Saturday, September 12, 2009

சிறுமியின் பிரார்த்தனை

வளர்ப்பு நாயின் சுகவீனத்தால்
கவலை கொள்ளும்
சிறுமியின் பிரார்த்தனை
கடவுளுடைய இருப்பிற்கான
பரிசோதனையாய் மாறுகிறது...

நாயின் மரணம் சம்பவித்தவேளையில்
உருளும் கண்ணீர் துளியில்
தோல்வியை ஒப்புக்கொண்டபடி கரைகிறது
சிறுமியின் மனதிலிருந்து
கடவுளெனும் கற்பிதம்
- கரிகாலன்.
ஆறாவது நிலம்
.அந்தச் சின்னக் கல்லை மெதுவாக,
உதைத்து உதைத்து முன்னேற்றி,
தன்கூடவே பள்ளி வரை
அழைத்துக் கொண்டு போகும் காரியத்தில்
கவனமாக இருந்தவள்,
எதிரே வந்த தெரு நாயைக்
கொஞ்சம் தாமதமாகத்தான்
கண்டு கொண்டாள்.


அமைதியான அந்த நாய்க்குப்
பயந்து விலகியபோது,
சின்னக் கன்றுக்குட்டி ஒன்று
பின்னாலிருந்து ஒடி வந்து,
அவளைச் சற்றே உரசிச் சென்றது
கூட்டிக் கொண்டு வந்த கல்லை
அப்படியே விட்டுவிட்டு
விரைந்து நடந்தாள்


முகத்தில் ஆர்வம் பொங்க
இந்தச் சம்பவத்தைத் தன்
தோழிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல
அவளுக்கு ஒரு பீரியடு போதுமோ,
இரண்டு பீரியடு ஆகுமோ.
-முகுந்த் நாகராஜன்.
அருகே வரும் வரை
பின்னாலிருந்து
தாண்டும் வரை
காலடியில்

தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்

திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலிசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளிரென மீளும் போது
தன்னிச்சையாய் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோஷ வெளிச்சம்
காணாமலாக்கும்
கவலையின் நிழல்களை...
- கலாப்ரியா.
வீதி விளக்குகள்.

குழந்தை என்னிடம் கேட்டது
மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
இல்லை என்றேன் நான்
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்
சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்
காலை நேரத்துக் கல்லறையைப் போல
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்
குழந்தை மறுபடியும் கேட்டது
உனக்கு எப்படித் தெரியும் அது
இறந்து போனாலன்றி?
-பிரெய்ன் டர்னர் (தமிழில்: எஸ். பாபு).
ஆளரவம்
ஓய்ந்தவொரு தெருவில்
பின்னிரவில்
மூன்று சக்கர
சைக்கிள் பழகும்
அச்சிறுவனின் முகத்தில்தான்
எத்தனை குதூகலம்.
இரண்டு கால்களும் செயலிழந்த
அச்சிறுவனை அமர்த்தி
சைக்கிளைத் தள்ளும்
அம்மாவின் சிரிப்பில்தான்
ஏதோ ஒரு ஊனம்.
-ச.முத்துவேல்.சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-நா.விச்வநாதன்.

No comments:

Post a Comment