Tuesday, January 24, 2012

ஆகாயத்தின் மக்கள்

கடவுளுக்காக திறந்த வாசலில்
சட்டென நுழைகிறது காற்று
கடவுளுக்காக விரித்த பாயில்
வந்து படுக்கிறது நாய்.
கடவுளுக்காக பாடும் பாடல்
நமது செவிக்கே திரும்புகிறது
வேலியேதுமற்ற
கடவுளின் தோட்டத்து மண்ணில்
என் பாத சுவடு.


"ஆகாயத்தின் மக்கள்"
-அழகு நிலா.

பிரிவின் நாட்குறிப்பு


தரைதொடத் தாழ்ந்த அழிஞ்சிமரத்தின் நுனி
இலைகளைக் கடக்கும்
காற்று சொல்லிவிட்டுப் போகிறது
நீ அமர்ந்துள்ள பேருந்துப் பயணத்தின்
வேகம்

சிறு குருவிகளின் ஊமச்சிக் குரல்களைக்
கை நிறைய
வாங்கிக்கொண்டு போய்
மாஞ்செடிக் கூட்டில் ஊற்றிவிட்டுத்
திரும்புகையில்
ஆரஞ்சுச் சூரியனுக்கு நடுவில்
உந்தி
மேலெழும்பும்
மூங்கில்
குருத்தின்
உச்சித் தளிரில் செருகப்பட்டிருக்கிறது
உன்
பிரிவின்
நாட்குறிப்பு

ஒற்றைக் காகம் பற்றவைத்த
சுழன்று எகிறிய நெருப்பில்
மிரண்டு
சட்டென விழுந்த
ஓணான் கண்களில் தெரிகிறேன்
நீயற்ற
நான்

அறுத்துக் குவித்து மூடிவைத்த
எள்ளுச் செடிகளுக்குள்
அவிந்து
பெருகும்
புழுக்கத்திற்கு மிக நெருங்கிய
இடைவெளியில்தான்
வாய்த்திருக்கிறது
உனக்கும் எனக்குமான
தூரம்.


-அறிவுமதி.

உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்

'சிற்பிக்கும்
சிலைகளுக்கும் குறுக்கே
அர்ச்சகராகவும்

தச்சனுக்கும்
நிலைக் கதவுகளுக்குமிடையே
வைதீகராகவும்

தட்டானுக்கும்
தாலிக்கும் நடுவில்
ப்ரோகிதராகவும்

காலம்காலமாய்
எங்கள் உழைப்பில்
கொழுத்துப் பெருத்த நீ
வந்திருக்கப்பிடாதோ
கொல்லனுக்கும்
அவன் கொடுவாளுக்கும்
குறுக்கே'


'உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’
-தாணுபிச்சையா.

குரோடன்களோடு கொஞ்ச நேரம்

தாவோ தத்துவவாதி சுவாங் ட்ஸூ
அவருக்கு தெரியவில்லையாம்
கண்ட கனவில்
சுவாங் வண்ணத்துப் பூச்சியாக மாறினாரா
வண்ணத்துப் பூச்சி சுவாங்காக மாறியதா

அவருக்கு கனவில்
எனக்கு நனவில்
செடி ஒன்று
கவனிப்பு வேண்டி வாடிக் கிடப்பது
யாராலோ எப்படியோ உடைப்பட்டு கிடக்கும்
மண் தொடியிலா என் இதயத்திலா

இடைவெளி என்பது நிலைக்கண்ணாடி

குரோட்டன்கள் என்னை வளர்க்கின்றன
நான் குரோட்டன்கள் வளர்க்கிறேன்

செடிகளால் முடியுமா மனிதர்களை வளர்க்க
செடிகொடிகள் இல்லாமல் முடியுமா
மனிதர்களால் வளர

பிறகு பேசலாம்
முதலில் செடியைக் கவனிக்கணும்
குடிக்க நீர் குந்த மண்.


"குரோடன்களோடு கொஞ்ச நேரம்"
-பழமலய்.

நொண்டிச் சிந்து


ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல
என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல்


பாணனாய்த் திரிகிறபோதெல்லாம்
என் பாதங்களின் அசைவுக்குச்
சுழல்கிறதே உலகம் என்னதாய்.
கிடைத்த கள்ளும் கூழும்
சந்தித்த தோழ தோழியருமாய்
குந்திய மர நிழல்களில் எல்லாம்
சூழுதே சுவர்க்கம்
காதலும் வீரமுமாய்.

வாழ்வு தருணங்களின் விலையல்ல
தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்
புயலில் அறுந்த பட்டமாகிறேன்.
காலமும் இடமும் மயங்க.

தருணங்களின் சந்தையான உலகிலோ
தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு
இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு
கட்டைவிரல் இல்லை.

எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட
இந்த சென்னைச் சுவர்க்காட்டில்
சுருதி கூடிய வீணையாய்
காத்திருக்கிறேன்
வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக.


-வ.ஐ.ச.ஜெயபாலன் .

கவிதை இறகு - தை

பணிப்பெண்

புரண்டெழும் பேச்சை
உள்வாங்கிய ஒலிகளை
திறவுகோல் இழந்த
மெளன அடுக்கில்
இட்டிருப்பாள்
அழுக்காடைகள்
அலம்பாத வீடு
இத்தியாதிகளை
இலங்கச்செய்து
குழப்பங்கள் பரிமளிக்கா முகத்தோடு
எதிர்வீட்டு எஜமானியை
எதிர்கொள்ளப் படியேறுவாள்

பெட்டிப் பொறியில் சிக்கிய
எலி குறித்த தர்க்கங்களிடை புகுந்து
தண்டவாள கல்சரளைக்கப்பால்
அடர்ந்த முட்புதரில்
பாய்ந்தோட விடுகையில்
எலிப்பாஷாணம் அருந்தி
செவிட்டூமையாய் மீண்டவளின்
கழிவிரக்கம் காணக்கிடைக்கும்.

-பாம்பாட்டிச் சித்தன்.