Saturday, September 12, 2009

ஒரு துண்டு வானம்

தேவதைகளை சந்தித்ததில்லை
என்று பொய் சொல்ல விரும்பவில்லை
வந்திருக்கிறார்கள்
வந்து வெறுமனே
வணக்கம் சொல்லிப் போய்விடுவார்கள்
- மு.மேத்தா.
செவலையெனும் சித்தப்பா!

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.
- சிவராஜ்.
எரியாமல் இருப்பதால்
எனக்குள் நெருப்பில்லை
என்றா நினைகிறாய்?

-தமிழ் பரிதி.
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
அபயம் அபயம் என்றாலும்

நழுவி பின்னால் சென்று ஒரு
வார்த்தை மாற்றம் செய்திடுமோ?
அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
-உமர் கய்யாம்
ருபாயத்
எறிந்ததென்னவோ
ஒரு கல்தான்.
அதுவும் ஒரே முறைதான்.
தரை தொட்டுவிட்டதா
தெரியவில்லை.

அது கிளப்பிய
வட்ட வட்ட அலைகள்
விரிந்துகொண்டேயிருக்கிறது

-ச.முத்துவேல்
சலனமற்று இருத்தலின் பொழுது
ஒரிரு இலையசைவு
அணிலுக்கும் ஓணாணுக்குமானது.

ஆடலாயும்,
குரங்குகள் மீதேறித் தாவ‌
சில கிளைகளினசைவாயும்,
இருக்கும் அனைத்தும் சுழன்றாட
ஒத்திசைத்தே தென்றலாயும்,
விட்டு விட்டு வெறும்
அதிர்வையும் சப்தத்துடன்
எதிர்கொண்டு
குலுங்கிக் குலுங்கித் தவிக்கையில்
மனிதனால்
வெட்டப்படுவதாயும்
நிற்கிறது மரம்.
- க்ருஷாங்கினி.
ஒரு இரவைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்
-ஸ்ரீநேசன்.
ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்
-பாலைநிலவன்.
மலர்கள் தவிர்த்து
நதியிடம் எந்த உரிமையும் இல்லை
ஒரு பட்டாம் பூச்சிக்கு...

மீன் கொத்திக்கன்றி
பட்டாம்பூச்சிக்குத் தருவதற்கு
எதுவுமில்லை நதிக்கும்...

சுழித்தோடும் கண்ணாடியில்
மௌனம் பார்த்துக் கொள்ளும்
பட்டாம் பூச்சிக்கு
அப்படியென்ன சந்தோசம் இருந்துவிடக்கூடும் ...

நதிக்கும்
பட்டம் பூச்சிக்குமான உறவில்
நமக்கென்ன வேலை...
- கவிதா பாரதி

No comments:

Post a Comment