Monday, December 19, 2011

பசுந்தரை

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!

என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.
எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.

பாலையில் படர்கிறது
பசுந்தரை.


-பிரமிள்.

வீடு முழுவதும் நட்சத்திரங்கள்

ஒளிரும் நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும்
அக்ஷயாவை எனக்குப் பிடிக்கும்
பகல் பொழுதுகளில்
தேம்பியழும் அவளுக்கு
புற்களில் பூத்த
மஞ்சள் பூக்களைக்
காட்டி வைத்தேன்.

வாசலின் புங்கை மரக்கிளைகளில்
பற்றிப் படரும்
கோவைப் பழங்களைத்
தின்னவராத அணில்களை நான்
தேடுகையில்
அவள் நட்சத்திரங்களைப் பறித்துவிட்டாள்.
நட்சத்திரங்களைச் சூடிக்கொண்டிருக்கும்
அக்ஷயாவில் நான் சொக்கிப்போகிறேன்
அவள் கைகள் நிறைய நட்சத்திரங்கள்
அவற்றை அவள்
பொம்மைக்குச் சூடுகிறாள் என்
புத்தகங்களில் இறைக்கிறாள்
வீடு முழுவதும் நட்சத்திரங்கள்
அணில் வந்துவிட்ட வேளை
நட்சத்திரங்களை அக்ஷயா
கசக்குகிறாள்
அடுத்த பகற்பொழுதில் பூக்கத் தவறிய
நட்சத்திரங்களுக்காகத் தேம்பியழும்
அக்ஷயாவை மெல்லத் தூங்கச் செய்கிறேன்
கோவைப் பழங்களைத் தின்ற
அணில்களின் கண்கள்
நின்று ஒளிர்கின்றன.

-பத்மபாரதி.

பயிரைப் பிடுங்கி நட்டவர்கள்

பயிரைப் பிடுங்கி நட்டவர்கள்
நிலத்தை விற்று
தானியங்கி எந்திரத்தில்
பணத்தைப் பிடுங்கப் போக
மயிரைப் பிடுங்கி நடும்
விஞ்ஞானம்
வயிற்றுக்காக இனி
பசியை பிடுங்கிப்போனால் சரி.

- நா.கோவிந்தராஜன்.

கவிதை இறகு -மார்கழி


லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26.

இடானியாவின் கடிதம்!

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!
◦இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

-”சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.

Wednesday, November 16, 2011

கவிதை இறகு -கார்த்திகை

கூடவே

இயன்ற அளவு சத்தமிடாமல் உருட்டி
அந்த பழைய சைக்கிளை
சிதம்பர நகர் மக்கள் நல சங்க
பேருந்து நிழற்குடையின் ஓரம்
சாய்த்துவைக்கிறார்

சைக்கிளை விடவும் துருப்பிடித்த உடம்புடன்
மருதாணிப் பூ வாசமடிக்கும்
பின் வீட்டை நோக்கி முதுகு திருப்பி
அமர்கிறார் பீடி புகைத்து.
யாரிடமும் மணி கேட்பதேயில்லை
அவர் நேரம் அவருக்கு தெரியும்
மஞ்சள்நிற பொறியியல் கல்லூரி வாகனம்
வந்துபோனதும் அவர்
அப்புறப்படுகிறார் சிலுவையின் ஆணிகளிலிருந்து.
சிறுநீர் கழிக்கிறார் பூவரச மரத்தடியில்.
பார்வை பதிவது சாந்திநகர்
பஸ் வரும் திசையில்

வேர்க்கடலை வண்டியின் காடா விளக்கு
வெளிச்சமாகப் பரவுகிறது
முகத்தில் ஒரு நடுங்கும் சிரிப்பு.
நகலகக் கடையின் இன்னொரு கழிவுத்தாள் என
கசங்கிய முகத்துடன்
கைபேசியபடியே இறங்கும் பெண்ணிடம்
பையை வாங்கிக் கொள்கிறார்.

சைக்கிளை அந்தப் பெண் மிதிக்க
பின்னால் அமர்ந்திருக்கும் அவருடன்
இருட்டுத் தெருவுக்கு வழி சொன்னபடி
கூடவே போகிறது
இருமல் சத்தமும்.

-கல்யாண்ஜி.

Saturday, October 22, 2011

கவிதை இறகு - ஐப்பசி

நெசமாத்தானுங்களாண்ணா?

