Monday, February 21, 2011

கவிதை இறகு - மாசி

ஊரு ஒன்னாதான் இருக்கு
ஊருக்கு தார்ரோடு வேணும்
பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு,
ஊருக்கு ஒரு பஸ் வேணும்…
ஆனாலும் அவரு
காருலதான் போவாரு…

அவரு வூட்ட எட்டுன
புறம்போக்குதான் பஸ் ஸ்டாண்டூ
கைய நீட்டின இடத்துல
பஸ் நிக்கணும் ஏன்னா?
இது எங்க ஊரு பஸ்.
சொன்னாரு
டீசலும் – நேரமும் உங்களுது
பார்த்து ஓட்டுங்க…
சொன்னாரு.

"பஸ் புதுசு அசிங்கமாக்காதீங்க
கடலத் தோலை வெளியில போடு"
சொன்னாரு கண்டக்டர்.

வெத்தலய போட்டு
எச்சிலை வெளியில துப்ப
தொப்புன்னு
பின்ன குந்தியிருந்த
சலவைச் சட்டையில் வுழ
"ஏண்டா…கலப்பை
மம்முட்டி… கோடாரி
நாகரிகந் தெரியாதவனுவோ…"
சுருங்களில்
தலைவர் வூட்டுல
பஞ்சாயத்து.

பஸ் நடுக்கத்தோட வந்திச்சு
"ஏய்யா கண்டெக்டர்
வெளியில துப்ப சொன்னியே
எப்படி உள்ளே வந்திச்சு?"

ஊர் இரண்டாச்சு
தலைவர் கேட்டாரு
இரண்டு பஸ்

முடியாதாம்
முடியாதா?
யாருக்கும் வேணாம்
தீட்டுப் பட்ட பஸ்,
எரிஞ்சது…எலும்புக்கூடா
ஆமாம்… பஸ் என்ன சாதி?

தலைவர் காருலதான் போவாரு
ஊருதான் நடந்து போவுது.-ராஜ்கவி
"படகென்பது துடுப்பையும் சேர்த்து"

No comments:

Post a Comment