Saturday, August 15, 2009

கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்

என்னை மீண்டும்
இசைக்க வைக்க வந்துள்ளாய்;
உன்னை வரவேற்கிறேன்.
நான் மகரயாழ்
உன் மணிக்கரம்
தீண்டினால் போதும்

என்னால்
உனக்கு பெருமை வரும்;
உன்னால்
எனக்கு வாழ்வு வரும்.

உன்னை வரவேற்கிறேன்.

உனக்கென்ன-
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா,
வைகோலாய்ப்
பற்றி எரிகிறது.

உனக்கென்ன-
ஒரு புன்னகையைப்
உதிர்த்துவிட்டுப் போகிறாய்...
என் உயிரல்லவா,
மெழுகாய்
உருகி விழுகிறது.

உனக்கென்ன-
போகிறாய்...போகிறாய்...
என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது.

"மார்கழி மாதத்தில்
என் பிறந்த நாள் வரப்போகிறது"
என்று கூறிவிட்டுப் போகிறாய்.

உன் பிறந்ததினப் பரிசாகப்
ஒரு மானையோ மயிலையோ
கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்

என் பரிசு
உயிருள்ள பரிசாக
இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்
அடுத்த வினாடியே
அப்படிக் கொடுத்தால்
நீ என் மீது பொழியும்
அன்பு வெள்ளத்தில்
ஒரு துளியை
அந்த உயிரின் மீது
சிந்தி விடுவாயோ
என்று பயப்படுகிறேன்.

நான்
வெறுங்கையோடு வரத்
தீர்மானிக்கிறேன்.
நான் உனக்கு பூச் சூட்டுகிறேன்
நீ சிரிகிறாய்.

புதிதாய்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல்...

புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்.

நான் உனக்கு பூச் சூட்டுகிறேன்

பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?
-கவிஞர் மீரா.

No comments:

Post a Comment