Saturday, August 15, 2009

குருதிப்புனல்

குருதிப்புனல்
-இந்திரா பார்த்தசாரதி
இந்திரா பார்த்தசாரதி நாவல்களை படித்ததுண்டா? நாவல் எழுதுவது என்பது வேறு,வாழ்க்கையை எழுதுவது என்பது வேறு. இந்திரா பார்த்தசாரதி எழுதிய நூல்களை படியுங்கள்.வாழ்கையை மட்டுமல்லாமல் தமிழை வைத்துக்கொண்டு சடு குடு விளையாடிஇருப்பார். இ.பா வின் எழுத்துக்களுக்கு அடிமையாவீர்கள். குருதிப்புனல் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல்.

வெண்மணி கொடுமைகள் அனைவருக்கும் தெரியும்.அதை பின்புலனாக வைத்துக்கொண்டு எழுதிஇருக்கும் நாவல் குருதிப்புனல்.இ.பா வின் எழுத்துக்கள் மந்திர சுழலாய் மாறி உங்களை உள் இழுத்துகொள்ளும்.

சிவா என்ற சமூகவியல் படித்தவர் தன் நண்பன் கோபால் என்பவரை பார்க்க வெண்மணிக்கு வருகிறார்.கோபால் வெண்மணியில் தங்கி அங்குள்ள விவசாய கூலிகளுக்கு அதரவாக போராட்டம் நடத்துபவர்.இருவரும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.அவர்கள் சந்திக்கும் ஆபத்துக்கள் மற்றும் போராட்டங்கள் இவைதான் குருதிப்புனல்.
எளிதாக சொல்லிவிட முடிந்தாலும் விவரிப்பது எளிதல்ல. தமிழ் சமுகத்தின் அதனை அறியாமைகளையும் குருதிப்புனல் கேள்விகள்ளாக்குகிறது.

"என்ன பேசாம இருக்கீங்க.உங்க அபிப்பிராயம் என்ன? என்றார் டிரைவர் மறுபடியும் சிவாவிடம்.

"சொல்லப்போனா ஒரு அபிப்ராயமும் இல்லே...நீங்க சொல்லுறதை கேட்டுகிறேன்" என்றான் சிவா .
"உங்களுக்கு நம்பிக்கை இருக்குதில்லே.அதை முதல்லே சொலுங்கோ..."

டில்லியிலிருந்து புறப்படும்போது,திருவாரூர் பஸ்ஸில் தத்துவபூர்வமான தன் லட்சியங்கள் விவாதத்துக்கு உள்ளாகக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தனக்கு நம்பிக்கை கிடையாது என்றால்,இது டிரைவருக்கு ஏமாற்றத்தை தரலாம். தான் விபூதி பூசிக்கொண்டது வேசமா என்ற பிரச்னை.

"நம்பிக்கை உண்டுங்கிறதோ,இல்லங்கிறதோ ஒவ்வொருத்தருடைய அந்தரங்கமான விஷயம்.மத்தவங்களை நம்ப வைக்கிறதுக்காக,நம்பிக்கை உண்டு இல்லேன்னு சொல்லுறதுக்கு நான் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கலே..."என்றான் சிவா .

டிரைவருக்கு அவன் சொன்னது புரியவில்லை.இதற்குமேல் அவனை தொடர்ந்து கேள்வி கேட்க விரும்பவில்லை .

ஒரு மைதானத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.போலீஸ்காரர்கள் நிறைய இருந்தார்கள்.ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்."இந்நாட்டில் குழப்பம் உண்டாக்குவதற்காகவே, நம் தலைவர் ஆட்சியில் அமைதி நங்கை புன்முறுவல் செய்யக்கூடாது என்பதற்காகவே,பஞ்சத்தை மஞ்சத்துக்கு அழைக்க வேண்டுமென்பதற்காகவே..."தலையில்லா முண்டங்கள் பவனி வருவது போல்,வார்த்தைகள் அணிவகுத்து வந்தன.கூட்டத்திலிருந்து ஒருவனை சிவா கேட்டான்:"இது என்ன கூட்டம்?"