காற்றின் பெருவெளிகளில்
தென்னைகளை அழித்த
இறுமாப்பில் சுழலும்
அசுர காற்றாலைக் கரங்கள்
புல் தேடி அலையும்
கால்நடைகளின் வாய்களில்
படர்கின்றன பாலீதீன் அரக்கர்கள்
வீடுகளில் வலைகளுக்கு
பின்னாலிருக்க கற்றுக் கொண்டு
கொடுக்கப்படும் இரைகளை
உண்டு உறங்க பழகி
பல வருடங்களாகிவிட்டன

குருவிகளுக்கு
மரங்களை பார்க்கவென்று
சிறப்பு சுற்றுலா திட்டம்
செயல்படுத்தப்படுகிறது
ஒவ்வொரு பள்ளியிலும்
ஓசோனின் ஆயுளுக்காக
வருடத்தில் ஒருமுறை
ஒருமணி நேர மின்சார நிறுத்தமாம்
உலகெங்கும்
மரபணு விதைகளும்,இறக்குமதி உரங்களும்
மண்ணின் உயிரை உறிஞ்சியபடி
படிகளற்ற கிணறுகளில்
பாகம் பிரித்துக்கிடக்கின்றன
ஆழ்துளைக் கிணறுக் குழிகள்
வறண்டு கிடக்கும் வாய்க்கால்களில்
வலை பின்னி கிடக்கும் சிலந்திகள்.
ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன
தள்ளுவண்டிகளில்
கேழ்வரகு, கம்பங்கூழ்கள்
தொலைக்காட்சி தொடர்களின்
நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன
விவசாயப் பணிகள்.
மனைகள் பிரித்தது போக
மீதிக் கிடக்கும்
மேட்டுக்காட்டுக் குடிசையில்
பிளந்து கிடக்கும்
மாட்டுவண்டி சக்கர
கோணல் அச்சாணிக் கம்பிகளில்
கிழிந்து தொங்குகிறது
விவசாயிகளின் இற்றுப்போன கோவணத்துணிகள்
ஊடகங்களிலும் புத்தகங்களிலும்
அடிக்கடி தட்டுப்படும் வார்த்தை!
"இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு
விவசாயம்"

- ஜெ.பாலா.

Tuesday, October 11, 2011

இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.

- கௌரிப்ரியா.

Tuesday, September 20, 2011

கொல்லும் வெயிலிலும்

மழையில போன உளுந்து தப்பு விதையா
பொழச்சிக்கிடக்காம்
போன வருசம் வாங்கின கருப்பு மாடு
கன்னுப்போட்டுருக்காம்
அஞ்சுக்கும் பத்துக்குமா அலைஞ்சிட்டு கிடந்தவகன்னு
ஏலாதி பேச்சும் நிறஞ்சுக்கிடக்காம்

இந்த மாசம் அனுப்புற பணத்தில
முல்லையம்பாளுக்கு ஒரு விளக்கும்
முனீஸ்வரனுக்கு ஒரு படையலும் போடசொல்வாளாம்
பக்கத்து வீட்டுப்பாட்டி

போன வாரம் வேளாங்கண்ணி நடந்து போனதை
அம்மா ஐநூறு தடவையா சொல்லிட்டு இருக்கா
வீட்டு வேலை முடியட்டும்டா
அடுத்த வாரமே ஊரை மொத்தமாக்கூட்டி
விருந்து வச்சிடுறேன்
இந்தவாட்டி அனுப்புற பணம் கொஞ்சம் அதிகமா
இருக்கட்டும் என்கிறாள்
ஒட்டகங்கள் அசைந்து மெல்ல
நடக்கின்றன கொல்லும் வெயிலிலும்


-கென்.

கனவுக்குள் அசையும் உடல் மொழி

மந்தமாக பெய்யும் மழைக்குள்
வெயில் கீற்று
வயலின் ஒலியாக ஊடுருவும்போது
மறுபடியும் நாம்
காதலைச் சொல்லிக் கொள்கிறோம்

முற்றிய வசந்தம்
முழு அழகையும் வெளிப்படுத்தும் மலைத்தொடரில்
இரண்டு பேரருவிகள் பாய்கின்றன

மண் ருசி …
மண் மணம் … பாய்ந்த உடல்
ஒவ்வொரு சந்திப்புகளிலும்
புது நிலமாகி விளைகின்றது

வார்த்தைகள் எதுவுமில்லை …
ஆனால் நீ கதையொன்று சொல் என்கிறாய்
பன்மடங்கு காதலில் குழைகின்ற கண்களிடம்

வானவர்கள் நமக்காக கூடியுள்ளனர்

உடல்மொழியில்
காட்டுப்புறாவின் கூவல் ஒலிக்கின்றது

கனவுகளை காய்த்து நிற்கின்ற
மா … மரம் நீயென்றால்
நான் உன் கனவிற்குள் சிரித்து
குலுங்கிக் கொண்டிருக்கும்
கொன்றைப் பூ மரமா …

-அனார்.

