Wednesday, August 25, 2010

என் கணக்குப் புத்தகம்

சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.


புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.


- சிறீ.நான்.மணிகண்டன்.

என்ன ஆனார்கள்?

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன‌
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

-இரா.பூபாலன்.

இலையசைத்து அவளை ஆசீர்வதிக்கிறேன்

….இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
…வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறை வைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.
…என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.

அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.

ஒரு சிறுமி கேட்கிறாள்,
‘இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?’
பதில் வருகிறது.

‘அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது’
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
‘பூமியில் வைத்தால்தானே வளர முடியும்’
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
‘பெண்ணே நீ ஆலமரமாவாய்!’

-வத்ஸலா.

Wednesday, August 18, 2010

கவிதை இறகு-ஆவணி

அம்மா,
அஞ்சுநிமிஷம் பொறு என்று
அடுத்தொரு முறை சொல்லாதே.
நீ பொறுக்கச் சொல்வது
முந்நூறு செகண்டுகள்
புரிய மாட்டேனென்கிறது உனக்கு
கவர்பால் வரவில்லையா?
கருப்புக்காபி கொடு
குடிக்கிறேன்
தீய்ந்த தோசையோ
உப்புப் போட மறந்துபோன உப்புமாவோ
ஏதோ ஒரு எழவு - தட்டில் வை.

நிதானமாய் சாப்பிட முடியாது
எட்டு மணிக்குப் பசிக்காமலிருக்க
ஐந்தரை மணிக்குத் தின்கிறேன்
இதிலென்ன நிதானம் வேண்டிக் கிடக்கிறது

டிபனைக் கட்டு.
ஐயோ, பித்தளைத் தூக்களவு வேண்டாம்
மூணு பிடியென்றால் பிண்டப் ப்ரதானமென்பாய்
நாலு பிடி வை.

வாட்டர் பாட்டிலைக் கொடு
வக்காளவோளி நாட்டில்
குடிக்கிற தண்ணீரைக் காசு பண்ணுகிறான்
கும்பலான இடமானால்
ஒண்ணுக்குப் போனாலும் காசு கொடுக்கணும்
அடுத்த பஸ்ஸில் போகமுடியாது
மூன்றாவது லேட்டுக்கு
மூதேவி கம்பெனியில்
அரைநாள் சம்பளம் அம்பேல்

ஒப்பித்து மாளவில்லை
அம்மா,
பொறுமையாய்
மெதுவாய்
நிதானமாய் - அப்பா காலத்துடன் போய்விட்டது.

இது என் காலம்
வெள்ளென எழுந்திரு
சீக்கிரம் சமை
வேகமாய் டிபனைக் கட்டு
வரட்டுமா -

பாவம் அம்மா...

- லாவண்யா.
"இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்"

உன் வருகைக்காக...

"துயர்மிகு வரிகளை இன்றிரவு
நான் எழுதக் கூடும்"
பாப்லோ நெரூடாவின்
அந்த வரிகள்
என்னை அழுத்திக் கொண்டேயிருக்கிறது..

நீ இரவாகும் போது
நான் நிலவென்றும்
நீ நிலவாகும் போது
நான் இரவென்றும்
நீயனுப்பிய
குறுஞ்செய்திகள்
வலியை அதிகப்படுத்துகிறது..

ஒவ்வொரு முறையும்
உன் வரவால்
அலங்கரிக்கப்பட்ட இரவு
மூன்று நாட்களாக
மூளியாயிருக்கிறது..

நீ வந்துவிட்டால்
இனி ஒவ்வொரு இரவும்
முழுநிலவின் உச்சம்..
உன் வருகைக்காக
என்னிடமிச்சமிருக்கிறது
இன்னும் ஒரே இரவு..

