Monday, March 28, 2011

கவிதை இறகு - பங்குனி


வெடிப்புகளில் கசியும் வெப்பக்காற்று

விதைப்பின் காலங்கள் கருகி
புகைமண்டுகிறது பொய்த்த வானில்
கட்டாந்தரைகளான உழுநிலங்களில்
விதைக்கப்பட்ட வியர்வைவிதைகள்
ஏமாற்றங்களை சூல்கொள்கின்றன
கால் நரம்புகள் புடைக்க உழுத நிலத்தில்
உட்கார்ந்து கைசூப்புகின்றன
பாலற்ற உழத்தியின் குழந்தைகள்
கோபத்தை மண்வெட்டியாக்கி
வாழ்வை கொத்துகிறான் உழவன்
இளகாத ஆண்டைகளின் மனங்களென
கெட்டித்தட்டிக் கிடக்கின்றன நிலங்கள்
அவற்றின் வெடிப்புகளில் கசியும்
வெப்பக்காற்றே மூச்சாகி
அந்தியில் அலைகிறான் மறைய முடியாத
சூரியனாய்
நீரற்று பூமி வெப்பமடைந்ததற்காய்
காரணங்களைக் கண்டறிந்து
விருதுகள் வாங்கப் போயிருக்கிறார்கள் அதிகாரிகள்
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குப்பிகள்
கைகளில்
மிளிர

- யாழன் ஆதி

கைநிறைய கவிதைகளோடு


கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்.
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்.
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே.

-அய்யனார்.

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.


-சுகிர்தராணி.அலைகளிடமிருந்து பெற்ற
இரைச்சலை
பிள்ளைகள்
கரையெங்கும் இரைத்துக்கொண்டிருக்க,
பிள்ளைகளிடமிருந்து பெற்ற
குதூகலத்தோடு
கொட்டி முழக்குகிறது கடல்

-குவளைக்கண்ணன்.ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.


-ராஜசுந்தரராஜன்.
தகப்பன் பிள்ளைகளிடையே
கிரிக்கெட்டும் கம்ப்யூட்டரும்
பேசப்பட்டு,பேசப்பட்டுக்கொண்டேயிருக்க
அடுப்பங்கரையில் அனல் வீசும்
எண்ணையருகே நான்!
எண்ணை அனல் சுடவில்லை
என்னை அகற்றல் சுடுகிறது!


-வர்ஷா.திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு கணங்களையும்
பதிவு செய்து கொள்கிறேன்...
திரும்பாத பொழுதுகளில்
என்ன நடந்திருக்கும் என்று......


-தினேசுவரி.