வாழ்ந்து முடிந்த கதை

புரிந்து கொள்ள முடியாததின் மீது
உயிர் உறைவதும் கரைவதுமாய்
ஒடுங்கி ஒடுங்கி நீள மறுக்கிறது மனது

மிக மிக இரகசியமான எனது
உணர்வுகளின் மீது
சுவாரசியமான நிறங்கள்
தோன்றுவதும் மறைவதுமாய்
கழிகிறது பொழுது

எப்படி இருக்கிறாய்?
இப்படி ஆரம்பிப்பதில் கூட
சிக்கல்கள் இருக்கிறதெனக்கு…

மகிழ்வதும் துயருறுவதுமாய்
தெருவோரத்திலிருக்கும்
இலைகளற்ற மரங்களை
நினைவு கொள்ளச் செய்கிறது வாழ்வு

மழை பெய்து ஓய்ந்த
ஒரு நடு இரவில்
அவாவித் தழுவி
நிராகரித்து நிமிர்ந்து
எழ முடியாது
புணர்வாய் கிழிந்து
புலர்கிறது காலை

சில வருடங்களுக்கு
முன்பான காலங்களில் நீ…
எந்தப் புள்ளியில் விட்டுப் போனாயோ
வாழ்ந்த அதே புள்ளிலேயே
கொண்டுவந்து விடுகிறது சமூகம்.


-தில்லை.

கவிதை இறகு - புரட்டாசி

தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன

கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக்குப்பிகள்

மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்டது போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.


-ஆதிநாதன்.

Wednesday, August 31, 2011

பெயரெச்சமானவள்…

ஞாபகச் சிறுவாடு

ஊறுகாய் சுமந்த மண் ஜாடி
தாத்தாவின் வெற்றிலைப் பெட்டி
கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
படித்துச் சிலாகித்த பாரதி கவிதை
பயந்தபடி நிற்கும் பள்ளிப் புகைப்படம்
ஆசையாய்ச் சொல்ல ஐந்தாறு கதை
சொந்த வீட்டுத் தோட்டத்து மண்
பால்ய கால நண்பரின் புது வீட்டு முகவரி
திருமணத்திற்குப் பிறகு பார்த்த படம்
இவைகளோடு...
பரம்பரைக்காய் சேமியுங்கள்
கடைசியாய் வந்த கடிதத்தையும்...

-கவிதா.

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது
-அய்யனார்.

பூனையும் சூரியனும்

பூனை கண்களைத் திறந்தது
சூரியன் உள்ளே நுழைந்தது.

பூனை கண்களை மூடியது
சூரியன் அங்கேயே நின்றது.

இப்பொழுது விளங்குகிறது
இரவில் பூனை விழிக்கும் வேளை
இரண்டு சூரியத் துண்டுகள்
இருட்டில் தெரியும் வித்தை.


பெல்ஜியக் கவிதை - மோரிஸ் கரம்
தமிழாக்கம் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர்.

அது ஒரு பறவை ஒற்றைப் பனைமர உச்சியில்
தனித்தொரு பருந்தின் தவசு
அரைவட்டக் கோணத்தில்
தரைநோக்கி அலையுமதன் பார்வை
அவ்வப்போது வான் நோக்கியும்
இரை கண்டால் தரைநோக்கிப் பாய்ச்சல்
இல்லையேல் விண்ணோக்கிப் பறந்து
வட்டமிட்டு மிதக்கும்
அதுவொரு பறவை
இரை அதற்குத் தேவை மட்டும்
பறந்து களித்தலே அதன் இலக்கு.

-கவிஞர் ராஜமார்த்தாண்டன்.

கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

-எம்.யுவன்(யுவன் சந்திரசேகர்).

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பது போல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை.

-பிரதீபன்.

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்
எழுதி முடிக்கும்முன்பே
நகர்ந்துவிட்டிருந்தது
நதியும் பெயரும்
விரல்களில் உன்
பெயரெச்சம்…

- தமிழ்ப்பறவை.
சல்லிக்கற்கள்

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

-செல்வேந்திரன்.

ஒரு வீடு


காலம் யாருக்குங் காத்திராது நழுவுகிறது
நாற்றிசைப் பாதைகளில்
எதிர்ப்படும் மாந்தரில் எவரும்
அறிந்தவராயில்லை.
பயணங்களில்
கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்
முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.

விரையும் வாகனத்தினூடு தென்படும்
ஊரோரக் குடில்
கையசைக்கும் சிறுமி
யாரோ கைவிட்ட ஒரு வீடு
வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம்
சூரியகாந்திப் பூக்கள்
சிறுபழக்கடை என எல்லாமே
எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும்
அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும்
ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

-விநோதினி.

என் காதலும் நானும்

இனி எனக்குப் பேச எதுவுமில்லை
வாழ்வின் மெய்மைகளையெல்லாம் களைந்துவிட்டு
இறங்கிய நதியில்
ஊர்ந்து வரும் அவன்
பருகக் காத்திருந்ததுபோல் ஆயிற்று
மரணம் சம்பவிக்கும் அவனது தேகத்தின்
எச்சில்குளத்தில் மூச்சுத் திணறுகிறேன்

ஒரே காதலின் மாதிரிகள் தாம் எல்லாமும்
எதுவும் தவறில்லை;
கனவுகளிலிருந்து பிய்த்து இழுத்துச் செல்லும்
துயரத்தின் வலிமையே
காலமாய் உருமாறுகிறது
நீரைப் பிரித்துப் பிரித்துக் களிக்கும்
அவன் பரிசளித்த மயானம்,
குருவிகள் வந்தமர ஏங்கும் எனது விழிகள்
இவற்றோடெல்லாம்
நான் என்ன செய்துவிடமுடியும்?