எனக்கு சந்தோசம் வந்தால்
கொஞ்சவும்
கோபம் வந்தால்
மிஞ்சவும்
உன்னைவிட்டால்
யாருண்டு
இவ்வுலகில்
புரிதலுடன்..
இதுதான்
உன்னை நேசிக்கக் காரணமென
என்னால் சொல்ல முடியாது..
இதுதான்
என்னை நேசிக்க முடியாததற்கு
காரணமென
உன்னால் சொல்ல முடிகிறது..

- இவள் பாரதி

Friday, August 13, 2010

ஊஞ்சல்...!

மாமரத்திலலையும்
எனது ஊஞ்சலுக்கு
என்னவாகிற்று என்றறிய
பதறுகிறது மனசு!!!
நம்
பதுங்கிடங்களில்
பிணங்களிருப்பதாய் சொல்கிறார்கள்

என் ஸ்நேகிதிகளில்
யாரேனும்
மிச்சமிருக்கிறார்களா???

பெண்ணைப்பெற்ற
அம்மாக்களெல்லாம்
அழுதார்கள்!!!
அழகாய்ப் பெற்றதால் - நீ
அதிகமதிகமாய் - அழுதாய்

ஆயுதமுனைகளில்
கற்பு களவாடப்பட்ட
கர்மம்பிடித்த
வாழ்க்கை - அது !!!

தமிழர் என்கிற
ஒற்றைக் காரணத்தில்
காலம் நம்மை
அடித்துத்துவைத்து ...!
மனசெல்லாம் - காயம் !!!
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகிறதாமே ?
எனது திருமணம் ...
யுத்தத்தில் நிச்சயிக்கப்பட்டது
என்னைக்காப்பதற்கென
நீ - அறிந்த
மாற்றுவழி
வெளிநாட்டுமாப்பிள்ளைக்கு
மணமுடித்து வைப்பதுதான் !!!

அம்மா ...
காலத்தின் கலவரத்தால்
வெளிநாடுநோக்கி
என்னை துரத்தியடித்தாய் ...

ஊஞ்சலை ...
ஊரை ....
உன்னை
........................................
தொலைத்துவிட்டு
அவஸ்தைப்படுகிறது மனசு
ஒரு - அநாதைத்தேசத்தில்!!!

வாழ்வின் முகவரிமாறி
நெடுநாளாயிற்று
ஒரு ஆயுட்கைதியைப்போல்
அந்நிய தேசத்தில்
வாசிக்கப்படுகிறதென் வாழ்க்கை !!

தூசு படியாத்தெருக்கலும்...
'ஏசி' அறைகளும் ....
பனிவடியும்
பகல்களுமாய்....
ரசிப்பதற்கு
ஏராளமிருக்கின்றன ....!!!
மனசு என்னமோ
மாமரத்து ஊஞ்சலில்
பிடிவாதமாய் அலைகிறது ...!!!

தெருவில்
எச்சில்துப்பினாலும்
தண்டிக்கிறார்கள் - இங்கே
ஊர்த்தெருவெங்கிலுமாய்
இரத்தமும், சதையும்
சிதறிக்கிடந்தாலும்
கண்டுகொள்வதில்லை
நமதூரில் !!!

பிரச்சினை
ஓய்ந்ததாய்ச் சொல்கிறார்கள்
நான் வருவேன்
மிகமிக சமீபத்தில்

என் குழந்தைகளை
கையோட அழைத்தபடி
நம் கலாச்சாரம் மாறாமல்
நான் வருவேன்!!!
என் ஸ்நேகிதிகளின்
இரத்தமும் சதையும்
சிதறிக்கிடக்கும்
தெருக்களின் - மீது
என்னை அழைத்துச்செல்ல
நீ - வருவாய்
அலையும் ஆத்மாவாய்!!!

அம்மாவினதும்
என் ஸ்நேகிதிகளினதும்
ஆத்மாக்களோடு
நானும் குழந்தைகளும்
கணவருமாய்
என் மாமரத்து ஊஞ்சலில்
ஆடிக்கொண்டேயிருப்போம்!!!

- றஹீமா பைஷால்.