறாமல்
பகிஷ்கரிப்பு 'ஊடல்' செய்வார்.

பதவிகளை உதறி எறிந்திருந்தால்
உலகின்
மனச்சாட்சியையே உலுப்பியிருக்காதா?
எமைச் சுற்றி நாமிட்ட
வேலிகள் தகர்ந்து
விடுதலைக்கு ஒரு வழி திறந்திருக்காதா?

ஆனால்,
எதை உதறினாலும் பதவிகளை உதறோமென
தோளிட்ட துண்டுகளை எடுத்து உதறியவாற
இதோ வருகிறார் தலைவர்கள் ஊர்வலமாய்,
சவக்காட்டில் வெற்றிச் சங்கூதி.

அதிலென்ன?
இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு
படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள்
பயணம் தொடரட்டும்!

-சு.வில்வரெத்தினம்.
(1985-இல் எழுதிய கவிதை .இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துவது வேதனை. இன ஒற்றுமை இல்லாதது தமிழினத்தின் சாபக்கேடா?
"உலகின் எல்லா மூலையிலும் தமிழ் இருக்கின்றது
தமிழனுடைய மூளையில் மட்டும் தமிழ் இல்லை!"
என்ற கவிஞர் அப்துல் ரஹ்மான் கவிதை உண்மை.

Sunday, July 19, 2009

அழகி மீனாட்சி!

படிதாண்டி குளம் சுற்றி
உனைத்தரிசிக்க வரும் உன்மகளை
உன்மகனே கேலிசெய்கிறான்
அழகி மீனாட்சி!
உன்காலத்தில்
எப்படி நீ உலாப்போனாய்?
-இரா.மீனாட்சி ('இரா.மீனாட்சி கவிதைகள்')
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.
-ஜீ.ஆர்.விஜய். இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்.
-பெயர் தெரியவில்லை .

யானை கட்டி
போரடித்தால் தேறாது
என்று
பூனை கட்டி போரடிக்கும்
சோழ நாடு.
-பெயர் தெரியவில்லை .
நாடு சுடுகாடாய்
இருப்பதால்
உலக அதிசயமாய்
ஒரு கல்லறை
!
-கபிலன் .
பசுவுக்கு
உண்ணி பிடுங்கி கொண்டிருக்கும்
அப்பாவும்
ஆட்டுகுட்டியை
மடியில் போட்டு
ஈத்தி கொண்டிருக்கும்
அம்மாவும்
படித்ததில்லை
" உயிர்களிடத்தில் அன்பு வேணும் "
-இளம்பிறை .
கந்தை ஆனாலும் கசக்கி கட்டு
சரி
காயும் வரை எதை கட்டுவது?
-பெயர் தெரியவில்லை .
அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.
-கல்யாண்ஜி.

வாழவே எழுந்தோம்!

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்தூந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்
. அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

-சண்முகம் சிவலிங்கம்.

Saturday, July 18, 2009

எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ?

விதியே விதியே தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?
- பாரதியார்


வங்கக் கடல் அலையே
மாரடித்துக் கதறினையோ.
இமய முகட்டிலும் போய்
இடித்துக் கண் வடித்தாயோ.
நாதியற்ற தமிழகத்து மீனவர்கள்
சேதுக் கடலில் சிந்திய செங்குருதி
கங்கை வடி நிலத்தில்
கொட்டி அரற்றினையோ.
இவர்களும் இந்தியரே
என்று வடபுலத்து
மன்னர் உணரவென
வாய் விட்டு அழுதாயோ.

இந்தியன் தமிழன்
என்பதனால் மீனவர் நீர்
சிங்களத்துப் படைகளுக்குச்
சிறு புழுவாய்ப் போனீரோ.
அதனால் கேட்பார் இலி நாய்போல
தினந்தோறும் உம்மைச்
சிங்களவன் சுட்டுச் சேதுக் கடல் எறிவான்.
முன்னர் ஒரு தடவை
இலங்கைக் கடற் படையை
கட்டி இழுத்து வந்தார்
இராமேஸ்வரக் கரையில் சிறைவைத்தார்.
அந்நாளில்
உங்கள் மேல் கைவைக்க அவர்கள்
இரண்டுதரம் யோசித்தார்.
அன்று மீனவரே நீங்கள்
இந்தியர் தமிழரென
தலை நிமிர்ந்தீர் கடல்களிலே.

ஒன்றல்ல இரண்டல்ல
306 பிணம் வீழ்ந்தும் உங்களுக்காய்
ஏனென்று கேட்க
தலைவனென இன்று
இலையோ தமிழகத்தில் .
உங்களைக் காக்க
டெல்கியிலும் எவரிலையோ.
சென்னைச் சிற்றரசருக்குத்
தமிழன் யார்
டெல்கிப் பேரரசருக்கு
இந்தியன் யார்
பெரும் வாக்கு வங்கி உள்ள
சாதிகளைச் சேர்ந்தவர்தான்.
தனிக் கட்சி கட்டவல்ல
சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
உங்களுக்கோ வாக்கு வங்கி
ஒன்றும் பெரிதில்லை.
அதனால் கொன்றாலும் ஏனென்று
குரல் கொடுக்க யாருமில்லை.
தமிழகமே உனக்குத்
தன்னாட்சி எதற்காக
இந்தியாவே உனக்குப்
படை அணிகள் எதற்காக
சேதுக் கடலை
மேலும் தமிழகத்து மீனவரின்
இடுகாடாய் ஆக்கவென்றா
சிங்களத்துக் கடற்படைக்கு
டெல்கியே நீ போய்
போர்க் கப்பல் பரிசு தந்தாய்.
தமிழகத்து மாகவிகாள்
தலைமைக் கலைஞர்காள்
படை வந்து அன்னியர் உம்
பல் நூறு சகோதரரை
கொல்கின்ற போதும்
குரல் கொடுக்க மாட்டாரோ.
கல் நெஞ்சோ உங்கள்
கடற் கரையில் எந்நாளும்
தாலி அறுந்து
தமிழ்ப் பெண் அழ விதியோ?
-வ. ஐ. ச. ஜெயபாலன்

படித்ததில் பிடித்தது 1

ஒரு வலை தளத்தில் படித்த கவிதை
கவிஞர் ஜெய.பாஸ்கரன் எழுதியது

இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்
.
பலமுறை"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.
அடிக்கடி"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.