புத்தகங்களுக்குள் உலாவும் கதைராட்டினத்தில்
அவன் கட்டிவிட்ட முத்தங்கள்
சுழன்று உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
இனி எனக்குப் பேச எதுவுமில்லை
அவனிலிருந்து வெளியேறிப்
பறக்க வேண்டும் பிளிறி
கரையில் உலரும் எனது ஆடைகளையும்
வாரிக்கொண்டு

- குட்டி ரேவதி.

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.
கோப்பையில் குறைந்திருக்கிறது.

நான் குனிந்தபோதோ
கோப்பையல்லாத வேறெதின் மீதோ - பார்வை
குவிந்த போதோ
எவனோ எடுத்திருக்க வேண்டுமதை.

கோப்பைக்கு ஆயிரமாயிரம் நாக்குகள்
ஆயினும்
உண்மை விளம்பவியலா ஜடப்பொருளது.

கூட்டத்தை நோக்கிய என் பார்வை
சற்றே வித்தியாசமாகிப்போனது

என் கோப்பையை கடந்தவன்
என்ற காரணத்தாலே
கொலை குற்றவாளியானார்கள்
எல்லோரும்.

குறைந்திருந்த மதுவின் அளவால்
உலகை அளக்க எத்தனிக்கிறேன்.

மதுவின்,
கோப்பைகளின்,
கூட்டங்களின்,
குதூகலம் குறைந்து கொண்டே போனதெனக்கு..

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி.

Sunday, August 21, 2011

காணாமல் போனவர்கள்

மாநிறம், உயரம் ஐந்தரை அடி
சற்றே மனநிலை சரியில்லாதவர்
வயது 35...
மாறுதலேதுமின்றி
காணாமல் போனவர் பற்றி சொல்லிக்கொண்டிருகின்றன வானொலிகள் இன்னும்...

நேர்மையானவர், மனிதாபிமானி,புத்திசாலி -
இப்படிப் பலர் காணாது போயிருந்தாலும்
எந்த வானொலியும் சொல்வதில்லை இவர்கள் பற்றி...

- ரமேஷ்குமார்.

ஓவியன்


லொள் லொள் என்று நாய் மாதிரிக் குரைக்குமே
அது மாதிரி ஒண்ணு வரைந்து தா
என்று சொன்னாள் சிறுமி.
ரெண்டு கால் மாதிரி வைத்துக் கொண்டு
நடக்கிறமாதிரிப் போகிற
மனிதன் மாதிரியும் ஒன்று.
வால் மாதிரித் தொங்கவிட்டு
குரங்குமாதிரித் தாவுவது.
கடல் மாதிரிக் கிடப்பதிலே
நிற்கும் கப்பல் மாதிரி.
சேப்பு சேப்பா பூ மாதிரிப் பூக்குமே
அந்த மரம் மாதிரியும் ஒண்ணு
வரைந்து தா...
அவள் சிறுமி மாதிரி
என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்
நான் ஓவியன் மாதிரி
வரைந்து கொண்டிருக்கிறேன்.

- யூமா. வாசுகி.

அச்சொல் என்சொல்

தேடல் தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை
விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?
யாரோ சொன்னதாகத்தான் நினைவு
யார் சொன்னதென நினைவில்லை
எப்போது என்பதும் நினைவில்லை
ஆனால் சொல்லின் காலத்தெளிவும்
சொல்லியின் தொனியும்
இன்னும் பசுமையாக
நானேதான் நினைத்தேனா
என் மனசுக்குள் இருந்துகொண்டு
நானேதான் பேசிக்கொண்டேனா
தெரியாமல் விழுங்கமுடியுமா
குழப்பமே எஞ்சுகிறது
தெளிவாக வரிசையாக
யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?
நிச்சயம் கனவில்லை
யார் சொல்லியிருந்தாலும்
இப்போது யாரிடமிருந்தாலும்
அச்சொல் என்சொல்.

-சொல்வனம்.

கவிதை இறகு -ஆவணி

ஒண்ணும் ஒண்ணும் பூஜ்யம்

"ஆரப்பா அது அப்பாரு தோட்டத்துல
கேணியோரம் ஒக்காந்து கேவிக் கேவி அழுகுறது?
விசுக்குனு காத்தடிச்சா விழுந்துருவ கெணத்துக்குள்ள
எழுந்திருச்சு வந்திரப்பா ஏகப்பட்ட தண்ணியப்போவ்!"

"ஆடு மேச்சு வர்ற அழகுமலைத் தாத்தா...
கேடு கெட்டவன் நான் பாவம் வரும் என்னப் பாத்தா!
படிச்சிருந்தும் கூறுகெட்ட என் சேதி கேட்டா
அனுதாபப்படமாட்ட அழகுமலைத் தாத்தா!"

