Saturday, August 15, 2009

மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்...

பின்னரும் நான் வந்தேன்,
நீ வந்திருக்கவில்லை
காத்திருந்தேன்...
அன்றைக்கு நீ வரவேயில்லை,
அப்புறம்
சுவாலை விட்டெரிகிற தீயொடு
தென்திசை நாட்கள் பெயர்ந்தன,
காலம் தாழ்த்தி
தெருவோரம் நாய் முகரக் கிடந்த
உன் மரணம் செவிப்பட்டது நண்ப,
துக்கமாய் சிரிக்கும் உன் முகம் நினைவில் வர
தொண்டை கட்டிப் போயிற்று...
எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே
”விதி” என்றாகிவிட்ட சுதந்திரத்துடன்
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்

-பா.அகிலன்
1990
நேற்று
அங்கும் இங்கும் பலர்
கொண்டுசெல்லப் பட்டனர்:
உனக்கும் எனக்குங்கூட
இது போல் நிகழலாம்.
திரும்பிவருவோமா?
மறுபடியும் நாளை
சூரியனைக்காண்போமா?
ஒன்றும் நிச்சயமில்லை,
எமதிருப்பு
'அவர்களின்' விருப்பில்

-அறியப்படாதவர்கள் நினைவாக...!
அ.யேசுராசா.

சொந்த நாட்டில்
அகதியாக
பதிவு செய்து கொண்டாயிற்று!

அடிக்கடி
சுற்றி வளைத்து
அடையாள அட்டை கேட்கப்படுகிறது.
சொந்த நாட்டில் வாழ்வதற்கு
உத்தரவாதமா அடையாள அட்டை?
வீதிக்கு வரும் போதும்,
தோள் கோர்த்துக்
காதலியுடன்-
சல்லாபிக்கும் போதும்
நடு இரவில்
மனைவியுடன் உறவு
கொள்ளும் போதும்
பத்திரப்படுத்த வேண்டியே உள்ளது
ஒரு அடையாளத்திற்காக...

ஷெல் விழும்; குண்டு தாக்கும்...
அடையாளம் காண கவனம் தேவை!
தொலைந்து விடாதே!
நண்பன் சொன்னான்.

'நண்பனே எனக்கு
உயிர் வாழ்வதற்கு
உத்தரவாதம் தா"
என்ற போது - ஒரு
கைக்குண்டைத்
தந்து சென்றான்!

-இசைக்குள் அடங்காத பாடல்கள்
முல்லை அமுதன்
.

No comments:

Post a Comment