பேசிக்கொண்டிருந்தவர் யாரென்று அவன் மிகவும் பயபக்தியோடு சொன்னான்.சிவாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.இந்தச் சொற்களா,தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று வருகின்றன? தமிழர்கள் அனுதாபத்துக்குரியவர்கள்தாம்,சந்தேகமேஇல்லை. வார்த்தைகளைக் கொண்டே இவர்களை நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்திவிடலாம். தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் இப்போது எஞ்சியிருப்பது ஒன்று - அதுதான் சத்தம்! யாருடைய குரல் உரக்க ஒலிக்கிறதோ அவனே நட்டாம்மைக்காரன்."சப்த வலிமையுடையது எஞ்சும் "-புதிய பரிணாம தத்துவம்......

...பொய்சாட்சி சொல்வதும் தமிழ்நாட்டுக்கு புதிய தொழிலல்ல." பொய்க் கரியாளரையும் புறங் கூற்றாளரையும்" தண்டித்த பூதம் ஒன்று பூம்புகாரில் இருந்திருக்கிறது.கால வேறுபாட்டினால் அந்தப் பூதமே இப்போது பொய்சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக ஆகியிருக்கலாம்....

"அரசியல்,தமிழ்நாட்டைக் குட்டிசுவராக்கிடுதுன்னு என்னோட அபிப்பிராயம் ..." என்றான் சிவா.

"தமிழ்நாடு,அரசியலை குட்டிசுவராக்கியிருக்கலாம் " என்றான் கோபால்.

"என்ன சொல்றிங்க நீங்க?"என்றார் ராமையா.

"நாட்டில இருக்கிற ஜனங்களுக்கு ஏத்தமாதிரித்தான் அரசியலும் இருக்கும்.அரசியல் ஜனங்களை கெடுத்துடுசின்னு சொல்லுறதை காட்டிலும்,ஜனங்க அரசியல கெடுத்துட்டாங்கங்கிறது சரியா எனக்கு படுது" என்றான் கோபால்.

"ஜனங்க எப்படி அரசியலை கெடுக்கமுடியும்?கெடுக்கிறது தலைவர்கள் ". என்றார் . ராமையா.

"ஜனங்க இவங்களை ஏன் தலைவர்களாக ஏத்துக்ககொல்றாங்க? அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரிதானே தலைவர்கள் கிடைகிறாங்க?"என்றான் கோபால்.

"உங்க மாதிரி நான் படிச்சவன் இல்லே...ஆனா அடிப்படையா ஒண்ணை மறந்துட்டு நீங்க இப்படிப் பேசறிங்க.ஜனங்களுக்கு கல்வியை கொடுக்கமே,அவங்க முட்டாளுங்க,அவங்க யோக்கியதைக்கு தகுந்தமாதிரித்தான் தலைவருங்க கிடைபாங்கனு சொல்லுறிங்களே ,இது உங்களுக்கு சரியாவா படுது."

கோபால் பதில் கூறாமல் திண்டாடுவதை சிவா கவனித்தான்.ராமையா சொல்லுவது சரிதான்.கல்வியறிவு ஜனங்களுக்கு ஏற்படவில்லை என்பதைவிட,கல்வியறிவு உண்மையைக் காட்டிலும் இன்னமும் ஆபத்தான அரைகுறைப் படிப்பைக் கொடுத்து மக்களை கெடுத்துவிடுகிறார்கள்.இந்த அரைகுறைப் படிப்பு நிலையில்தான்,அரசியல் தலைவர்களை தெய்வங்களாக்கி வழிபடும் அசட்டுத்தனம் ஏற்படுகிறது?


தற்கால அரசியலை பற்றி கேள்விகளை எழுப்புவதோடு,அவற்றின் விடைகளை தீர்மானிக்கும் வழிகளையும் படிக்கும் வாசகனின் முடிவிற்கே விட்டுவிடுகிறது.தமிழின் மிக முக்கியமான நாவல் குருதிப்புனல்.

கிழக்கு பதிப்பகம்.
#16-கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர்.
சென்னை-601.
விலை-ரூ90/-

No comments:

Post a Comment