Friday, August 14, 2009

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

"உனது பிரியங்களின்
அருகாமையில் அமைதியுறும்
எனது பெரும் துயரங்கள்"
காதலின் தேவையை சொல்லிவிட இதைவிட பொருத்தமான வார்த்தைகள் ஏது? சல்மா தனது கவிதைகள் மூலம் வாழ்க்கை என்னும் இருளின் கதவுகளை படார்,படார் என்று திறந்துகொண்டே செல்கிறார் .நமக்குதான் கண்கள் கூசுகிறது. சல்மாவின் கவிதைகள் உலகின் சிகரங்களை எட்டும்.

இவரது "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதை தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

விலகி போகும் வாழ்க்கை

இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேருகிறது

நேற்றும்
அதற்கு முன்பும் கூட

நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்து திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தை கனக்க வைக்கிறது
இப்படியே
நம் நண்பர்களை
நினைவுகளை
சிந்தனைகளை

தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை
அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவும்
பத்திரிக்கை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்து போக நினைக்கிறேன்

இந்த வாசலில்
மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனாலும் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதுற்குமான
மலர்ச் செண்டுகளாய்
அனுப்பபடுகின்றன
இந்த வாழ்வை...
இன்றைக்கில்லையெனில்
நாளை
நாளையில்லையெனில்
இன்னுமொரு நாள்
இப்படித்தான் தெரியும்
வாழ்வை
நினைவு தெரிந்த நாளிலிருந்து

"ஒரு மாலையும் இன்னொரு மாலையும் "
669 காலச்சுவடு பதிப்பகம்.
கே.பி.சாலை.
நாகர்கோயில்
விலை -40

No comments:

Post a Comment