Friday, July 24, 2009

தமிழனுடைய மூளையில் மட்டும் தமிழ் இல்லை!

வெடிகள் சிதறும் ஒலிகள்
வேடிக்கை தெருவெல்லாம்
என்ன வெளியே?
எட்டிப் பார்த்தேன்.

தேர்தல் வெற்றித் திருவிழா ஊர்வலம் நம்மவர்,
மேளங்கொட்டுறார், குதிக்கிறார், விழுகிறார்.
கோஷம் போடுவார்
நடுவே
கோடியுடுத்த மாப்பிள்ளையாக
மா.அ. சபைத் தலைவர் வருகிறார்
மாலை மரியாதையுடன்
வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தை
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.

58இல் தொடங்கி அடுத்தடுத்து
அடிவிழுந்த பின்னாலும்
என்ன செய்தார் இவர்கள்?
அடித்தாரைச் சொல்லி
அழுதழுது வாக்குப் பெற்றார்;
கூட்டுச் சேர்ந்தும் கொள்கை முழக்கி
வெற்றிகள் குவித்தார்.

தேர்தல் எனும் வேசி
விடுதலைக் குழந்தை ஈவாள் எனச்சொல்லி
பாராளுமன்றத்தில் 'கூடல்' செய்தார்.
மாவட்டந் தோறும் தங்கு மடங்கட்ட
முண்டு கொடுப்போம் என்றார்.
தேர்தல் பந்தல் சோடனைகள்
ஒருபுறம் நடக்க மறுபுறம்
தீண்டிற்றே நெருப்பு.

77இன் எரிதழற் காயங்கள் ஆறமுன்னம்
மீண்டும் எரிநெருப்பில் தமிழ்-ஈழம்

காக்கி உடைகளும் காடையர் கூட்டமும்
கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார்
எரிமலைப் பிரதேசம் போல்
எல்லாமே நாசம்.

தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத்
தமிழரெல்லாம் ஒப்பாரி வைக்கிறார்;
விடுதலை பெற வியலாத
மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும்
பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய்
பதவிகளை உதறாமல்
பகிஷ்கரிப்பு 'ஊடல்' செய்வார்.

பதவிகளை உதறி எறிந்திருந்தால்
உலகின்
மனச்சாட்சியையே உலுப்பியிருக்காதா?
எமைச் சுற்றி நாமிட்ட
வேலிகள் தகர்ந்து
விடுதலைக்கு ஒரு வழி திறந்திருக்காதா?

ஆனால்,
எதை உதறினாலும் பதவிகளை உதறோமென
தோளிட்ட துண்டுகளை எடுத்து உதறியவாற
இதோ வருகிறார் தலைவர்கள் ஊர்வலமாய்,
சவக்காட்டில் வெற்றிச் சங்கூதி.

அதிலென்ன?
இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு
படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள்
பயணம் தொடரட்டும்!

-சு.வில்வரெத்தினம்.
(1985-இல் எழுதிய கவிதை .இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துவது வேதனை. இன ஒற்றுமை இல்லாதது தமிழினத்தின் சாபக்கேடா?
"உலகின் எல்லா மூலையிலும் தமிழ் இருக்கின்றது
தமிழனுடைய மூளையில் மட்டும் தமிழ் இல்லை!"
என்ற கவிஞர் அப்துல் ரஹ்மான் கவிதை உண்மை.

No comments:

Post a Comment