Monday, September 7, 2009

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து....

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே -

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
-சேரன்.
இரண்டாவது சூரிய உதயம்.
நாள்
மூங்கில்கள் நெரியும் கரை
மஞ்சளாய் நெளிகிற நதி
அக் கரையருகே நீ.....

எனது புரிதல் நிகழாதென்று
உனக்குத் தெரிந்தும்
உனது மொழியில்
உரத்துச் சொல்கிறாய்.
எனக்கு,
எனது மொழியில் தான்
பேச இயலும்.
உனக்குக் கோபம் வருகிறது
நான் என்ன செய்ய?

மீண்டும் மீண்டும்
உனது மொழியில் கடிதம் எழுதுவாய்,
சிரமம் எடுத்துப்
புரிந்து கொள்வதற்கான
குறைந்த பட்ச நேசமும் அற்றுப் போயிற்று;
இப் போதைக்கு நட்டம் எனக்குத்தான்
எனினும்,
நான் அவற்றை அடுப்பில்
போடுகிறேன்;
கிழித்தே எறிவேன்!

இனி -
அவர்கள், எனது மக்களும்
அதைத்தான் செய்வார்கள்.

காற்று வீசுகையில்
மூங்கில்கள் நெரியும் கரையில்
நெருப்புப் பற்றும்
பிறகு,
உனது வீட்டிற்கும் பரவும்.
-சேரன்
"இரண்டாவது சூரிய உதயம்"
எனது நிலம்
சிறகுவலை விரித்த பரவைக் கடல்.
மேலே மூச்செறியும் காற்று
கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை
விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம்
கரை தெரிகிறது,
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்.

அலையும், எஞ்சின் இரையும்பொழுது
சிதறும் துளியும்......
ஒன்றரை மணி நேரம்
எப்படி முடிந்ததாம்?

பிறகு, மணல் நிமிர்ந்த வெளி
அதனுள் புதைந்த பனைகள்,
ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக்
கன்னி மணல் மீது தலைநீட்டும்...
மணலோ,
கண்ணாடி விதையிட்டுச்
சூரியன் போய்க் குடியிருந்த
பொன்னின் துகள்....
அதன் கீழ் -
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக, என்முன்னோர் நடந்த
நிலப்பரப்பு.
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது.

துயிலாது, இந்த அலைகரையில்
நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகின்றதைப் பார்த்திரங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளி பிளந்து
கரை சேரும் நாவாய்க்குக்
காத்திருந்த இன்னொருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை, அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலை காற்றாடும் வெளியின்
மண் மூடிய சுவடுகளில்,
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு செய்தி;

நூறுநூறாயிரம் தோள்களின்மீது
ஏறி நின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன் மேல் எழுகிற அலைகளை மீறி
அதனைக் கொண்டு போய்,
எங்கும் ஒல்லிக்கிறது காற்று

"எனது நிலம்
எனது நிலம்"
-சேரன்.
இரண்டாவது சூரிய உதயம்.

No comments:

Post a Comment