Thursday, September 27, 2012

முடியுமா மிஸ்?

தாமதமாக வந்ததற்கு
மன்னிக்க வேண்டும் மிஸ்
நடந்ததை கேளுங்கள் - பிறகு
தண்டனை தாருங்கள்

புத்தகப்பை சுமையுடன்
ஊர்ந்து வந்தேன் மிஸ்
பனியில் குளித்த புற்களில்
தூக்கம் க்லைந்த பட்டுப்பூச்சிகள்
ஓட்டப்பந்தயம் நடத்தின மிஸ்

அசிங்கமாய் புத்தகத்தில் வரைந்திருந்த
அழகான வண்ணத்துப்பூச்சி
கையில் வந்தமர்ந்து
கண்ணை உருட்டி உருட்டி
கூடப் பறக்க அழைத்தது என்னை மிஸ்

புத்தகப்பை நசுக்கிக் கீழே
விழுந்து காயமாச்சு மிஸ்
குட்டி அணில் எட்டி நின்று
கண்ணாமூச்சி ஆடியது
சிட்டுக்குருவியும் என்னைப் பார்த்து
வாய்ப்பாட்டு பாடியது மிஸ்

காக்கா கூட கரைந்து கரைந்து
கதைகள் சொன்னது மிஸ்
உங்கள் தண்டனைக்குப் பயந்து
ஊர்ந்த என்னை எழுந்து நடக்க
எறும்புகள் சொன்னது மிஸ்

இவற்றையெல்லாம்
படித்தது எந்த பள்ளிக்கூடம்
என்று கேட்டேன் மிஸ்
பார்த்து கைகொட்டிச் சிரித்தன
பள்ளிக்கூடம் கேள்வி பதில்
பரீட்சை அடி உதை கூட
இல்லாமல் படிக்க முடியுமா மிஸ்?


-உதயசங்கர்

No comments:

Post a Comment