Monday, September 24, 2012

கவிதை இறகு - புரட்டாசி


இது ‘கின்லே’, என்னமோ ஈஸியா கேக்குற!

விரிந்து கிடக்கும்
தண்டவாள உதடுகளுக்கிடையே
ரயில் பெட்டிகள் பேசிக் கொள்ளும் மொழியின்
அர்த்தம் தேடி அழைந்தது மனது.

திசுக்களால் ஆன
பாராளுமன்ற வாதிகளின்  இதழ்களில் இருந்து
வெளிவரும் பட்ஜெட் உரையை விட
இரும்பு இதழ்களிலிருந்து பெறப்படும்

ரயில் பயணத்தின் ஓசைகள்
மனதுக்கு இதமானவை.
கூடவே ரயிலில்
பயணம் செய்தவர்களின் குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்த் திசைதிருப்பியது
என்னை.

கொடுத்த காசுக்கு இடம்பிடிக்கத் தெரியாது
குத்துக்காலிட்டு வழியில் கிடந்த பெரியவர்
தயங்கித் தயங்கி
இருக்கையிலிருந்தவரிடம் இறைஞ்சினா.

“கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க”
இரட்டுற மொழிதலில் பதில்வந்தது….

“இது பாட்டில் தண்ணிய்யா”

உள்ளுறை உவமம் அறியாப் பெரியவர்
“பாட்டில் தண்ணியா பரவாயில்லை
கொடுங்க”
என ஆவலாய்க் கை நீட்ட

“பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கின
பாட்டில் தண்ணிய்யா
என்னமோ ஈசியா கேக்குற!”

ஈரப்பசையற்ற வார்த்தைகள் எதிர்பாய
பீறிட்டு வந்த பெரியவரின் தாகம்
தன்மானத்தோடு தொண்டைக் குழியிலேயே
தற்கொலையானது.

தண்ணீரால் ஒரு மனிதனின் இதயத்தை
இரும்பாக்க முடியும் என்ற நசவாதத்தைக்
கண்ட எனக்கு
சில இரும்பு இதயங்களை
அவலம் தாங்காது அலறும் பெட்டியின்
அர்த்தம் புரிந்தது அப்போது.

-துரை.சண்முகம்.

No comments:

Post a Comment