Sunday, August 9, 2009

பிரியமுடன்....

இராதை கண்ணனுக்கு எழுதிய கடிதம்

கோகுலம்,
மழைக்காலம்.

வாவிகள் நிரம்பிவிட்டன
வெள்ளிகள் முளைக்காத
இருண்ட இரவுகளில்
காத்திருக்கிறேன் நான் உனக்காக

எங்கோ தொலைதூர நகரங்களின்
தொன்மையான இரகசியங்களிற்கு
அழைப்பது போன்ற உன் விழிகள்
வெகு தொலைவில் இருந்தன
என்னை விட்டு

புதைந்திருக்கிறது மௌனத்துள் மலை
இருக்கிறேன் நான் துயராய்
அசைகிறது சலனமின்றி நதி
காற்றில் துகளாய்ப் போனேன்

இங்கே,
என் கண்ணா
சற்றுக் கேள் இதை
மல்லிகைச் சரம் போன்றது என் இதயம்
கசக்கிட வேண்டாம் அதை.

ராதா
பிரியமுடன்

-பா.அகிலன்.

மற்றுமொரு மழைநாளில்..
உன் ஞாபகம் எதுவுமின்றி
தேநீர் பருகிக்கொண்டிருந்தேன்.

உன் பெயரின் சாயலிலொரு
பெயரை..
யாரோ அழைத்துபோக..

நீ வசித்த தெருவை
கடந்து போனதென்
ஒற்றை நினைவு.
-யாரோ.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன் இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை.
-மனுஷ்ய புத்திரன்.
நீர் சொட்டி நிற்கும் மரங்களில்
ஒரு மரம்
மரத்திலிருந்து புறப்பட்ட பறவைகளில்
ஒரு பறவை
பறவை அசைத்த சிறகுகளில்
ஒரு சிறகு
சிறகுகளிலிருந்து உதிர்ந்த இறகுகளில்
ஒரு இறகு
இறகு பார்த்த சிலரில்
ஒரு கவிஞன்
கவிஞன் எழுதிய கவிதைகளில்
ஒரு கவிதை
அந்தக் கவிதையில்
ஒரு வரி
-நந்தா.நீ பேசாத வார்த்தைகள்
மழைக்கால பூச்சிகளைப் போல்
என்னை சுற்றி சுற்றி...

நன் உணராத அன்பு
உன் விழி நீரைப் போல
உள்ளே தேங்கி தேங்கி

நான் காணாத உலகம்
நீ விட்டுச்சென்ற நினைவுகளில்
கொஞ்சம் தயங்கி தயங்கி....
-தி.சந்தானம்.

No comments:

Post a Comment