Thursday, May 19, 2011

கவிதை இறகு - வைகாசி


கிழிந்ததன் நகலாய்

கடிதம்கண்டேன்.
கிழிந்துபோன வாழ்க்கையின் நகலாய்.

எண்ணெய்பிசுக்கேறிய காகிதத் துண்டில்
பழைய பற்றுவரவேட்டில் கிழித்தெடுத்ததாயிருக்க வேண்டும்.
பாதி பேனையாலும், பாதி பென்சிலாலும் எழுதப்பட்டிருந்த
நலம் விசாரிக்கும் வரிகள்
என் கைகளில் நடுங்கின.

பிசுக்கில் பதிந்திருந்த பெருவிரல் ரேகையை
உருப்பெருக்கிப் பார்ப்பதென
எழுதப்படாத துயரங்களை வரைபடம் போடுகிறது மனம்.

பிரச்சினைகளின் பூதாகாரத்துள்
கீச்சிடலுமின்றி சிறுபூச்சிகளாய் நசித்துக் கிடக்கும்
துயரங்கள் உங்களுக்குள்ளும்தான்; எங்களுக்குள்ளும்தான்

நாலுதிக்குக்கொரு உடைவாகிப்போயின நம் உறவுகள்
ஆயினும் அதிசயம்தான்
நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம்
காலொடிந்த நண்டினைப் போல்.
கரைதான் தென்படவில்லை.
தென்படுவதாய் தெளியும் பொழுதெல்லாம்
திசைமுகத்தில் பீச்சியடிக்கும்
கணவாய்மைபோலும் கறை.

கறைபடிந்த துயரத்தின் நடுவே
நாளும் நாளும் காணாமல் போகிறோம்;
இல்லையா?

இருகரையும் துயரெறிகை
உங்களைப் போலவேதான் எங்களதும்
எங்களைப் போவேதான் உங்களதும்
திரையெறியும் துயரம் இருகரையிலும்தான்.

அன்றோர் காலை
நாவெண்டாமுனையில் மீன்வாங்க நின்றிருந்தோம்
அக்கரையின் வான்பரப்பில் இரைச்சலோடு எழுந்து பறந்தன
இயந்திரப் பறவைகள்; குண்டு பீச்சிகள்.

கொட்டடிப் பக்கமாய்
கொழுந்துவிடடெரியுதென்றார்
பக்கத்தில் நின்றிருந்த முதியவர்
திசைமுகம் புகைமண்டலமாய்த் தெரிந்தது எமக்கு.
குருதிபடிந்த காலையாயிருந்திருக்கும் உங்களுக்கு.

பதறியவாறே வீட்டிற்கு வந்து
"குரலை" முறுக்கினேன்
சற்றுமுந்திய செய்திகளின்படி கொட்டடியிலும், கச்சேரியடியிலும்
குண்டு வீச்சென்றார்
சேத விபரம் தெரிந்தபின்னால் தான்
சிறிது மூச்சுவிட்டேன்.

இப்பாலிருந்து
மண்டைதீவின் பீரங்கிகள் முழங்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சு பதறும்
குண்டுவீச்சின் போதெல்லாம்
எங்கள் வீட்டின் நிலைக்கதவுகள், சன்னல்கள் மட்டுமல்ல
கூடவே எமது உணர்வுகளும் அதிர்வுறும்.

உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்.

காத்திருப்போம்
எல்லாத் துயரங்களின் நடுவிலேயும்.
தீக்குச்சியிலும் ஈரம்படிந்துவிடாதவாறு காப்போம்.

-சு.வில்வரெத்தினம்
"காற்றுவழிக் கிராமம்"

No comments:

Post a Comment