"காளியம்மா மகனுக்கு கவல என்ன கவல?
கண்ணுல வந்த தண்ணி கமலத் தண்ணி போல!
பொட்டப்புள்ள மாதிரி பொங்கிப் பொங்கி அழுவாம
பொறுமையா நடந்தத என்னான்னுதேன் சொல்லு!"

"சீமையில படிக்கிறப்ப சிநேகிதம் வெச்சிருந்தேன்
சிறுக்கி ஒருத்தி என்னைய சிரிச்சு மயக்கிபுட்டா!
பாவிப் பய நானும் படிக்க வந்த பொண்ணுக்கிட்ட
பதிலுக்குப் பல்லக் காட்டி பள்ளத்துல விழுந்து புட்டேன்!

மல்லிகப் பூவாட்டம் அவ மனசு ரொம்ப வெள்ளை
அந்த மம்மதனும் பார்த்தான்னா மறந்துருவான் வில்லை!
மத்தியான வெயிலடிக்கும் மாடியில நின்னிருப்பா!
இந்த மச்சானப் பார்க்கணும்னு மணிக்கணக்கா காத்திருப்பா
காலாற நடந்து போயி கடைக்கு கீழ நின்னுக்குவேன்
கண்ணும் கன்ணும் கலந்து பேசும் காதல் கத பத்தாயிரம்!
நெத்திய சொறிஞ்சா நெருங்கி நெருங்கி வரணும்
பொடனிய சொறிஞ்சா போய் ஒளிஞ்சுக் கிடணும்
கன்னத்த தடவிக் கிட்டா காலையில பாப்போம்னு
கைசைகை வெச்சிருப்போம் கடவுளுக்கும் தெரியாது!
அவ மனசுல பாதிய என் உசுருக்குள்ள வெச்சிருந்தா
என் உசுருல பாதிய அவ மனசுக்குள்ள மறச்சிருந்தா!

பக்கத்து வீட்டுல பச்சோந்தி ஒருத்தன்
வத்தி வச்சுப்புட்டான் - அவ அப்பன்கிட்ட போயி

எளிய சாதி பயலோட என்னடி ஒனக்குப் பழக்கம்னு
அடிச்சுப்புட்டான் அப்பன்காரன் அம்புட்டு அடி அவள!
இரும்புக் கம்பிய காயவெச்சு
இழுத்தானாம் அழுக அழுக சனியன் புடிச்ச சாதியில
சாவு வந்து விழுக!
என் கண்ணம்மா கன்னத்துல கையளவு காயம்!
ஒதட்டோரம் குத்துனதுல ஒறஞ்சு போச்சாம் ரத்தம்...
முதுகுல ஒதச்சிருக்கான் மூலையில விழுந்திருக்கா...
சாலையில போன சனம் சன்னல் வழி பாத்திருக்கு!

பச்சப்புள்ள பூ ஒடம்பு என்னகதி ஆச்சு
படுத்துக்கிட்டு நெனச்சுப் பாத்தேன் பாய் நனஞ்சு போச்சு

மருந்து கூடப் போடாம போனான் பாவி மட்ட
பூச்சி மருந்தக் குடிச்சு இவ போயிட்டா சாமி கிட்ட

உசிரோட இருந்தாத் தான சாதி வந்து பிரிக்கும் - நான்
உடம்பை விட்டுப் போய் அவளச் சேர எது தடுக்கும்?"
****
அழகுமலைத் தாத்தா கேட்டது தண்ணி செதறும் சத்தம் - அது
பழகி வச்ச மயிலைச் சேர அந்தப் பய குடுத்த முத்தம்.

- 'தேனி' ஆர்.ஜெகதீசன்.

Wednesday, August 3, 2011

இக்கவிதையில் விட்டுச் செல்கிறேன்

என்னை நனைக்கும் ஆனந்த அருவியின்
ஊற்றுப் புள்ளி உன் கண்கள்
இனிய கனவெனும் விதையூன்றி
என்மீது வழிந்து பொழிகிறது
தாளம் போடும் மனம்தீண்டி
காதல் இசையைச் சேர்க்கிறது

எங்கிருந்து வந்தாயோ
எதைத்தான்நீ கண்டாயோ
இமைக்காமல் தொடர்கிறது உன்பார்வை
என்மனசை அறிவாயோ
என்ஆவல் தணிப்பாயோ
கணம்தோறும் வளர்கிறது என்காதல்

நெஞ்சின் ஏக்கத்தை எடுத்துரைக்க
நேருக்கு நேர்காண விழைகின்றேன்
ஆயிரம்ஜோடிக் கண்நடுவே
அடையாளம் தெரியாமல் தவிக்கின்றேன்
கோடிக் கணக்கான கூட்டத்தில் கூட
எளிதாக என்னைத் தொடுகிறாய் நீ

காணாத தோல்வியின் சுமையழுந்த
சோர்வோடு தளர்ந்து நிற்கிறேன் நான்
உன் கண்ணில் பதிக்க இருந்த முத்தத்தை
இந்தக் காற்றில் பதித்துச் செல்கிறேன்
உன் காதில் சொல்ல இருந்த செய்தியை
இக்கவிதையில் விட்டுச்செல்கிறேன்.


