Monday, August 24, 2009

இதுதான் வாழ்வென்றால்...

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான்
கேட்கவுமில்லை, அவர்
சொல்லவுமில்லை
- நகுலன்.
நீங்கள்
நிலைத்திருக்க வேண்டுமெனில்
என்றென்றும் நீங்கள்
நினைவுகூரப்படவேண்டுமெனில்
ஒரேயொரு துரோகத்தைச் செய்யுங்கள்.

-முபாரக்.
மஞ்சள் வெய்யில்
பூ
காத‌ல்
ம‌ழை
ப‌ற‌வை
நீ
அல்ல‌து
நான
என்று எளிதாக‌
சொல்ல‌ முடிவ‌தில்லை.
ம‌ர‌ண‌த்தை.
-வா.மணிகண்டன்.
பாதையில் குடிசை
பளிங்குக் கோயில்
பாருக்குள்ளே நல்ல நாடு?

கண்ணகியா?
மாதவியா?
கற்பிழந்தவன் கோவலன்
-ம.ஞானசேகரன்.
வேறு
உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
- நகுலன்.
அப்பாவுக்கு அறுபதனாயிரம்
மனைவிகள் இருந்தும்
சந்தேகம் இல்லை,
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.
-கபிலன்.
தூரத்து அப்பா
குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.
-எம்.சுதா முத்துலட்சுமி.
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.
- கல்யாண்ஜி
சுருதி
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

- நகுலன்.
வான பரியந்தம்
உயர்ந்த கோபுரத்தில்
ஏறி இல்லை என
கை விரித்து நிற்கிறது
சிலுவை.
-ராஜ சுந்தரராஜன்.
துண்டிப்பு

மழெ இல்லெ தண்ணி இல்லெ.
ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்தும் இல்லெ

அடைக்கலாங் குருவிக்கு
கூடு கட்ட
என் வீடு சரிப்படலே

நான் ஒண்டியாதான் இருக்கேன்
இப்பவும்.
-ராஜ சுந்தரராஜன்.
அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
-கலாப்ரியா
எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த திராட்சை செடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
எனது பால்கணியில்!
-தென்றல்.
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி
-ஆத்மாநாம்.

No comments:

Post a Comment