Sunday, July 26, 2015

கவிதை இறகு -ஆவணி


கவிதை இறகு -ஆவணி

இந்த நாடு என்னுடையதல்ல ஆனால் 
இந்த மண் என்னைப் போன்றது 
இந்த குளம் என்னுடையதல்ல ஆனால் 
இந்த நீர் என்னைப் போன்றது
இந்த எல்லை வரையறைகளை 
 நான் மறுதலிக்கிறேன் ஆனால் 
இந்த காற்று என்னைப் போன்றது 

இக்கடிகாரமும் நாட்காடியும் 
என்னுடையதல்ல 
ஆனால் காலமும்  பொழுதும்
என்னைப்போன்றது 

இந்த வனத்தை நான் உரிமை கோருவதில்லை 
ஆனால் 
என்னைப் போலவே இவ்வனமும் 
அடைகாக்கிறது கருத்தரிக்கிறது 
உயிர்களைப் பதியனிடுகிறது 
என்மீதானதைப்  போலவே 

இந்த மண்ணின் மீது 
நீரின் மீது 
காற்றின் மீது 
காலத்தின் மீது 
வனத்தின் மீது 
நீங்கள் செலுத்துகிற அதிகாரத்தை 
அடக்குமுறையை 
ஒவ்வொரு அணுவிலும் 
நான் எதிர்ப்பேன் 
இது என்மொழி
உங்களது  போராட்டமும் அதுதானென்றால் 
உங்களுக்கும் புரியக்கூடும் அம்மொழி .....!

-செங்கவின்.

அம்மனும் அம்மாவும்



அம்மனும் அம்மாவும்

எங்களுக்கு மட்டும் என் இப்படிஎன்றால் ?
என்றாள் அம்மா.

எல்லாம் கிரகங்களின் சஞ்சாரம்மா
அஞ்சாறு மாசம் போனா சரியாயிடும் போ

வனதுர்க்கை கோயிலுக்கு அந்தியிலே
ஒரு மண்டலம் விளக்கு போடு

பிடிச்ச கஷ்டமெல்லாம் விலகிப்போகும்
என்றார் பூசாரி தாத்தா

குடும்பத்தின் துன்பமெல்லாம்
தொலைந்துடும் அம்மான் நம்பிக்கை

வயல்வெளியின் நடுவில்
ஒரு கோவில் அடையாளம் காட்டப்பட்டது.

அம்மன் ஆக்ரோசமானவளாச்சே
அங்க எதுக்கு?பயமும் அறிவுறுத்தப்பட்டது.

அம்மாவை தொடரும் நான்
என்னை தொடரும் பயம்

இரண்டு மைல் நடையில்
தினம் வரும் அந்தத் திறந்தவெளிக்கோவில்

ஒரு தீப்பெட்டி தீரும் வரை
தொடரும் விளக்கேற்றுதல்
காற்றை பொறுத்து
சில சமயம் அதுவும் தாண்டும்

திரிகள் வேராகும்
எண்ணெய் நீராகும்
விளக்கு சூரியன்
வெளிச்ச விதையாகும்

கறுப்பு நுனி பெற்றெடுத்த
நெருப்புக் குழந்தை
காற்றோடு போராடும்

கோயிலை சுற்றிய இருட்டு
என்னை மிரட்டும்

அங்கும் இங்கும்
அலையும் தீபம்

இப்படித்தான் நம் குடும்பமும்
அல்லாடுகிறது என்று
தீபம் நேராக எரியும்வரை
கைகூப்பி வேண்டுவாள் அம்மா
குடும்பத்துக்காய் போராடும் அம்மா

காற்றோடு போராடும் தீபம்
இதில் யாரை வணங்குவது ?
இன்றும் தொடர்கிறது
அம்மா மீதான பக்தியும் பக்தியும்
அம்மன் மீதான பயமும்?

-பாலா.