- பாவண்ணன்.

உள்ளக் கிடக்கைகள்

மரப்பாச்சி பொம்மைக்கும்
மாராப்பு போட்ட நிலம்,
நீலவான் நிலவிற்கும்
ஆடைகட்டிப் பார்த்த மனம்,
இன்று-
அவிழ்த்துப் போடுவதுதான்
அழகாம்! ... ... ... ...
ஆடம்பரம் பெருக
ஐ.எம்.எப் உதவ
எல்லா நாயும் காலைத்தூக்க
எம் தேசமென்ன-
தெருவோர நடுகல்லா?


-ஆர். நீலா .
பேடிக்கல்வி

காலத்தால் அழியாத
கவியாக்கும் அவசரத்தில்
காளியம்மா வந்து
சூலத்தால் எழுதியதில்-
நாக்கு துண்டாகி,
பேச்சும் போச்சு!

- நா.முத்து நிலவன்.வானத்துப் பறவையை
வாகாய்ச் சுடுகிற சாமர்த்தியசாலியே
எங்கே
ஒரு அரையடி உயரம்
பறந்து காட்டு பார்க்கலாம்!

- பட்டுக்கோட்டை பிரபாகர்.மரம் செத்தால்
வீட்டுக்கு வரும்
மனிதன் செத்தால்
காட்டுக்குப் போவான்.

-மு. மேத்தா.ஏன்,எதற்கு
என்பது தெரியாது
எனினும் நிகழ்ந்துவிட்டது
ஏன் எதற்கு
என்பது விளங்காது
எனினும் நிகழ்கிறது
ஏன் எதற்கு
என்பது புரியாது
எனினும் நிகழும்

-மாலினி புவனேஷ்.நெடுநாள் வாடாது
வண்ணம் காட்டித்திகழும்
வாடாமல்லியாக வேண்டாம்
ஒருநாள் தட்பவெப்பம் கூட
தாக்குப்பிடிக்க வலுவின்றிப்
பொட்டென்று
பொசுங்கி உதிர்ந்தாலும்
அந்நாள் முழுதும்
மனம் நெகிழும் வாசம் தரும்
பகட்டில்லா
பவளமல்லியாகட்டும்
இந்த ஜன்மம்.

- நீல.பத்மநாபன்.சொல்லக் கூடாதென்றில்லை
சொல்லக் கூடாத ஒன்றை
எப்படி சொல்ல?

ஆவலுடன் ஓடி வந்து
எடுத்துக்கொள்ள யாருமின்றி
காற்றில் தன சுவையை
கசிந்தபடி
மரத்தை சுற்றிலும்
விழுந்து கிடக்கும்
பனம் பழங்களை போல்
என்னிடமே
வீழ்ந்து கிடக்கின்றன
என்
உள்ளக் கிடக்கைகள்.

-அழகிய பெரியவன்.

Monday, July 25, 2011

தவறான கேள்விகளும் , சரியான பதில்களும்

ரோஜாப் பூவின் தாவரவியல் பெயர்?
(காதலியின் பெயர்)

மழை உருவாவது எங்ஙனம்?
அவள் கூந்தல் காற்றில் பரவும்வரை பொறுத்திருங்கள்.

இந்தியாவில் பாலைவனம் இருக்கிறதா?
அவள் பார்வை
எட்டாத தூரத்தில்
நின்று தேடுங்கள்.

ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை முறை துடிக்கும்?
அவள் இருக்கையில் 144....
இல்லாதபோது 72...

ஆகஸ்ட் 6, வரலாற்றுக் குறிப்பு என்ன?
என் பிறந்த நாள்...
என் காதல் பிறந்த நாள்...
என் மனதிலும் இரோஷிமாவிலும் குண்டு விழுந்த நாள்.

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி எழுதுக?
அவள் இதழ் சிந்தும் சிரிப்புக்காக
இரண்டு முறை உடைமாற்றுகிறேன் வெட்கத்தை விட்டு வேறென்ன சொல்ல...

உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன?
முறைக்கத் தெரியாத கண்கள்
வாடாமல்லியாகிவிட்ட ஜாதி மல்லிகை
உதடு தொட்டும் உயிர் பெறாத கைக்குட்டை..
அவளைச் சுமந்து பல்லக்கு ஆகாத சைக்கிள்..
லவ் லெட்டெர் தராத உள்ளூர் இளைஞர்கள்..
மௌனத்துக்கும் அர்த்தம் கண்டுபிடித்த நான்
இதையெல்லாம்... கவிதையென்று தெரியாமலே பதிவு பண்ணுகிற என் டைரி

சல்ஃப்யூரிக் அமிலத்தின் குணங்கள் என்ன?
அவளின் கோபப் பார்வையில் பொங்கும்...
நுரைத்து தணியும்,
பின் அமிர்தமாகும்.

