Saturday, September 12, 2009

ஆதலால் அலறுகிறான்.....

நீ நிரம்பி வழியும் கடலின்
கரையொதுங்கிய சிறு தாவரமாய்
அலைவுறுகின்றேன்

ஓராயிரம் ஓங்கரிப்புகளுடைய
உன் அன்பின் அடிவாரத்தில்
காலூன்றி களித்திருந்த நாட்களில்
நீ கரைந்த உன்னில்
பருவம் பருவமாய் மூழ்கி
காதலின் முத்துகளைச் சேமிக்கிறேன்

குளிரும் சுழலும் உள்குமைந்து
உன்னை உருமாற்றிய கணத்திலும்
அலை இதழ்களால் என்னை
முத்தமிட்டுச் சென்றிருக்கிறாய்

உன்னையும்
நுரைத்துப் பொங்கும் காதலையும்
இழத்தல் என்பது
ஒப்பீடுகளற்றது என்னும் தருணத்தில்
காலத்தின் நங்கூரம்
என் வேர்களைப் பறிக்கிறது

உன்னிலிருந்து கிளம்பி
உன்னிலேயே பயணித்து
உன் கரையிலேயே ஒதுங்கிய
என் காதலின் பெருவாழ்வு
இன்னொரு முறை வாய்க்கட்டும்

-சுகிர்தராணி.
காதலர் தினத்தன்று
காதலைச் சொல்லவில்லை என்று
குறுஞ்செய்தியில் கோபிக்கிறாய்.
உன்னிடம் காதலைத் தவிர
வேறு எதையுமே
சொன்னதில்லையே இதுவரைக்கும்.
-முகுந்த் நாகராஜன்.
கூச்சத்தின் புதருக்குள் ஒளிந்து கிடக்கிற
குழிமுயல் அவன்
அள்ளி அணைத்துக்கொள்

பெருமழையில் நனைந்து நடுங்கும்
சிறு ஆடு அவன்
விரல்களால் வெயில் போர்த்து

கனவு வாகனங்கள் மிகுந்த சாலையில்
நினைவு தப்பிய பூனை அவன்
ஒளிபாயும் கண்களால் வழிகாட்டு

அருகாமை வீடுகளின் கறிச்சோறு ஞாயிறுகளில்
தனியே பசித்திருக்கும் நாய்க்குட்டி அவன்
ஒரு கவளம் அன்பெடுத்து ஊட்டு

இல்லையென்றால்
ஒரு சிங்கமென அவன் குகைக்குள் வா
இரையாகப் போட உள்ளங்கையில்
இதயம் சுமந்து காத்திருக்கிறான் பாவி மகன்.

-முருகன்.ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் போதாது காதலுக்கு..
நிலா வேண்டும், மழைவேண்டும்,
மீன் வேண்டும், காடு வேண்டும்,
தும்பி வேண்டும், மழலை வேண்டும்,
மண்புழு வேண்டும்,
கவிதை வேண்டும்..

-பழனிபாரதி.
தொலைபேசியில் பேச்சென்ன?
பாட்டே பாடு
பக்கம் பக்கமாய்
கடிதம் எழுது
பழயதானாலும் இருக்கட்டும்
உன் புகைப்படத்தை அனுப்பு

நேரில் வராதே
நானும் அப்படியே
முடியாது என்னால்
இன்னுமொரு முறை
உன் பிரிவை தாங்க.
-தமிழ்பரிதி. விடை தரமுடியாது
என்னால்
விழிகளில் என்னை
கொண்டு
செல்.
-ஆனந்தி.

No comments:

Post a Comment