பிளாஸ்மா சவ்வூடுருவலை விளக்குக?
ஆயிரம் கண்கள் விலக்கி,
என் பார்வை மட்டும் உள்வாங்கும் அவள் இதயம்.

நிலவில் பிராணவாயு உண்டா?
சத்தியமாக உண்டு.
அவளே என் ஆக்ஸிஜன்!

-பாலா.

Wednesday, July 20, 2011

அரேபிய வாழ்க்கை.....


பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக
விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல்
போல்காணாமல் போனது கனவு!


கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும் அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும் தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு அறுபது நாட்கள்

எந்த விலக்கப்பட்ட கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி தொலை பேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும் நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!


பிழைப்பு தேடிவாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன் அடைக்க வழி இருக்கா
நத்தைக் கூட்டிற்குள் நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும் பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும் அதிலோர் வீடும்

வயதும், முகமும் வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத குழந்தைகள் இரண்டு
சக்கரையும் அழுத்தமும் சரி விகிதத்தில்
வரவுக்ககாக வந்தோம் செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்"
நானும் எழுதினேன்
"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"

-சேக் அப்துல்லாஹ்.

கவிதை இறகு - ஆடி


சாலை குறித்த பூர்வாங்க விவாதம்

சமையல்கட்டிலிருந்து சாப்பாட்டுக்கூடத்துக்கு
புத்தகஅலமாரிக்கு பூஜைரூமிலிருந்து
ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் மற்றொன்றுக்கு
இன்னும்
தெருவுக்கு
தெருக்களுக்கிடையில்
ஊருக்கும் மயானத்துக்கும்
மயானத்திலிருந்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தனித்தனியாய்
இந்த ஊருக்கும் அந்த பட்டணத்திற்கும்
கண்டங்களை இணைத்தும்கூட
கொடித்தடம் கோணவழி
ஒத்தயடிப்பாதை ஓடைக்கரை தங்கநாற்கர நெடுஞ்சாலையென்று
நீண்டுகிடக்கிற சாலைவசதி...

(இடைமறித்து)
அடீ செருப்பால,
அது என்னாடா பழையசோறு கெடாமப் பாத்துக்குற பிரிஜ்ஜா
இல்லே,படுத்துத்தூங்குற மெத்தையா...
சாலைங்கறது வசதி இல்ல...தேவை....

ஆமாமாம் தேவை.
மக்களின் கருத்தை மதித்து திருத்தம் ஏற்றுக்கொள்ளப்...

(மீண்டும் இடைமறித்து) மதிக்கவும் திருத்தவும் நீ யாருடா..
ஒழுங்கா பேசப்பழகு முதல்ல..

மகாஜனம் இப்படி குறுக்கிட்டால்
என் மனப்பாடம் மறந்துவிடும்

சரி... முழங்கு உன் பிரசங்கத்தை

அனேகப்பாதைகளிருந்தாலும்
குண்டுங்குழியுமற்றதொரு பாதையே நம்தேவை
ஆனால் அதற்கு ஜல்லியும் தாரும் வேண்டுமே

மக்கு மக்கு... ரெண்டையும் கலந்து அந்தரத்தில போடுவியா ரோடு...?
நிலம் வேணும்டா நிலம். அதாவது மண்...

ஆமாமாம், அடங்காம துருத்திக்கிட்டு எழும்புறதையெல்லாம்
அங்குலம் அங்குலமா உள்ளழுத்தி சமப்படுத்த
ஒரு ரோலரும் தேவை.

இத்தனையிருந்தாலும் போதாதப்பா அறிவாளி
காலில் சாக்கு கட்டிக்கொண்டு
ராவும்பகலும் தார்ச்சூட்டில் வேக எங்களாட்டம் ஆட்களும் தேவை.

- ஆதவன் தீட்சண்யா.

Thursday, June 16, 2011

தற்போதைய சந்தை நிலவரம்


தற்போதைய சந்தை நிலவரம்

லெனினை வாங்கியாகிவிட்டது,
சே' ஏற்கனவே
பிராண்ட் நேமில் இருக்கிறார்,
காந்தியை உருவாக்கியவர்களே
அவரைக் கொன்று விட்டனர்,
சதாமை தூக்கிலிட்டு அழித்தாயிற்று,
கடாஃபிக்கெதிராக சிலுவைப்போர்
நடந்து கொண்டிருக்கிறது,
லேடனைக் கண்டுபிடித்துவிடலாம்,
---
ஜூலியன் அஸாஞ்சே'வை
மட்டும் என்ன செய்வது
என்றுதான் தெரியவில்லை...!


-சின்னப்பயல்.

கவிதை இறகு - ஆனி

"வானவில் கனவுகளின் வரவேற்பு வளையம்"
"இல்லை! மேகத்திற்கான வேகதடை"
-
"நான் மழையின் ரசிகன்"
"நீ மழைக்கு ஒதுங்க வீடிருக்கிறது.
ஆனால்
மழை ஒதுங்கத்தான் என் வீடிருக்கிறது!"
-
"ஷெல்லி
மில்டன் படித்ததுண்டா?"
"அவர்கள் படித்தார்களா என்று
எனக்குத் தெரியாது"
-
"கை நாட்டா?"
"நாட்டின் கை"
-
"சங்கீத ஞானமுண்டா?"
"பஞ்சப்பாட்டு தெரியும்"
-
"குரு யார்?"
"வேர்க்குரு"
-
"உன் பெற்றோர் நாட்டுக்கு
என்ன செய்தார்கள்?"
"என்னைச் செய்தார்கள்"
-
"நீ என் மயிருக்குச் சமம்?"
"வெட்ட வெட்ட துளிர்ப்பதால் சொல்கிறாயா?"
-
"இவ்வளவு திமிராக்ப் பேசுகிறாயே
உன்னைப் பற்றிச் சொல்"
"உனைனப் பற்றியும் சொல்கிறேன்
நீ
ஓய்வூதியம் பெறுகிறவன்
நான் உழைப்புக்கே
ஊதியம் கிடைக்காதவன்!"

-கவிஞர் விவேகா.
'உயரங்களின் வேர்'

Thursday, May 19, 2011

சூரியக் கம்புகள்

பண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி

பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்
அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி
விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க
மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்

புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு

எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ

மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது
சூரியக் கம்புகள்.

-என். டி. ராஜ்குமார்.

கவிதை இறகு - வைகாசி


கிழிந்ததன் நகலாய்

கடிதம்கண்டேன்.
கிழிந்துபோன வாழ்க்கையின் நகலாய்.

எண்ணெய்பிசுக்கேறிய காகிதத் துண்டில்
பழைய பற்றுவரவேட்டில் கிழித்தெடுத்ததாயிருக்க வேண்டும்.
பாதி பேனையாலும், பாதி பென்சிலாலும் எழுதப்பட்டிருந்த
நலம் விசாரிக்கும் வரிகள்
என் கைகளில் நடுங்கின.

பிசுக்கில் பதிந்திருந்த பெருவிரல் ரேகையை
உருப்பெருக்கிப் பார்ப்பதென
எழுதப்படாத துயரங்களை வரைபடம் போடுகிறது மனம்.

பிரச்சினைகளின் பூதாகாரத்துள்
கீச்சிடலுமின்றி சிறுபூச்சிகளாய் நசித்துக் கிடக்கும்
துயரங்கள் உங்களுக்குள்ளும்தான்; எங்களுக்குள்ளும்தான்

நாலுதிக்குக்கொரு உடைவாகிப்போயின நம் உறவுகள்
ஆயினும் அதிசயம்தான்
நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம்
காலொடிந்த நண்டினைப் போல்.
கரைதான் தென்படவில்லை.
தென்படுவதாய் தெளியும் பொழுதெல்லாம்
திசைமுகத்தில் பீச்சியடிக்கும்
கணவாய்மைபோலும் கறை.

கறைபடிந்த துயரத்தின் நடுவே
நாளும் நாளும் காணாமல் போகிறோம்;
இல்லையா?

இருகரையும் துயரெறிகை
உங்களைப் போலவேதான் எங்களதும்
எங்களைப் போவேதான் உங்களதும்
திரையெறியும் துயரம் இருகரையிலும்தான்.

அன்றோர் காலை
நாவெண்டாமுனையில் மீன்வாங்க நின்றிருந்தோம்
அக்கரையின் வான்பரப்பில் இரைச்சலோடு எழுந்து பறந்தன
இயந்திரப் பறவைகள்; குண்டு பீச்சிகள்.

கொட்டடிப் பக்கமாய்
கொழுந்துவிடடெரியுதென்றார்
பக்கத்தில் நின்றிருந்த முதியவர்
திசைமுகம் புகைமண்டலமாய்த் தெரிந்தது எமக்கு.
குருதிபடிந்த காலையாயிருந்திருக்கும் உங்களுக்கு.

பதறியவாறே வீட்டிற்கு வந்து
"குரலை" முறுக்கினேன்
சற்றுமுந்திய செய்திகளின்படி கொட்டடியிலும், கச்சேரியடியிலும்
குண்டு வீச்சென்றார்
சேத விபரம் தெரிந்தபின்னால் தான்
சிறிது மூச்சுவிட்டேன்.

இப்பாலிருந்து
மண்டைதீவின் பீரங்கிகள் முழங்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சு பதறும்
குண்டுவீச்சின் போதெல்லாம்
எங்கள் வீட்டின் நிலைக்கதவுகள், சன்னல்கள் மட்டுமல்ல
கூடவே எமது உணர்வுகளும் அதிர்வுறும்.

உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்.

காத்திருப்போம்
எல்லாத் துயரங்களின் நடுவிலேயும்.
தீக்குச்சியிலும் ஈரம்படிந்துவிடாதவாறு காப்போம்.

-சு.வில்வரெத்தினம்
"காற்றுவழிக் கிராமம்"